தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் மத்திய மந்திரி பியூஸ் கோயல்- எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
- லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்தார்.
- மாலை 5 மணிக்கு கவர்னர் மாளிகை சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசுகிறார்.
சென்னை:
தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. இதற்காக அனைத்துக்கட்சிகளும் தயாராகி வருகின்றன.
கூட்டணிகளை உறுதிப்படுத்துவது, தொகுதிகளை அடையாளம் கண்டு கூட்டணி கட்சிகளுடன் பேசுவது போன்ற பணிகள் திரை மறைவில் தொடர்ந்து நடந்து வருகின்றன.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. இந்த தேர்தலில் எப்படியாவது தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்றி வருகிறது.
பீகார் தேர்தல் முடிவு, கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. அந்த வகையில் "மிஷன் தமிழ்நாடு" என்ற திட்டத்துடன் தேர்தலுக்கான வியூகத்தை அமைத்துள்ளது.
ஏற்கனவே தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டா நியமிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரை மாற்றி விட்டு மத்திய மந்திரி பியூஸ்கோயல் தலைமையில் 3 மத்திய மந்திரிகள் அடங்கிய குழுவை பா.ஜ.க. மேலிடம் அமைத்து உள்ளது.
பியூஸ்கோயல், அமித்ஷாவின் வலதுகரமாக இருப்பவர். தேர்தலுக்கான வியூகங்கள் அமைப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். பல மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றிக்கு இவரது வியூகம் காரணமாக அமைந்தது.
ஏற்கனவே பல தேர்தல்களில் தமிழ்நாட்டில் கூட்டணிகளை உருவாக்கியது, கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது போன்ற அனுபவங்கள் அவருக்கு உண்டு.
எனவே தமிழகத்திலும் தேர்தலில் சாதிக்க பியூஸ் கோயல் வியூகம் கை கொடுக்கும் என்று பா.ஜ.க. உறுதியாக கருதுகிறது.
தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ்கோயல் இன்று சென்னை வந்தார்.
அவரை விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முருகன், மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, சக்கரவர்த்தி, பா.ஜ.க. துணைத் தலைவர் கரு.நாகராஜன், டால்பின் ஸ்ரீதர் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.
பின்னர் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயம் சென்றார். அங்கு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள கூட்ட அரங்கில் உயர்மட்ட குழுவினருடன் பியூஸ்கோயல் கலந்து பேசினார். இதில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் தலைவர்கள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் எச்.ராஜா, வானதி சீனிவாசன், மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காலை 10.40 மணி அளவில் தொடங்கிய இந்த கூட்டம் சுமார் 1 மணி நேரம் நடந்தது. தற்போதைய அரசியல் சூழல், தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன என்பது பற்றி அவர்களிடம் விரிவாக கேட்டறிந்தார்.
அதன் பிறகு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்தார்.
இதைத்தொடர்ந்து மதியம் ஒரு மணியளவில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த மத்தியமந்திரி பியூஸ்கோயலை சந்தித்தார். அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனு சாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் வந்து இருந்தனர். தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியை வலுப்படுத்துவது, கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க., அ.ம.மு.க., ஓ.பன்னீர்செல்வம் அணி உள்ளிட்ட கட்சிகளை இணைப்பதற்கான சாத்திய கூறுகள் பற்றி எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் கூட்டணி கட்சி தலைவர்களை சந்திப்பது குறித்து பியூஸ்கோயல் முடிவு செய்வார்.
அதே நேரம் சில சிறு கட்சிகளின் தலைவர்கள் இன்று பியூஸ்கோயலை சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்துவார்கள் என்று தெரிகிறது.
மாலை 5 மணிக்கு கவர்னர் மாளிகை சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசுகிறார். மாலை 6 மணியளவில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
ஏற்கனவே பா.ஜ.க. 80 தொகுதிகளை வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக அடையாளம் கண்டு வைத்து உள்ளது. இதில் இருந்துதான் கூட்டணியில் தொகுதிகளை கேட்கும் என்று கூறப்படுகிறது.
இந்த தொகுதிகளின் நிலவரங்களை பற்றியும் மூத்த நிர்வாகிகளிடம் பியூஸ்கோயல் ஆலோசனை நடத்தினார். மாலையில் கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகளுடன் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஆலோசனை நடத்துகிறார். அதன் பிறகு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
பியூஸ்கோயலின் இன்றைய நிகழ்வுகள் பற்றி பா.ஜ.க. மூத்த நிர்வாகிகளிடம் கேட்ட போது கூறியதாவது:-
பியூஸ்கோயல் தமிழக தேர்தல் பொறுப்பாளராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இன்று சென்னை வந்து முதற்கட்ட ஆலோசனை செய்துள்ளார்.
அடுத்தடுத்து கூட்டணி தொடர்பான நகர்வுகள் சூடுபிடிக்கும். தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்கள் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளில் இடம் பெறும். முக்கியமாக கூட்டணியை பலப்படுத்தும் பணிகளில் பியூஸ்கோயல் ஈடுபடுவார் என்றார்கள்.