இந்தியா
null

தேவகவுடா பேரனின் ஆபாச வீடியோ விவகாரம்: மோடி மவுனம் சாதிப்பது ஏன்?- பிரியங்கா காந்தி

Published On 2024-04-29 09:10 GMT   |   Update On 2024-04-29 09:17 GMT
  • தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
  • ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .

இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

ஹாசன் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26-ந் தேதி முதல் நாளில் இருந்தே இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் வலம் வருகிறது. இதனால் ஒட்டுமொத்த தேவகவுடா குடும்பமும் நிலை குலைந்து போயுள்ளது.

இந்த நிலையில் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,"10 நாட்களுக்கு முன்பு பிரதமர் கைகளை குலுக்கியும், தோள்களில் கைபோட்டும் கர்நாடக பிரச்சார கூட்டத்தில் புகழ்ந்துபேசிய நபர் இன்று நாட்டை விட்டே தப்பியோடி தலைமறைவாக இருக்கிறார். நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த மோடி ஆதரித்த வேட்பாளரின் குற்றங்களை கேட்கும்போதே நெஞ்சம் நடுங்குகிறது. இந்த கொடூரத்துக்காவது பிரதமர் மோடி வாய் திறப்பாரா?" என்று பதிவிட்டுள்ளார்.

கர்நாடகாவில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகளில் 14 தொகுதிகளுக்குதான் தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. வட கர்நாடகாவின் 14 பாராளுமன்ற தொகுதிகளில் மே 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

Tags:    

Similar News