இந்தியா

தேர்தலுக்கு முன் ஏன்? கெஜ்ரிவால் கைது குறித்து ED-யிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

Published On 2024-04-30 12:35 GMT   |   Update On 2024-04-30 12:35 GMT
  • ஆரம்பகட்ட நடவடிக்கைகளுக்கும், கைது நடவடிக்கைக்கும் இடையில் ஏன் இவ்வளவு இடைவெளி எனத் தெரிவிக்க வேண்டும்.
  • இந்த வழக்கில் இதுவரை இணைப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

டெல்லி மாநில முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றும் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது.

அப்போது நீதிபதி சஞ்சீவ் கண்ணா, அமலாக்கத்துறை நோக்கி கேள்வி எழுப்பினார். அப்போது "இந்த வழக்கில் இதுவரை இணைப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது எடுக்கப்பட்டிருந்தால், கெஜ்ரிவால் இந்த விவகாரத்தில் ஈடுபட்டது தெரியவந்திருக்கும். பொதுத்தேர்தலுக்கு முன்னதாக ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை என்னிடம் தெரிவியுங்கள்.

இந்த வழக்கில் நீதித்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மத்திய நிறுவனம் குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

ஆரம்பகட்ட நடவடிக்கைகளுக்கும், கைது நடவடிக்கைக்கும் இடையில் ஏன் இவ்வளவு இடைவெளி எனத் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை பதில் அளிக்க வேண்டும். சுதந்திரம் என்பது மிகவும் முக்கியமானது. அதை நாம் மறுக்க முடியாது" எனத் தெரிவித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த கைது சட்டவிரோதம் என அறிவிக்க உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் கடந்த 15-ந்தேதி சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News