தமிழ்நாடு

முறைகேடு புகார் வருவதால் மணல் குவாரி பணிகளை கவனிக்க 'தனித்துறை' உருவாகிறது- தமிழக அரசு முடிவு

Published On 2024-04-29 09:27 GMT   |   Update On 2024-04-29 09:27 GMT
  • மணல் குவாரி முறைகேடு தொடர்பாக 5 மாவட்ட கலெக்டர்களிடம் ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
  • மணல் குவாரி நடவடிக்கைகளை கையாள தனித்துறையை உருவாக்க நீர்வளத்துறை முன் வந்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் உள்ள பல்வேறு மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்ததை விட அதிகளவில் மணல் அள்ளப்பட்டு சட்ட விரோதமாக பணப் பரிமாற்றங்கள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதையடுத்து திருச்சி, தஞ்சை, அரியலூர், வேலூர் உள்பட 8 மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு சோதனை நடத்தினார்கள். இதில் ரூ.4,730 கோடி அளவுக்கு பல முறைகேடுகள் கண்டறியப்பட்டது.

மணல் குவாரி முறைகேடு தொடர்பாக 5 மாவட்ட கலெக்டர்களிடம் ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து கனிம வளத்துறை அதிகாரிகளை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக கனிம வளத்துறை அதிகாரிகளின் பட்டியலை அமலாக்கத்துறை தயாரித்துள்ளது. இந்த நடவடிக்கை ஒரு புறம் இருக்க, மேற்கொண்டு மணல் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க அரசும் புதிய முயற்சிகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளது. இதற்காக மணல் குவாரி நடவடிக்கைகளை கையாள தனித்துறையை உருவாக்க நீர்வளத்துறை முன் வந்துள்ளது.

இதுகுறித்து அரசு உயர் அதிகாரி கூறியதாவது:-

மணல் விற்பனையில் கடுமையான முறைகேடுகள் ரூ.4,730 கோடி அளவுக்கு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளதால், மணல் குவாரி நடத்துவதற்கு தனித்துறையை அமைத்து அதை நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மணல் குவாரிக்கு தேவையான எந்திரங்கள் எதுவும் அரசிடம் இல்லாததால் தனியார் ஏஜென்சிகள் மூலம் மணலை கிடங்குகளுக்கு ஏற்றி விற்பனை செய்து வந்தனர். மணல் குவாரியில் தனியார் ஒப்பந்ததாரர்களின் போக்குவரத்துக்கு தடை விதிக்கும் நீதிமன்ற உத்தரவை கருத்தில் கொண்டு மணல் குவாரி பணிகளை மேற்கொள்ள தனி துறையை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த புதிய துறைக்கு மணல் குவாரி மற்றும் கண்காணிப்பு கழகம் என்று பெயர் சூட்டப்படலாம். தற்போதுள்ள சுரங்கம் மற்றும் கண்காணிப்பு அலுவலகங்களின் பொறியியல் அமைப்பு அதிகாரிகளின் கீழ் இந்த துறை செயல்படும் என தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News