புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி பிரதமர் மோடியிடம் மேடையிலேயே முதலமைச்சர் ரங்கசாமி கோரிக்கை
- புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாதது வலியும் வருத்தமும் அளிக்கிறது
- 13 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்திருக்கிறோம்
புதுச்சேரிக்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று காலை 11.30 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புதுச்சேரி லாஸ் பேட்டை விமான நிலையத்துக்கு வந்தார்.
பிரதமர் மோடியை கவர்னர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர். அங்கிருந்து லாஸ்பேட்டை ஹெலி பேடு மைதானத்திற்கு வருகைதந்த பிரதமர் மோடி ரூ.1,571.73 கோடி மதிப்பிலான 74 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இது தவிர பிரதமர் மோடி ரூ.1,142.23 கோடி மதிப்பில் 19 முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, "புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாதது வலியும் வருத்தமும் அளிக்கிறது. பல ஆண்டுகளாக மக்கள் விரும்பும் கோரிக்கையை 13 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்திருக்கிறோம்" என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
பிரதமர் மோடி முன்பே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி விழா மேடையிலேயே முதலமைச்சர் ரங்கசாமி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.