உள்ளூர் செய்திகள்

மும்முனை மின்சாரம் வழங்க கோரி திருப்பூரில் விவசாயிகள் போராட்டம்

Published On 2024-04-29 09:10 GMT   |   Update On 2024-04-29 09:10 GMT
  • தற்போது முறையாக தண்ணீர் வினியோகம் செய்ய மின்சாரம் இல்லாத தன் காரணமாக பயிர்கள் கருகுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
  • விவசாயிகளிடம் கோரிக்கையை கேட்டு அறிந்த கலெக்டர் கிறிஸ்துராஜ் உடனடியாக மின்வாரிய அலுவலர்களுடன் பேசி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

திருப்பூர்:

திருப்பூர் மின் பகிர்மானம் வட்டம் அவிநாசி, கானூர், கருவலூர், சேவூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த 19-ந்தேதி முதல் விவசாய நிலங்களில் உள்ள மின் இணைப்புகளுக்கு சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்காததாலும், குறைந்த அழுத்த மின்சாரம் வழங்கப்பட்டதாலும் இந்த பகுதியில் பயிரிடப்பட்ட வாழை, தென்னை, கரும்பு, காய்கறி, மரவள்ளி உள்ளிட்ட பயிர்கள் முற்றிலும் கருகி வரும் சூழல் உரு வாகி உள்ளது.

ஏற்கனவே கொடுத்து வரும் மின்சாரம் குறைந்த அழுத்த மின்சாரமாக அதுவும் சீர் இல்லாமல் இருப்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல வகையில் நிதி திரட்டி கடன் பெற்று பயிர் செய்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் தற்போது முறையாக தண்ணீர் வினியோகம் செய்ய மின்சாரம் இல்லாத தன் காரணமாக பயிர்கள் கருகுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே விவசாயிகளின் உரிமை மின்சாரத்தை முறைப்படுத்தி வழங்க வேண்டும், 8 மணி நேரம் வழங்கப்பட்டு வந்த மும்முனை மின்சாரம் தற்போது 2 மணி நேரம் மட்டுமே வழங்கப்படுவதால் எப்போதும் போல் வழங்க வேண்டும், குறைந்த அழுத்தம் மின்சார விநியோகத்தை சீர் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து கலெக்டரிடம் விவசாயிகள் நேரடியாக தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். விவசாயிகளிடம் கோரிக்கையை கேட்டு அறிந்த கலெக்டர் கிறிஸ்துராஜ் உடனடியாக மின்வாரிய அலுவலர்களுடன் பேசி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News