search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனைத்து ஏழை தொழிலாளர்களுக்கும் ரூ.2000 வழங்க நடவடிக்கை - எடப்பாடி பழனிசாமி உறுதி
    X

    அனைத்து ஏழை தொழிலாளர்களுக்கும் ரூ.2000 வழங்க நடவடிக்கை - எடப்பாடி பழனிசாமி உறுதி

    தமிழ்நாட்டில் அனைத்து ஏழை தொழிலாளர்களுக்கும் ரூ.2000 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். #EdappadiPalaniswami
    சேலம்:

    சேலம் நேரு கலையரங்கத்தில் இன்று நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் உதவிகளை வழங்கியும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும் சிறப்புரை ஆற்றியதாவது:-

    இன்றைக்கு அம்மா அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. சேலம் மாநகரில் நடைபெற்ற அரசு விழாவில் ஜெயலலிதா பேசுகையில் சேலம் என்றால் நம்பிக்கை என்று அகராதியில் எழுதப்பட்டு இருக்கிறது என்று சொன்னார்.

    2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியை தவிர 10 தொகுதிகளிலும் அம்மாவின் தலைமையில் அரசு தொடர்ந்து ஆட்சி புரிகிற வகையில் வெற்றியை தேடி தந்த மாவட்டம் சேலம் மாவட்டம். மகத்தான வெற்றியை தேடி தந்த இம்மாவட்ட மக்களின் நலனுக்காகவும், மாவட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும் நான் பாடுபடுவேன்.

    அம்மாவின் அரசு மக்களின் நலன் காக்கும் அரசு. இன்றைக்கு சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டொன்றுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை கொடுத்து முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம், அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது என்ற செய்தியை சொல்லி பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.



    இந்த திட்டம் உன்னதமான திட்டம். நம்முடைய தமிழகத்தில் மட்டும் சுமார் 60 லட்சம் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறுகிறார்கள். இந்தியா முழுவதும் 12 கோடி சிறு, குறு விவசாயிகள் பயன் அடைகின்றனர். இது ஒரு வருடம் கொடுப்பது மட்டுமல்ல. இது தொடர்ந்து 5 ஆண்டு காலம் வழங்கப்படும் திட்டம். 4 மாத காலத்திற்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம். இப்படி 3 தவணையாக ஒவ்வொரு ஆண்டும் ரூ.6 ஆயிரம் விவசாயினுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

    இன்றைக்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய சிறு, குறு விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமான திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்திருக்கின்றார். இதற்காக தமிழக மக்களின் சார்பாகவும், விவசாயிகளின் சார்பாகவும் நன்றியை பிரதமருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதைப்போல் அம்மாவின் அரசு எல்லா ஏழை தொழிலாளர்களுக்கும் சிறப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வழங்கி இருக்கின்றேன். இது அனைத்து ஏழை தொழிலாளர்களுக்கும் வழங்கப்படும். என்னிடத்திலேயே கோரிக்கை மனு கொடுத்தார்கள். நிறைய பேர் பெயர் விடுபட்டு விட்டது. இந்த சிறப்பு உதவித் தொகை திட்டத்தில் எங்களுடைய பெயர் இடம்பெறவில்லை என கோரிக்கை மனு அளித்தார்கள்.

    இங்கு வந்திருக்கின்ற அரசு கூடுதல் செயலாளர் ஹன்ஸ்ராஜியிடம் இது பற்றி எடுத்துச் சொல்லி எந்த ஒரு ஏழை தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த பெயர்களும் விடுபடக்கூடாது அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறேன்.

    சுய உதவிக்குழு மற்றும் வங்கிக்கடன் இணைப்பு திட்டத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிக அளவு கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே உணவு, தானிய உற்பத்தியை அதிகப்படுத்தியதால் தமிழகம் விருது பெற்றுள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக 2 அடுக்கு மேம்பாலம் சேலத்தில்தான் கட்டப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார். #EdappadiPalaniswami


    Next Story
    ×