பா.ம.க. கவுரவ தலைவருக்கு கடிதம் அனுப்ப அன்புமணிக்கு தகுதி இல்லை- அருள் எம்.எல்.ஏ. பேட்டி
- பா.ம.க. என்ற 46 ஆண்டு கால வரலாற்றுக்கு சொந்தமானவர் டாக்டர் ராமதாஸ்.
- வன்னியர் சங்கமும், பா.ம.க.வும் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது.
திண்டிவனம்:
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தேர்தல் கூட்டணி தொடர்பாக கடலூர், சேலம் உள்ளிட்ட 20 தொகுதி நிர்வாகிகள் கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை நடந்தது. இதில் கவுரவ தலைவர் ஜி.கே. மணி, செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, பா.ம.க.இணைப் பொதுச் செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அருள் நிருபர்களிடம் கூறியதாவது:-
டாக்டர் ராமதாஸ் ஜனநாயக பூர்வமான தலைவர். தேர்தல் வருகிறது. அதனால் மாவட்ட தலைவர், செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்களை அழைத்து கருத்துக்களை கேட்டு வருகிறார்.
பா.ம.க. என்ற 46 ஆண்டு கால வரலாற்றுக்கு சொந்தமானவர் டாக்டர் ராமதாஸ். வன்னியர் சங்கமும், பா.ம.க.வும் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. நேற்று பெய்த மழையில் இன்றைக்கு முளைத்த காளான் அல்ல நாங்கள். பா.ம.க.வை பொறுத்தவரையில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது. 6 இட ஒதுக்கீட்டை பெற்று தந்தவர் ராமதாஸ். மக்கள் பிரச்சனைகளுக்கு போராடி பெற்று தந்தவர். நூற்றாண்டு கால சாதனைக்கு சொந்தக்காரர் அவர்.
பா.மக. தலைவர் பதவி முடிவுற்றது. புதிய தலைவராக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். அன்புமணி செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். அதிலும் சரியாக செயல்படவில்லை என ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கவுரவ தலைவருக்கு கடிதம் அனுப்புவதற்கு அன்புமணிக்கு எந்தவிதமான தகுதியும், உரிமையும் இல்லை என்றார்.