தமிழ்நாடு செய்திகள்

மகளிர் உரிமைத்தொகை வழங்கும்போது, பயிர்களுக்கு இழப்பீடு வழங்க முடியாதா? அரசுக்கு அன்புமணி கேள்வி

Published On 2025-12-23 12:15 IST   |   Update On 2025-12-23 12:15:00 IST
  • 17 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்குவதற்கான திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது.
  • இத்திட்டம் பெண்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பறிக்கும் நோக்குடன் கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னை:

பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காவிரி பாசன மாவட்டங்களில் அக்டோபர் 20, 21 ஆகிய தேதிகளில் பெய்த மழையில் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவை மற்றும் சம்பா பயிர்களும், நவம்பர் இறுதியில் டிட்வா புயலால் பெய்த மழையில் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்களும் சேதமடைந்தன. அரசின் அலட்சியம் காரணமாக கணக்கெடுப்புப் பணிகள் கடந்த 13-ந் தேதி வரை சராசரியாக 60 சதவீதம் மட்டுமே நிறைவடைந்திருந்தன.

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் இரு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இப்போது 17 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்குவதற்கான திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. அந்த வகையில் இத்திட்டம் பெண்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பறிக்கும் நோக்குடன் கொண்டு வரப்பட்டிருக்கும் அப்பட்டமான வாக்குத் திருட்டு முயற்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வாக்குகளைத் திருடும் தி.மு.க.வின் பேராசைக்காகவும், மோசடிக்காகவும் உழவர்களுக்கு இழப்பீடு வழங்காமல் ஏமாற்ற முயன்றால், தி.மு.க. அரசுக்கு எதிராக காவிரி பாசன மாவட்ட மக்கள் கொந்தளிப்பதைத் தவிர்க்க முடியாது. எனவே, பாதிக்கப்பட்ட உழவர்களின் உணர்வுகளையும், துயரத்தையும் அரசு புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News