உள்ளூர் செய்திகள்

கொளுத்தும் கோடை வெயில் காரணமாக கோவையில் பம்ப்செட் விற்பனை 25 சதவீதம் அதிகரிப்பு

Published On 2024-04-29 10:14 GMT   |   Update On 2024-04-29 10:14 GMT
  • இந்த ஆண்டு ஜனவரி 2-வது வாரத்திலேயே பம்ப்செட் உற்பத்தி தொடங்கி விட்டது.
  • வெயில் தாக்கம் அதிகம் காணப்படுவதால் விவசாய பயன்பாட்டுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.

கோவை:

தரமான பம்ப்செட் தயாரிப்பில் உலகளவில் கோவை மாவட்ட பம்ப்செட் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் வீடு மற்றும் விவசாய பயன்பாட்டுக்கான பம்ப்செட் தேவை அதிகரித்துள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய பம்ப்செட் தயாரிப்பாளர்கள் கூறியதாவது:-

தேசிய அளவிலான பம்ப்செட் தேவையில் கோவை மாவட்ட தொழில் நிறுவனங்கள் 50 சதவீதத்துக்கும் மேல் பங்களிப்பு கொண்டுள்ளன. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை பம்ப்செட் சீசனாகும். இந்த ஆண்டு ஜனவரி 2-வது வாரத்திலேயே பம்ப்செட் உற்பத்தி தொடங்கி விட்டது. தொடர்ந்து நிலையான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. வெயில் தாக்கம் அதிகம் காணப்படுவதால் விவசாய பயன்பாட்டுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.

வீடுகளில் பயன்படுத்தப்படும் பம்ப்செட் தேவையும் உயர்ந்துள்ளது. கோவை மாவட்டத்தை போல் குஜராத்தில் பம்ப்செட் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டாலும், நாடு முழுவதும் வாடிக்கையாளர்கள் கோவை பம்ப்செட் பொருட்களை வாங்கி அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போதைய நிலவரப்படி விவசாய பம்ப்செட் தேவை 15 சதவீதம் வரையும், வீடுகளுக்கான பம்ப்செட் 10 சதவீதம் வரையும் அதிகரித்துள்ளது. மே மாதத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் பம்ப்செட் தேவை மேலும் உயரும். இந்த ஆண்டு சீசன் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கோவை பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கூறும் போது, கோவையில் உள்ள பெரும்பாலான குறுந்தொழில் நிறுவனங்களில் வீடுகளுக்கு தேவையான பம்ப் செட் பொருட்களை அதிகம் தயாரிக்கப்படுகிறது. தற்போது நிலையான தேவை காணப்படுகிறது. பெரும்பாலான அரசுத்துறைகளில் பெரிய நிறுவனங்களின் பம்ப்செட் பொருட்களே கொள்முதல் செய்யப்படுகிறது. குறுந்தொழில் நிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம் என்றனர்.

Tags:    

Similar News