search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலகிருஷ்ணன்"

    ஆண்டுக்கு 6 சதவீதம் என்ற சொத்து வரி உயர்வை முழுமையாக கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறி உள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் ஆணையின்படி சொத்துவரி செலுத்துவோரின் கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் சொத்து வரி செலுத்துவோர் வரி உயர்வுக்கு தங்களது ஆட்சேபணைகளை தெரிவித்துள்ளார்கள்.

    ஆனால், சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இந்த ஆட்சேபணைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், மீண்டும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதின் அடிப்படையில் புதிய சொத்து வரி தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்களின் கோரிக்கைகளை சிறிதும் கவனத்தில் கொள்ளாமல் மீண்டும் அதே வரியை தீர்மானித்திருப்பது மக்களின் உணர்வுகளை அரசு செவிசாய்க்கவில்லை என்ற நிலையை உருவாக்கி விடும் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

    மேற்கண்ட வரி உயர்வு மட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் 6 சதமான சொத்து வரி உயர்த்தப்பட வேண்டுமெனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்தினால் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் 6 சதவீதமான வரி உயர்வு ஏற்பட்டு 10 ஆண்டுகளில் நூறு சதவிகித சொத்து வரி உயர்வு ஏற்படும்.

    இதன் காரணமாக சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவரும் மிகப்பெரும் வரிச்சுமைக்கு ஆளாக்கப்பட வேண்டிய நிலைமை உருவாகும். எனவே, ஒவ்வொரு ஆண்டும் 6 சதவீதமான வரி உயர்வு என்பதை முழுமையாக கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×