புதுச்சேரி

பாராளுமன்ற தேர்தல் நிலவரம் குறித்து மாறி மாறி உலா வரும் தகவலால் பாஜக- காங்கிரஸ் கலக்கம்

Published On 2024-04-29 09:19 GMT   |   Update On 2024-04-29 09:19 GMT
  • ஆளும்கட்சியினர் ஏனாம் போன்ற தொகுதிகளை சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த வாக்கும் பா.ஜனதாவுக்கு கிடைத்துள்ளது என கூறுகின்றனர்.
  • சில இடங்களில் பா.ஜனதாவினர் காங்கிரசாரை பணி செய்யாமல் இருக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகிறது.

புதுச்சேரி:

பாராளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி முடிவடைந்தது. புதுவை பாராளுமன்ற தொகுதியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் நமச்சிவாயத்துக்கும், இந்தியா கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் சுமார் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார். அதோடு நேரடியாக பா.ஜனதா இந்த முறை களத்தில் இறங்கியதால் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோரின் சுமார் 2 லட்சம் வாக்குகள் பா.ஜனதாவுக்கு கிடைக்காது என காங்கிரசார் கருதினர்.

இதனால் தேர்தல் ஆரம்பிக்கும் முன்பே பா.ஜனதாவின் வாக்கு ஒன்று என ஆரம்பிப்பதை, காங்கிரசார் 2 லட்சத்து ஒன்று என ஆரம்பிப்போம் என தெரிவித்தனர். தற்போது தேர்தல் முடிவு வெளியாக 45 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாளுக்கு ஒரு தகவல்கள் உலா வருகிறது. சில தொகுதிகளில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீதான எதிர்ப்பால் வாக்குகள் காங்கிரசுக்கு விழுந்துள்ளதாக கூறுகின்றனர்.

அதேநேரத்தில் ஆளும்கட்சியினர் ஏனாம் போன்ற தொகுதிகளை சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த வாக்கும் பா.ஜனதாவுக்கு கிடைத்துள்ளது என கூறுகின்றனர். சில இடங்களில் பா.ஜனதாவினர் காங்கிரசாரை பணி செய்யாமல் இருக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகிறது. இதனால் மாறி, மாறி நாள்தோறும் உலா வரும் தகவல்கள் பா.ஜனதா, காங்கிரஸ் இடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள வயிற்றில் நெருப்போடு இருதரப்பினரும் காத்திருக்கின்றனர்.

Tags:    

Similar News