புதுச்சேரியில் கடந்த தேர்தலை விட அதிக தொகுதியில் போட்டியிட தி.மு.க. முடிவு- ரகசியமாக சர்வே நடத்தி வருகிறது
- புதுச்சேரியில் தி.மு.க., பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- வருகிற தேர்தலில் போட்டியிடுவதற்காக வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளர்களை கண்டறியும் வேலையில் தி.மு.க., ரகசியமாக சர்வே நடத்தி வருகிறது.
புதுச்சேரி:
தமிழகத்தில் இந்தியா கூட்டணியில் தி.மு.க. - காங்கிரஸ் இடையே இதுவரை கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கப்படாமல் இழுபறியாக இருந்து வருகிறது.
த.வெ.க. தரப்பில் கூறப்பட்டுள்ள 70 எம்.எல்.ஏ.க்கள் சீட்டு, துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவி உள்ளிட்டவை காங்கிரஸ் கட்சியை தி.மு.க. பக்கம் செல்ல முடியாத அளவிற்கு நிறுத்தி வைத்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் தமிழகத்தலைவர் செல்வப்பெருந்தகை மட்டுமே தி.மு.க. கூட்டணிக்கு வலியுறுத்தி வருகிறாரே தவிர ராகுல் காந்தி கூட்டணி குறித்து இதுவரை எதுவும் கூறாமல் உள்ளார்.
இதனால் எரிச்சல் அடைந்துள்ள தி.மு.க. தலைமை கூட்டணி ஆட்சி கிடையாது என பகிரங்கமாகவே தெரிவித்துள்ளது.
இந்நிலையில் த.வெ.க.,வால் தங்களை மதிக்காமல் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரியில் அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் தி.மு.க., தலைமையிலேயே கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என காங்கிரஸ் கட்சிக்கு வெளிப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் தி.மு.க., பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதில் தி.மு.க. தலைமையில் அமைக்கும் அமைச்சரவையில் முதல்-அமைச்சர் அல்லது உள்துறை அமைச்சர் பதவிகளை தி.மு.க.வே வகிக்கும். இதற்கு கூடுதல் இடங்களில் வருகிற தேர்தலில் போட்டியிடுவதற்காக வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளர்களை கண்டறியும் வேலையில் தி.மு.க., ரகசியமாக சர்வே நடத்தி வருகிறது.
கடந்த தேர்தல் போல் இல்லாமல் புதுச்சேரியில் கூட்டணியில் 15 இடங்கள் இல்லை என்றால் காங்கிரஸ் கட்சியை கழட்டி விட்டு, 2 கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தை கூட்டணியுடன் போட்டியிடுவது என தி.மு.க. திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாகவே கங்கிரஸ் அல்லாத கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. ஆலோசனை நடத்தியுள்ளது.