செய்திகள்

திமுக-காங்கிரஸ் இடையே கூட்டணியை திறம்பட பேசி முடித்த கனிமொழி

Published On 2019-02-21 07:57 GMT   |   Update On 2019-02-21 07:57 GMT
தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு எந்த இழுபறியும் இல்லாமல் மிக எளிதாக நிறைவு பெறுவதற்கு கனிமொழியின் அணுகுமுறையே காரணம் என்று கூறப்படுகிறது. #DMK #Kanimozhi #Congress #RahulGandhi
சென்னை:

பாராளுமன்றத்துக்கு தேர்தல் வரும்போது எல்லாம் தமிழ்நாட்டில் எத்தகைய கூட்டணி அமைகிறது என்பது தேசிய அளவில் உற்றுப் பார்க்கப்படும் ஒன்றாக இருக்கிறது.

உத்தரபிரதேசம், பீகார், மராட்டிய மாநிலங்களைப் போல தமிழ்நாட்டில் வெளியாகும் தேர்தல் முடிவுகளும் மத்தியில் ஆட்சி அமைப்பது யார் என்பதை முடிவு செய்யும் வகையில் உள்ளது. எனவேதான் தமிழகத்தில் பிரதானமாக உள்ள தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளின் ஆதரவை பெற தேசிய கட்சிகள் தாமாக முன் வருவது வழக்கமாக உள்ளது.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வை விட தி.மு.க. தான் தேசிய அளவில் அதிக தடவை கூட்டணி அமைத்து மத்தியில் அதிகாரம் செலுத்தி உள்ளது. அதிலும் காங்கிரஸ் கட்சியுடன்தான் தி.மு.க. அதிக தடவை கூட்டணி அமைத்து இருக்கிறது.

இதற்கு முன்பு 1971, 1980, 2004, மற்றும் 2009 ஆண்டுகளில் நான்கு தடவை காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து உள்ளது. தற்போது 5-வது முறையாக தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி மலர்ந்துள்ளது.

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி முதன் முதலில் ஏற்பட்டபோது அதற்கு அச்சாரம் இட்டவர்கள் தி.மு.க. தலைவர் கருணாநிதியும், அவரது மனசாட்சியாக திகழ்ந்த முரசொலி மாறனும் ஆவார்கள். 1971 மற்றும் 1980-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி அமைத்தபோது டெல்லி மேலிடத்தில் தொகுதி பங்கீடு குறித்தும், தொகுதிகள் ஒதுக்கீடு குறித்தும் தி.மு.க. சார்பில் பேச்சு நடத்தியது முரசொலிமாறன்தான்.

1967-ம் ஆண்டு 2003-ம் ஆண்டு வரை சுமார் 36 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்த முரசொலி மாறன் தி.மு.க.வின் டெல்லி தலைவராக திகழ்ந்தார். டெல்லியில் தி.மு.க.வின் செயல்பாடுகள் அனைத்தும் அவரை மையமாக வைத்தே சுழன்று வந்தன.

முரசொலி மாறன் வழிகாட்டுதல் இல்லாமல் அந்த 36 ஆண்டுகளும் டெல்லி அரசியலில் தி.மு.க. எந்த முடிவும் எடுத்தது இல்லை. டெல்லியில் தி.மு.க. மீது வட மாநில தலைவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் ஏற்பட அவர்தான் முக்கிய பங்கு வகித்தார்.

2003-ம் ஆண்டு முரசொலி மாறன் மறைந்த பிறகு டெல்லி அரசியலில் தலைமைக்கான வெற்றிடம் ஏற்பட்டதை தி.மு.க. மூத்த தலைவர்களே உணர்ந்தனர். இதன் காரணமாகத்தான் 2004-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்தபோது பேச்சு வார்த்தைகளில் இழுபறி ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்தே தி.மு.க. தலைவர் கருணாநிதி அந்த வெற்றிடத்தை போக்கும் வகையில் கனிமொழியை 2007-ம் ஆண்டு மேல்-சபை எம்.பி.யாக்கினார். தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுவிலும், கலை இலக்கிய பிரிவிலும், மகளிர் அணியிலும் இடம் பெற்று அரசியல் அனுபவத்தை பெற்றுள்ள கனிமொழி டெல்லி அரசியலிலும் படிப்படியாக மேன்மை பெற்றுள்ளார்.

2009-ம் ஆண்டு தி.மு.க. - காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தபோது கனிமொழி அதில் பங்கேற்றார். மூத்த தலைவர்களுடன் அமர்ந்து தொகுதி பங்கீடு அனுபவத்தை பெற்றார்.

2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி அமைக்கவில்லை. 2ஜி பிரச்சனை காரணமாக தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் விரிசல் ஏற்பட்டு இருந்தது.

2016-ம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடந்தபோதுதான் அவர்களுக்கிடையே மீண்டும் சுமூகநிலை உருவானது.

இந்த நிலையில் தற்போது பாராளுமன்ற தேர்தலை சந்திக்க காங்கிரசும், தி.மு.க.வும் ஒன்று சேர்ந்துள்ளன. 2004, 2009-ம் ஆண்டுகளில் தி.மு.க.வுக்கு நல்ல அணுகுமுறை உள்ள டெல்லி தலைவர் இல்லாததால் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் நீண்ட இழுபறி ஏற்பட்டது. ஆனால் தற்போது அந்த குறையை கனிமொழி தீர்த்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தி தொகுதி பங்கீடு செய்வதற்கான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் உரிமையை கனிமொழிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கி இருந்தார். இதையடுத்து களத்தில் குதித்த கனிமொழி மொத்தம் 3 கட்டமாக காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

முதல் கட்டமாக அவர் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம், கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர் ஆகியோரை சந்தித்து கூட்டணி குறித்து பேசினார். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன? எத்தனை தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது? கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெற வேண்டும் என்பன போன்ற தகவல்களை மிக தெள்ளத்தெளிவாக காங்கிரஸ் தலைவர்களிடம் கனிமொழி எடுத்துரைத்தார்.

அதன் பயனாக தி.மு.க.வும், காங்கிரசும் எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம் என்ற ஒருமித்த கருத்து முதல் கட்ட பேச்சு வார்த்தையிலே ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கனிமொழி 2 தடவை சந்தித்து பேசினார்.



ராகுல்காந்தியுடன் நடந்த 2 கட்ட பேச்சுவார்த்தையிலும் கனிமொழி மிக திறமையாக வாதாடினார். தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டுமானால் ஒவ்வொரு கட்சியும் எத்தனை தொகுதிகளில் போட்டியிட்டால் சிறப்பாக இருக்கும் என்பதை புள்ளி விவரத்துடன் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி 39 தொகுதிகளில் எங்கெங்கு எந்தெந்த கட்சிகள் போட்டியிட வேண்டும் என்பதையும் ராகுல்காந்தியிடம் கனிமொழி தெளிவுப்படுத்தினார். ஒரு கட்டத்தில் சில தொகுதிகளில் யாரை நிறுத்தினால் நன்றாக இருக்கும் என்பதையும் கூட கனிமொழி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கனிமொழியின் இந்த புள்ளி விவர பேச்சால்தான் அவரது கூட்டணி பேச்சு வார்த்தை 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாக தகவல்கள் வெளியானது.

39 தொகுதி நிலவரங்களையும் கைவிரல் நுனியில் வைத்து பேசிய கனிமொழியின் ஆற்றலை கண்டு வியந்த ராகுல்காந்தி 9 தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் போட்டியிட சம்மதித்தார். அந்த வகையில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு எந்த இழுபறியும் இல்லாமல் மிக எளிதாக நிறைவு பெறுவதற்கு கனிமொழியின் அணுகுமுறையே காரணம் என்று கூறப்படுகிறது.

ராகுலை சம்மதிக்க வைத்த பிறகு கூட்டணி தொகுதி பங்கீடு முடிவை சென்னையில்தான் அறிவிக்க வேண்டும் என்ற உரிமையையும் கனிமொழி பெற்று கொடுத்தார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முகுல் வாஸ்னிக், கே.சி.வேணுகோபால் இருவரும் சென்னை வந்து தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வரலாற்றில் இதற்கு முன்பு இப்படி நடந்தது இல்லை. எனவே கனிமொழியின் அணுகுமுறைகள் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடமும், தி.மு.க. மூத்த தலைவர்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளன.

பாராளுமன்ற மேல்-சபையில் 12 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்து அனுபவம் பெற்றுள்ள கனிமொழியின் பதவி காலம் வருகிற ஜூலை மாதத்துடன் நிறைவு பெற உள்ளது. இதை கருத்தில் கொண்டு வருகிற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் களம் இறங்க கனிமொழி திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

தூத்துக்குடி தொகுதியில் இருந்து பாராளுமன்ற மக்களவைக்கு கனிமொழி எம்.பி.யாக தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அவரது டெல்லி அரசியலில் மேலும் அந்தஸ்து உருவாகும். குறிப்பாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் பட்சத்தில் கனிமொழியின் பங்களிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இதன் மூலம் தி.மு.க.வின் டெல்லி அடையாளமாக கனிமொழி மாற வாய்ப்பு உள்ளது. #DMK #Kanimozhi #Congress #RahulGandhi
Tags:    

Similar News