தமிழ்நாடு செய்திகள்

2025 REWIND : ம.தி.மு.க.-வில் பிளவு - மல்லை சத்யா நீக்கம் - புதிய கட்சி துவக்கம் - 3 TVK - மக்கள் குழப்பம்

Published On 2025-12-24 11:47 IST   |   Update On 2025-12-24 11:47:00 IST
  • டிசம்பர் 18-ந்தேதி அன்று இவர் தனது புதிய கட்சியை இந்தியத் தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்துள்ளார்.
  • ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பலரும் மல்லை சத்யாவின் 'திராவிட வெற்றிக் கழகம்' கட்சியுடன் இணைந்துள்ளனர்.

'அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை... எதிரியும் இல்லை' என்ற பழமொழி உள்ளது. இந்த பழமொழிக்கு ஏற்ப அவ்வப்போது சம்பவங்களும் அரசியலில் நிகழ்கின்றன. இதற்கு இவ்வாண்டு மிகச்சிறந்த சான்றாக மல்லை சத்யா உள்ளார்.

வைகோ என்றால் மல்லை சத்யா, மல்லை சத்யா என்றால் வைகோ என்ற அளவுக்கு ம.தி.மு.க.வில் கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார் மல்லை சத்யா. மாமல்லபுரத்தை சேர்ந்த இவர் ம.தி.மு.க.வில் 1996-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்துள்ளார். 5 சட்டசபை தேர்தல், ஒரு மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

 

மேலும், ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக நீண்ட கால பணியாற்றி உள்ளார். இதனிடையே ம.தி.மு.க. முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்ட வைகோவின் மகன் துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதனால் துரை வைகோ தனது பதவியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். மேலும் மல்லை சத்யாவுக்கு எதிராகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் இருவருக்கும் இடையேயான மோதல் போக்கு மற்றும் வார்த்தை மோதல் நிலவி வந்தது.

இதன் காரணமாக செப்டம்பர் மாதம் 8-ந்தேதி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யாவை நீக்கி வைகோ அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

 

ம.தி.மு.க.விலிருந்து வெளியேறிய பின், 'திராவிட வெற்றிக் கழகம்' (Dravida Vettri Kazhagam - DVK) என்ற புதிய அரசியல் கட்சியை நவம்பர் மாதம் 20-ந்தேதி அன்று மல்லை சத்யா தொடங்கினார். இக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இவர் செயல்படுகிறார். டிசம்பர் 18-ந்தேதி அன்று இவர் தனது புதிய கட்சியை இந்தியத் தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்துள்ளார்.

ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பலரும் மல்லை சத்யாவின் 'திராவிட வெற்றிக் கழகம்' கட்சியுடன் இணைந்துள்ளனர்.

தி.மு.க.வில் அங்கம் வகித்த வைகோ, கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து வெளியேறி ம.தி.மு.க. என்ற புதிய கட்சியை தொடங்கினார். இதே போன்று ம.தி.மு.க.வில் அங்கம் வகித்த மல்லை சத்யா துரை வைகோவுடனான மோதல் போக்கு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் அவர் திராவிட வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

வரும் 2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிட மல்லை சத்யா விருப்பம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. இதற்கு சம்மதம் தெரிவிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

தமிழக அரசியலில் ஒரு எழுத்து பஞ்சாயத்து என்பது நீண்ட காலமாக இருந்து வருகிறது. புதியதாக கட்சி தொடங்குபவர்கள் ஏற்கனவே இருக்கும் பிரபலமான கட்சியின் பெயரில் ஒரு எழுத்தை மட்டும் முன்னே, பின்னே, நடுவிலோ மாற்றியோ அல்லது சேர்த்தோ புதிய கட்சியை தொடங்கி விடுவது காலம் காலமாக நடந்து வருகிறது.

இந்தநிலையில், ம.தி.மு.க.வில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கியிருக்கிற மல்லை சத்யா தனது கட்சிக்கு திராவிட வெற்றிக்கழகம் என்று பெயர் சூட்டியிருக்கிறார். சுருக்கமாக தி.வெ.க., ஆங்கிலத்தில் தமிழ் உச்சரிப்பில் டி.வி.கே. என்று வருகிறது.

விஜய் கட்சியை த.வெ.க., டி.வி.கே. என்று தொண்டர்கள் அழைத்து வரும் நிலையில், மல்லை சத்யாவின் புதிய கட்சியின் பெயர் விஜய் கட்சியினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அரசியலில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக த.வெ.க.வினர் தெரிவிக்கிறார்கள்.

இதற்கெல்லாம் முன்பாக அரசியல் கட்சி தொடங்கிய வேல்முருகனின் கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சியும் த.வா.க. எனவும் ஆங்கிலத்தில் டி.வி.கே. என்று தான் அழைக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழக அரசியலில் 3 டி.வி.கே. தேர்தலில் களம் காண இருப்பது குறிப்பிடத்தக்கது. குழப்பம் மக்களுக்கு தான்.

Tags:    

Similar News