search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஜா புயல்"

    அறந்தாங்கி அருகே கஜா புயல் தாக்கி 30 நாட்களுக்கு பின்னர் வந்த மின்சாரம் பெண்ணின் உயிரை பறித்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #gajacyclone

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் கிராமப்புறங்களில் தற்போது வரை மின் விநியோகம் சீராகவில்லை.

    இதற்கிடையே கஜா புயல் பாதித்து 30 நாட்களுக்கு பிறகு நேற்று மாலை முதல் அறந்தாங்கியை அடுத்த மங்களநாடு மேற்கு கிராமத்திற்கு மின் விநியோகம் வழங்கப்பட்டது.

    இந்த ஊரைச்சேர்ந்தவர் செல்லத்துரை. அதே ஊரில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயா (வயது 38). மீண்டும் மின்சாரம் வந்த மகிழ்ச்சியில் இன்று முதல் டீக்கடையில் வடை உள்ளிட்ட பலகாரங்களை விற்பனை செய்ய தம்பதியினர் தயாராகினர்.

    அதிகாலையில் செல்லத்துரை டீக்கடையை திறக்க புறப்பட்டு சென்றார். வீட்டில் இருந்த விஜயா வடை மற்றும் பலகாரங்கள் செய்வதற்காக பருப்பு வகைகளை அரைக்க மிக்சியை இயக்கினார். அப்போது அதில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது. அடுத்த விநாடி தூக்கி வீசப்பட்ட விஜயா சம்பவ இடத்திலேயே பலியானார்.

    உடனடியாக ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் முதலில் மின் இணைப்பை துண்டித்தனர். விஜயா உடலை பார்த்து கணவர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    கஜா புயல் தாக்கி 30 நாட்களுக்கு பிறகு நேற்று வந்த மின்சாரம் இன்று பெண்ணின் உயிரை பறித்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #gajacyclone

    புயல் பாதித்த மாவட்டங்களில் மின்சார சீரமைப்பு பணிக்கு மத்திய அரசு ரூ.200 கோடி வழங்கியது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். #Gaja
    ‘கஜா’ புயல் ஏற்படுத்திய சேதத்தில் ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்துவிட்டன. இவற்றை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். இப்போது ஒவ்வொரு ஊர்களுக்கும் மின் இணைப்பு படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.

    இதுபற்றி மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கஜா புயல் 110 கிமீ வேகத்தில் நாகை அருகே கரையை கடந்தபோது டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. புயலின் கடுமையான தாக்கத்தில் 1,13,566 மின் கம்பங்கள், 1082 மின்மாற்றிகள், 194 துணை மின் நிலையங்கள் சேதம் அடைந்தன.

    மின் கம்பங்களை சீர் செய்து தூக்கி நிறுத்தும் பணியில் 25 ஆயிரம் மின்வாரிய ஊழியர்கள் இரவு- பகல் பாராது தங்கள் உயிரையும் துச்சமாக நினைத்து பணியாற்றி வருகின்றனர்.

    மழை-வெயிலுக்கு ஒதுங்கி நிற்க இடம் இல்லாத வயல்கள், வெட்ட வெளியில் ஓய்வின்றி பணியாற்றுகின்றனர். வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்கு மின்கம்பங்களை தோளில் சுமந்து செல்கின்றனர். மழையையும் பொருட்படுத்தாமல் தண்ணீருக்குள் நின்று கயிறு கட்டி மின் கம்பங்களை தூக்கி நிறுத்துகின்றனர். வயல் வெளியில் ரோட்டிலேயே அமர்ந்து சாப்பிடுகின்றனர்.

    இவர்கள் செய்து வரும் பணி மெச்சத்தக்கது. இதற்காக நான் மின்வாரிய ஊழியர்களை மனதார பாராட்டுகிறேன். பணியின்போது 2 மின் வாரிய ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனையாக உள்ளது. அவர்களது குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் தலா ரூ.15 லட்சம் உதவியும், அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

    போர்க்கால அடிப்படையில் மின் ஊழியர்கள் பணியாற்றி வருவதால் நகராட்சி பகுதிகளில் 100 சதவீதம் மின் இணைப்பு கொடுத்துவிட்டோம். பேரூராட்சி பகுதிகளில் 80 சதவீத மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது.

    வேதாரண்யம் நகரில் டவர் விழுந்து விட்டதால் அது சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இன்று இரவுக்குள் அதையும் சரி செய்து மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    கிராம பஞ்சாயத்துகளில் ஒவ்வொரு ஊராக சென்று பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இன்னும் ஒரு வாரத்துக்குள் முழுமையாக மின் இணைப்பு கிடைக்கும் வகையில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    மின் கம்பங்கள் அதிகமாக தேவைப்படுவதால் ஆந்திராவில் இருந்து கூடுதலாக மின் கம்பங்களை வரவழைத்துள்ளோம். புயல் பாதித்த நாளில் இருந்து நானும் அங்கேயே முகாமிட்டு பணிகளை துரிப்படுத்தி வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாகை மாவட்டம் மானுவக்காட்டுப் பாளையத்தில் மின்சார சீரமைப்பு பணியின்போது உயிரிழந்த மின் ஊழியர் முருகேசன் குடும்பத்துக்கு அமைச்சர் தங்கமணி ரூ.2 லட்சம் உதவி வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், “புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் சீரமைப்பு பணிக்கு முதற்கட்டமாக மத்திய அரசு ரூ.200 கோடி நிதி வழங்கி உள்ளதாகவும், ஒரு வாரத்தில் அனைத்து கிராமங்களிலும் மின்சாரம் வழங்கப்படும்” என்றும் தெரிவித்தார்.
    கஜா புயலால் சேதம் அடைந்த தஞ்சாவூர், திருவாரூரில் மத்தியக் குழு ஆய்வு செய்து வருகிறது. நிவாரணம் வேண்டி விவசாயிகள், பெண்கள் கண்ணீர் மல்க முறையிட்டனர். #Gaja
    தஞ்சாவூர்:

    கஜா புயல் சேதங்களை பார்வையிட மத்திய குழுவினர் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் சேத பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கிருந்து நேற்று இரவு தஞ்சை வந்து சங்கம் ஓட்டலில் தங்கினர். இன்று காலை 8.30 மணி அளவில் தஞ்சை சங்கம் ஓட்டலில் இருந்து மத்திய குழுவினர் புயல் சேத பகுதிகளை பார்வையிட புறப்பட்டு சென்றனர்.

    முதலில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே புதூர் பகுதியில் புயலால் சேதமான பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். புயலால் குடிசை வீடுகளை இழந்த விவசாயிகள், பெண்களிடம் சேத விவரங்களை கேட்டனர். அப்போது விவசாயிகளும் பெண்களும் வீடுகளை இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம். எனவே அரசு நிவாரண தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினர்.

    இதைத்தொடர்ந்து மத்திய குழுவினர் சேதமான தென்னை மரங்களை பார்வையிட்டனர். அப்போது தென்னை விவசாயிகள் மத்திய குழுவினரிடம் கூறும்போது, ‘‘ புயல் சேதத்தால் இதுவரை இந்த பகுதியில் 4 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அரசு அறிவித்த நிவாரணம் எங்களுக்கு போதாது. எனவே கூடுதல் நிவாரணம் வழங்க வேண் டும். 20 ஆண்டுகள் பின்னோக்கி எங்களது வாழ்க்கை சென்று விட்டது. இதுவரை அரசு அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

    இதையடுத்து விவசாயிகள் கருத்துகள், மற்றும் சேதமான தென்னை மரங்கள் விவரங்களை மத்திய குழுவினர் குறிப்பெடுத்து கொண்டனர். இதைத்தொடர்ந்து புலவன் காட்டில் சேதமான துணை மின்நிலையத்தை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். பின்னர் நெம் மேலி திப்பியகுடி பகுதிக்கு சென்று சேதமான நீர்தேக்க தொட்டியை பார்வையிட்டனர்.

    இதையடுத்து ஆலடி குமுளை பகுதிக்கு மத்திய குழுவினர் சென்று சேதமான சாலைகளை புகைப்படங்களை மத்திய குழுவினர் பார்த்தனர். பட்டுக்கோட்டை உளூர் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை பார்வையிட்டனர். பின்னர் மல்லிபட்டினம், சென்று சேதமான மீனவர்களின் படகுகளை பார்வையிட்டனர். விசைபடகு, நாட்டு படகு மீனவர்கள் மத்திய குழுவினரிடம் கூறும்போது, படகுகளுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகை போதாது. கூடுதல் நிவாரண தொகையை அளிக்க வேண்டும். சுமார் 400 படகுகளுக்கு மேல் சேதமாகி உள்ளது என்று வேதனையுடன் தெவித் தனர். இதையடுத்து முத்துப் பேட்டை பகுதிக்கு சென்று புயல் சேத பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.



    மாலை 4 மணி அளவில் தஞ்சையில் இருந்து புறப்பட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு வெள்ள சேத பகுதிகளை பார்வையிட செல்கிறார்கள். அங்கு புயல் சேத பகுதிகளை பார்வையிட்டு விட்டு இரவு 8 மணிக்கு திருவாரூரில் இருந்து நாகை புறப்பட்டு செல்கிறார்கள். இரவு நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு ஓட்டலில் இக்குழுவினர் தங்குகிறார்கள்.

    நாளை (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் புயல் சேத பகுதிகளை பார்வையிடுகிறார்கள். பிற்பகல் 2.30 மணிக்கு புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் ஆய்வு செய்துவிட்டு இரவு புதுச்சேரி செல்கின்றனர்.
    முதல் அமைச்சரின் கஜா புயல் நிவாரணத்திற்காக 13 கோடி ரூபாய் திரண்டுள்ளதாக தமிழக அரசு செய்தி வெளியிட்டுள்ளது. #Gaja #GajaRelief
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    “கஜா” புயல் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தியது.

    வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு உதவிடவும், நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகை வாயிலாக நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    இந்த வேண்டுகோளினை ஏற்று, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள், நடிகர்கள், அரசியல் பிரமு கர்கள் பலர் நன்கொடை வழங்கினார்கள்.

    மேலும் பொதுமக்களும் நேரடியாகவும், ஆன்-லைன் மூலமாகவும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய நன்கொடைகளை சேர்த்து, இதுவரை கிடைத்த தொகை 13 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 288 ரூபாயாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    புயல் பாதித்த பகுதிகளை நாளை மறுநாள் நேரில் சென்று பார்வையிட இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #Gaja #GajaCyclone
    சேலம்:

    சேலத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேள்வி: கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை எப்போது பார்வையிடுவீர்கள்?

    பதில்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட இன்றைய தினம் நான் செல்லலாம் என இருந்தேன். இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட மாலை வரை நீடிக்கின்றது.

    இங்கிருந்து சுமார் 350 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நாகப்பட்டினம் மற்றும் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இந்த புயலால் சேதம் அடைந்திருக்கிறது. இதையெல்லாம் பார்வையிட வேண்டும் என்றால் ஒரு நாள் முழுவதுமாக வேணும்.

    ஆகவே ஏற்கனவே புதிய பாலம் திறப்பு விழா மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் புதிய கட்டிடம் திறப்பு விழா, மருத்துவமனையில் மருத்துவ கருவி தொடக்கவிழா இப்படி என்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து விட்டார்கள்.

    அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு புயலால் பாதிக்கப்பட்ட இடங்கள் அனைத்துக்கும் சென்று பார்வையிட கால நேரம் போதாதது என்ற காரணத்தினாலே இன்றைய தினம் செல்வதை தவிர்த்து செவ்வாய்க்கிழமை காலை நேராக சென்று கடலோர மாவட்டத்தில் உள்ள புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட செல்ல இருக்கின்றேன்.

    கே: மத்திய அரசுக்கு சேத மதிப்பீடு எப்போது அனுப்பப்படும்?

    ப: மத்திய குழுவுக்கு அனுப்ப இப்போது சேத மதிப்பீடு தயார் செய்து கொண்டிருக்கின்றோம். கஜா புயலால் கடுமையான சேதம். கிராம புறத்தில் இருக்கின்ற மரங்கள் எல்லாம் சாய்ந்து விட்டது. விவசாயிகளுடைய வாழ்வாதாரமே சீர்குலைந்து விட்டது. அவர்கள் பயிரிட்ட பயிர்கள் வாழை, தென்னை இப்படி பயிர்கள் எல்லால் புயல் காற்றால் முறிந்து சேதமாகி விட்டது.

    அதை எல்லாம் கணக்கிடுகின்ற பணி நடந்து கொண்டிருக்கின்றது. இந்த புயலால் இதுவரை 45 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள். அதுபோல் கால்நடைகள் ஆடு, மாடுகள் பொறுத்தவரைக்கும் 735 கால் நடைகள் உயிரிழந்திருக்கின்றன.

    கே: எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் பாராட்டு தெரிவித்து இருக்கின்றார்கள்?

    ப: இது இயற்கை பேரிடர். இயற்கை நமக்கு எவ்வளவு பெரிய சோதனையை தந்து விட்டு போயிருக்கிறது. இதை மனிதாபிமான முறையில் அனைவரும் நாட வேண்டும். எதிர்க்கட்சியோ, ஆளுங்கட்சியோ என்ற பாகுபாடு இருக்கக் கூடாது.

    ஒட்டுமொத்த மக்களே இதில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். இதுதான் மனிதாபிமான செயல். ஊடக நண்பர்களாக இருந்தாலும் சரி, பொதுமக்களாக இருந்தாலும் சரி நம்முடைய மக்கள் பாதிக்கப்படும்போது, நம்முடைய குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால் எப்படி மனநிலை ஏற்படுமோ, அதைப்போல் கருதி அந்த மக்களுக்கு தேவையான உதவிகளை அனைவரும் செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

    ப: அதிக அளவில் கிராம பகுதிகளில் மின்கம்பம் சாய்ந்திருக்கின்றது. இதை ஒரே நாளில் சரி செய்து விட முடியாது. வயல் பகுதிகளில் மின்கம்பங்கள் நிறைய சாய்துள்ளன. இந்த மின்கம்பத்தை எடுத்து அப்புறப்படுத்தி, புதிய மின் கம்பத்தை நிறுவக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. கம்பிகள் பொறுத்திதான் மின் வசதி செய்து கொடுக்க முடியும்.

    ஆங்காங்கே, ஜெனரேட்டர் வைத்து மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். முன்எச்சரிக்கையாக வைத்திருந்த ஜெனரேட்டரிகளில் இருந்த வயர்கள் எல்லாம் அறுந்து போய்விட்டது. இதையெல்லாம் சரி செய்துதான் மின்வசதி கொடுக்க முடியும்.

    கே: மத்திய பேரிடர் குழு நேரில் பார்வையிடுமா?

    ப: கடலோர மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை மத்திய பேரிடர் குழு நேரில் பார்வையிட்டு, சேதமதிப்பீட்டை கணக்கிட வேண்டும் என கேட்டிருக்கிறோம்.

    ப: போக்குவரத்து போகிற அளவுக்கு சாலையை சரி செய்துவிட்டாச்சு. சாலையில் ஒடிந்து விழுந்த மரங்கள் எல்லாம் இன்றைக்கு அகற்றப்பட்டு இருக்கின்றன. போக்குவரத்து துறை அமைச்சர் சொல்லி உள்ளார் இன்று மாலைக்குள் 100 சதவீத போக்குவரத்து இயக்கப்படும் என சொல்லி உள்ளனர்.

    கே: மத்திய அரசு அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்களா?

    ப: மீட்புப் பணியை பொறுத்தவரைக்கும் நம்முடைய மாநில அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அமைசர்களும் இன்று செல்ல உள்ளனர். நிலவரத்தை எல்லாம் கண்டறிந்து தேவைப்பட்டால் மத்திய அரசுடைய அதிகாரிகள் வரவழைத்து அந்த மீட்புப் பணிகள் எல்லாம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புயல் சேத கணக்கெடுப்பில் குளறுபடி ஏற்பட்டதால் அதிகாரிகள், போலீசார் மீது விவசாயிக்ள கல்வீசி தாக்குதல் நடத்தினார்கள். வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. #GajaCyclone
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பு பெருமளவில் சேதத்தை எற்படுத்தி இருக்கிறது. கடந்த 2 நாட்களாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், குடிநீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்தநிலையில் மாவட்டத்திற்குட்பட்ட ஆலங்குடி, கொத்தமங்கலம், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதியில் கஜா புயலின் பாதிப்பு அதிகம் உள்ளது.

    அப்பகுதியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், வாழை, பலா, தென்னை மரங்கள், மலர் தோட்டங்கள் சேதமடைந்துள்ளன. ஆனால் இது பற்றிய முழுமையான தகவல் வெளியாகவில்லை. சேதமடைந்த பகுதியை அதிகாரிகள் பார்வையிட வராததால் அப்பகுதி விவசாயிகள் விரக்தியில் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்றிரவு வேளாண்மை உதவி அலுவலர்கள் 2 பேர் கொத்தமங்கலம் பகுதியில் சேத மதிப்பை கணக்கிட சென்றனர். அப்போது அவர்களை கிராம மக்கள் திடீரென்று சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையறிந்த டி.ஆர்.ஓ. ராமசாமி, ஆர்.டி.ஓ. டெய்சி குமார், தாசில்தார் ரத்தின குமாரி ஆகியோர் டி.எஸ்.பி. அய்யனார் மற்றும் போலீசார் பாதுகாப்புடன் நேற்றிரவு சேதம் பற்றி கணக்கெடுக்க ஆலங்குடி தாலுகா அலுவலகத்திற்கு சென்றனர்.

    அப்போது வழியில் கொத்தமங்கலத்தில் வழி மறித்த விவசாயிகள், தங்கள் பகுதியில் கணக்கெடுக்கப்பட்ட சேதம் குறித்து விசாரித்தனர். அதில் குளறுபடி இருந்ததாக தெரிவித்த விவசாயிகள் திடீரென ஆத்திரமடைந்து அதிகாரிகள், போலீசார் மீது கல்வீசி தாக்கினர். டி.எஸ்.பி. அய்யனார் தலையில் கல் தாக்கியதில் அவர் காயமடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்கள் மூலம் வெளியேறினர்.

    இதனிடையே அங்கு நின்ற தாசில்தார், டி.எஸ்.பி., போலீசார் வந்த 4 கார்களுக்கு விவசாயிகள், கிராம மக்கள் தீ வைத்தனர். இதில் கார்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து திருச்சி சரக டி.ஐ.ஜி. லலிதா லட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து பொதுமக்கள், விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியதால் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    கஜா புயுலால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கூடுதலா 11 அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். #Gaja #GajaCyclone
    சென்னை:

    ‘கஜா’ புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சாய்ந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியும், மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணியும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

    இதில் நாகை மாவட்டத்தில் அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் முகாமிட்டு நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் திண்டுக்கல் சீனிவாசன், தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, வேலுமணி, வைத்திலிங்கம் எம்.பி., ஆகியோரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் முகாமிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்கள்.

    புயல் பாதித்த மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க கூடுதலாக 11 அமைச்சர்களை நியமித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி நாகை மாவட்டத்திற்கு அமைச்சர்கள் கே.பி. அன்பழகன், எம்.சி. சம்பத், பெஞ்சமின் ஆகியோரும், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.



    திருவாரூர் மாவட்டத்துக்கு அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி ஆகியோரும், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி. கருப்பணன், பாஸ்கரன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் அந்தந்த மாவட்டங்களில் ஏற்கனவே முகாமிட்டுள்ள அமைச்சர்களுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, பால், பிஸ்கட் போன்ற அத்தியாவசிய பொருட்களை இலவசமாக வழங்கவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    கஜா புயலால் உயிரிழந்த மாடு ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரமும், ஆடு ஒன்றுக்கு மூவாயிரமும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். #Gaja #GajaCyclone
    சென்னை:

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய வானிலை ஆய்வு மையம் 15.11.2018 அன்று இரவு நாகப்பட்டினம் அருகில் ‘கஜா’ புயல்கரையைக் கடக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டது. இதன் காரணமாக, உயிர் சேதங்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன. எனினும் புயலின் தாக்கத்தினால் பொருட்சேதங்கள் பெரிய அளவில் ஏற்பட்டன.

    புயல் நாகப்பட்டினத்தில் 110 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தபோது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வீசிய பலத்த காற்றினாலும், பெய்த கனமழையினாலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீர்செய்யும் நடவடிக்கைகள் தற்போது போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ‘கஜா’ புயல் காரணமாக, தாழ்வான பகுதிகளில் இருந்த 2,49,083 நபர்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருக்க அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 493 முகாம்களில் தங்க வைக்கப்பட் டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் குடும்பம் ஒன்றிற்கு 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.

    ‘கஜா’ புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட் சம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    மேலும், இப்புயலின்போது 102 மாடுகளும், 633 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30,000 ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 3,000 ரூபாயும் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ‘கஜா’ புயல் காரணமாக 56,942 குடிசை வீடுகள் முழுமையாகவும் 30,404 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மேலும், 30,328 ஓட்டு வீடுகள் சேத மடைந்துள்ளன. சேதமடைந்துள்ள வீடுகளுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும்.

    ‘கஜா’ புயல் காரணமாக வாழை, தென்னை, நெல் மற்றும் இதர பயிர்கள் கடுமையான சேதத்திற்கு உள்ளாகி, விவசாய பெருமக்களுக்கு மிகுந்த பொருளாதார இழப்பினை ஏற்படுத்தி உள்ளது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றது.

    இந்த சேத விவரங்களை உடனடியாக கணக்கீடு செய்யுமாறு வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். கணக்கீடு அடிப்படையில் விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீட்டு நிவாரணம் வழங்கப்படும்.



    மேலும் அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில் முகாமிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இவர்களுடன் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி சுனில் பாலிவால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், அமுதா திருவாரூர் மாவட்டத்திற்கும், ராதா கிருஷ்ணன் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கும் கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    ‘கஜா’ புயல் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப் புரம், திண்டுக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் 1,70,454 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சாலையில் விழுந்துள்ள மரங்களை மின் ரம்பங்கள் மூலம் வெட்டி, போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப் பட்டு வருகிறது.

    ‘கஜா’ புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 347 மின் மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்) சேதமடைந்துள்ளன. சுமார் 39,938 மின் கம்பங்கள் விழுந்துள்ளன. 3,559 கி.மீ நீளமுள்ள மின் வயர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் மின்சேவை பாதிக்கப்பட்டது.

    மரங்கள் சாய்ந்து விழுந்ததனால் சேதமடைந்த மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை சீர் செய்யும் வகையில் மரங்களை அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மின் மாற்றிகள் மற்றும் மின்கம்பங்களை மாற்றியமைக்கும் பணிகளை மேற்கொள்ள 12,532 மின்துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    அம்மா வழியில் செயல்படும் இந்த அரசு கஜா புயல் காரணமாக மக்களுக்கு எந்தவித தொற்று நோயும் ஏற்படாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பொதுமக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் 372 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட் டுள்ளன. மேலும், 1014 நடமாடும் மருத்துவ முகாம்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 84,436 நபர்கள் இம்மருத்துவ முகாம்கள் மூலம் பயன் பெற்றுள்ளனர். தேவையான மருந்து மற்றும் கிருமி நாசினிகள் கையிருப்பில் வைக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பன்முக நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.

    ‘கஜா’ புயல் காரணமாக சேதமடைந்த படகுகளை மீன்வளத்துறை மூலம் உடனடியாக கணக்கீடு செய்து அறிக்கை அனுப்புமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். அந்த அறிக்கை பெறப்பட்டதும், அதன் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும். இந்த அரசு, சேத மடைந்த பகுதிகளை சீர் செய்யும் பணி களை போர்க் கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நானை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நிவாரணம் வழங்கலாம் என்று கடலூர் கலெக்டர் அறிவித்துள்ளார் #GajaCyclone
    கஜா புயல் வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. அப்போது திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டு, மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

    பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து கிடப்பதால் சாலை போக்குவரத்து, மின்சார வசதிகள் வழங்க தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பால், குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கலாம். குடிநீர் பாட்டில்கள், போர்வை, உடைகள், பிஸ்கட் போன்ற பொருட்களை வழங்கலாம். இவற்றை ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கலாம் என்று கடலூர் ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
    கஜா புயலால் சேதமடைந்த பகுதிகளை சீர்செய்ய மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டுள்ளார். #GajaCyclone #Gaja
    கஜா புயல் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. இதனால் பெரும்பாலான பகுதிகள் அதிக அளவில் சேதத்தை சந்தித்துள்ளது. புயல் கரையை கடந்த பின்னர் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் சில இடங்களில் போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை, அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிடவில்ல என்று போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.



    இந்நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘‘புயலால் சேதமடைந்த பகுதிகளை சீர்செய்ய மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த கூடுதலாக ஐஏஎஸ் அதிகாரிகள் அனுப்பப்படுவார்கள். புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
    கஜா புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறினார். #Gaja #Storm #ChennaiRain
    சென்னை:

    அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இன்று காலை அது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக தீவிரம் அடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘கஜா’ என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கஜா புயல் வருகின்ற 15-ந்தேதி (வியாழக்கிழமை) முற்பகல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என சென்னை வானிமை மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவிக்கையில் ‘‘தற்போதைய நிலையில் சென்னையில் 930 கிலோ மீட்டர் தொலைவில் கஜா புயல் உள்ளது. வருகிற 15-ந்தேதி முற்பகல் கடலூர் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே புயல் கரையை கடக்கும். அப்போது காற்று 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.

    சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் 14-ந்தேதி இரவில் இருந்தே மழை பெய்ய ஆரம்பிக்கும். சில இடங்களில கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தற்போது 13 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இது பின்னர் மாறுபடலாம்’’ என்று கூறி உள்ளார்.

    இந்நிலையில் கஜா புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் என்று சத்யகோபால் கூறினார்.



    ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீனவர்களுக்கு கடலோர பாதுகாப்புப்படை மூலம் அறிவுறுத்துவோம் என்றும், கடலோர மாவட்ட மக்களுக்கு உரிய நேரத்தில் தகவல் அளித்துக்கொண்டே இருப்போம் என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்தார். #Gaja #Storm #ChennaiRain

    ×