செய்திகள்

எங்கள் மீது வாரி இறைக்கப்படும் சேற்றை வைத்து தாமரையை மலர செய்வோம் - தமிழிசை

Published On 2018-12-07 22:59 GMT   |   Update On 2018-12-07 22:59 GMT
எங்கள் மீது வாரி இறைக்கப்படும் சேற்றை வைத்து தாமரையை மலர செய்வோம் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். #TamilisaiSoundararajan #BJP
சென்னை:

தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி தியாகராயநகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு, நிவாரண பொருட்களை வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் பா.ஜ.க. துணை தலைவர் எம்.என்.ராஜா, மாநில செயலாளர் கரு.நாகராஜன், ஊடக பிரிவு தலைவர் ஏ.என்.பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் மக்களுக்காக நாங்கள் உண்மையான சேவை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதை அரசியலாக்க பல எதிர்க்கட்சிகள் முயன்று வருகிறது. மேகதாது அணையை தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கட்ட முடியாது என்று நதிநீர் ஆணையம் கூறியிருக்கிறது.
 


மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி கொடுக்கவே இல்லை. ஆனால் அதற்குள் போராட்டம் நடத்துகிறார்கள். ஆய்வுக்கு அனுமதி கொடுத்ததை நீங்கள் அணை கட்டியதை போல முன்னிறுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் துணை முதல்-அமைச்சராக (மு.க.ஸ்டாலின்) இருந்த போது மீத்தேன் ஆய்வுக்கு கையெழுத்து போட்டீர்களே. மீத்தேன் எடுப்பதற்கு தான் கையெழுத்திட்டீர்களா? என்று நான் கேள்வி எழுப்புகிறேன்.

புல் முளைக்காத இடத்தில் தாமரை எப்படி மலரும் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். எங்கள் மீது வீசப்படும் சேற்றை வைத்து, தாமரையை மலர செய்வோம். சேற்றில் செந்தாமரை வளரும். ஏன் தாமரை மலராதா? அவர்களுக்கு ஏன் பதற்றம் வருகிறது என்று தெரியவில்லை. குளத்திலும் தாமரை மலரும், களத்திலும் தாமரை வளரும். இதில் நீங்கள் எந்த கவலையும் பட வேண்டாம். தாமரை மலருவதற்காக நான் கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #BJP
Tags:    

Similar News