search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Poor Workers"

    60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந்தேதி தொடங்கி வைக்கிறார். #EdappadiPalaniswami
    சென்னை:

    ‘கஜா’ புயலின் தாக்கத்தினாலும், பருவ மழை பொய்த்ததன் காரணமாகவும் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ் நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கடந்த 11-ந்தேதி அறிவித்தார்.

    விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமானத்தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என்றார்.

    இதற்காக ரு.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டு துணை பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    ரூ.2 ஆயிரம் வழங்கும் இந்த திட்டத்தை சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.

    இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், ஆக மொத்தம் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியைப்பெறுவார்கள்.

    இந்த திட்டத்தில் பட்டியல் எடுக்கும் போது விடுபட்ட பயனாளிகள் இருந்தால் அவர்களுக்கும் ரூ. 2 ஆயிரம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #EdappadiPalaniswami

    தமிழ்நாட்டில் அனைத்து ஏழை தொழிலாளர்களுக்கும் ரூ.2000 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். #EdappadiPalaniswami
    சேலம்:

    சேலம் நேரு கலையரங்கத்தில் இன்று நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் உதவிகளை வழங்கியும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும் சிறப்புரை ஆற்றியதாவது:-

    இன்றைக்கு அம்மா அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. சேலம் மாநகரில் நடைபெற்ற அரசு விழாவில் ஜெயலலிதா பேசுகையில் சேலம் என்றால் நம்பிக்கை என்று அகராதியில் எழுதப்பட்டு இருக்கிறது என்று சொன்னார்.

    2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியை தவிர 10 தொகுதிகளிலும் அம்மாவின் தலைமையில் அரசு தொடர்ந்து ஆட்சி புரிகிற வகையில் வெற்றியை தேடி தந்த மாவட்டம் சேலம் மாவட்டம். மகத்தான வெற்றியை தேடி தந்த இம்மாவட்ட மக்களின் நலனுக்காகவும், மாவட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும் நான் பாடுபடுவேன்.

    அம்மாவின் அரசு மக்களின் நலன் காக்கும் அரசு. இன்றைக்கு சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டொன்றுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை கொடுத்து முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம், அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது என்ற செய்தியை சொல்லி பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.



    இந்த திட்டம் உன்னதமான திட்டம். நம்முடைய தமிழகத்தில் மட்டும் சுமார் 60 லட்சம் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறுகிறார்கள். இந்தியா முழுவதும் 12 கோடி சிறு, குறு விவசாயிகள் பயன் அடைகின்றனர். இது ஒரு வருடம் கொடுப்பது மட்டுமல்ல. இது தொடர்ந்து 5 ஆண்டு காலம் வழங்கப்படும் திட்டம். 4 மாத காலத்திற்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம். இப்படி 3 தவணையாக ஒவ்வொரு ஆண்டும் ரூ.6 ஆயிரம் விவசாயினுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

    இன்றைக்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய சிறு, குறு விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமான திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்திருக்கின்றார். இதற்காக தமிழக மக்களின் சார்பாகவும், விவசாயிகளின் சார்பாகவும் நன்றியை பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதைப்போல் அம்மாவின் அரசு எல்லா ஏழை தொழிலாளர்களுக்கும் சிறப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வழங்கி இருக்கின்றேன். இது அனைத்து ஏழை தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும். என்னிடத்திலேயே கோரிக்கை மனு கொடுத்தார்கள். நிறைய பேர் பெயர் விடுபட்டு விட்டது. இந்த சிறப்பு உதவித் தொகை திட்டத்தில் எங்களுடைய பெயர் இடம்பெறவில்லை என கோரிக்கை மனு அளித்தார்கள்.

    இங்கு வந்திருக்கின்ற அரசு கூடுதல் செயலாளர் ஹன்ஸ்ராஜியிடம் இது பற்றி எடுத்துச் சொல்லி எந்த ஒரு ஏழை தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த பெயர்களும் விடுபடக்கூடாது அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறேன்.

    சுய உதவிக்குழு மற்றும் வங்கிக்கடன் இணைப்பு திட்டத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக அளவு கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே உணவு, தானிய உற்பத்தியை அதிகப்படுத்தியதால் தமிழகம் விருது பெற்றுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக 2 அடுக்கு மேம்பாலம் சேலத்தில்தான் கட்டப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார். #EdappadiPalaniswami


    சென்னையில் 5 லட்சத்து 11 ஆயிரம் ஏழை தொழிலாளர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கு பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. #BPLFamiles #Rs2000SplAssistant
    சென்னை:

    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று சட்ட சபையில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.



    இதைத் தொடர்ந்து மாவட்ட வாரியாக எத்தனை ஏழைக் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

    சென்னை மாநகரில் 15 மண்டலங்கள் உள்ளன. இந்த 15 மண்டலங்களிலும் எத்தனை ஏழைக் குடும்பங்கள் உள்ளன என்ற கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    இதில் சென்னை மாநகரில் 5 லட்சத்து 11 ஆயிரம் ஏழை தொழிலாளர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கு பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தண்டையார்பேட்டை மண்டலத்தில் அதிகபட்சமாக 98 ஆயிரத்து 612 பேர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர். திருவொற்றியூர் மண்டலத்தில் 46,096 பேர் உள்ளனர்.

    மணலியில் 9,271 பேர், மாதவரம் பகுதியில் 16,323 பேர், ராயபுரம் பகுதியில் 41,958 பேர், திரு.வி.க. நகரில் 51,654 பேர் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள். அம்பத்தூர் மண்டலத்தில் 32,077 பேர் தலா ரூ.2 ஆயிரம் பெறும் நிலையில் உள்ளனர்.

    அண்ணாநகர் மண்டலத்தில் 25,804 பேர், தேனாம்பேட்டை பகுதியில் 46,685 பேர், கோடம்பாக்கம் மண்டலத்தில் 25,300 பேர், வளசரவாக்கம் பகுதியில் 16,250 பேர் ஏழைகள் பட்டியலில் உள்ளனர். அடையார் மண்டலத்தில் 62,552 பேர் ஏழை தொழிலாளர்களாக இருப்பது தெரியவந்துள்ளது.

    பெருங்குடி பகுதியில் 16,502 பேர், சோழிங்கநல்லூர் பகுதியில் 14,331 பேர் வறுமைகோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள். 15 மண்டலங்களிலும் மிக, மிக குறைவாக ஆலந்தூர் மண்டலத்தில் 7,473 பேர் ஏழை தொழிலாளர்களாக இருக்கிறார்கள்.

    15 மண்டலங்களிலும் நிறைய பேர் வறுமைகோட்டுக்கு கீழ் இருப்பதாக மனு செய்து இருந்தனர். அந்த மனுக்களை ஆய்வு செய்ததில் 11,953 பேர் போலி ஆவணங்கள் கொடுத்து இருப்பது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து அந்த 11,953 மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. #BPLFamiles #Rs2000SplAssistant

    ×