search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கஜா புயலால் பாதித்த சமூக சேவகருக்கு வீடு கட்டிகொடுத்த லாரன்ஸ்
    X

    கஜா புயலால் பாதித்த சமூக சேவகருக்கு வீடு கட்டிகொடுத்த லாரன்ஸ்

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட சமூக சேவகர் கணேசனுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக வீடு ஒன்றை கட்டிக் கொடுத்து இருக்கிறார்.
    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் கணேசன் (வயது 70). சமூக சேவகரான இவர் 108 ஆம்புலன்ஸ் சேவை போல இலவச கார் சேவை செய்து வருகிறார். பிரசவம், அவசர சிகிச்சையோ என்றால் கணேசனுக்கு போன் செய்தால் போதும் உடனே சம்பவ இடத்திற்கு தனது காரில் சென்று விடுவார். எந்தவித கட்டணமும் இல்லாமல் தமிழகத்தின் எந்த பகுதிக்கும் அழைத்து செல்வார்.

    இதன் மூலம் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கும், விபத்தில் சிக்கிய 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உதவி செய்துள்ளார். இது மட்டுமின்றி ஆதரவற்று மரணமடைபவர்களின் உடல்களை மீட்டு அவரே அடக்கம் செய்து வருகிறார்.

    இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனாதை பிணங்களை மீட்டு அடக்கம் செய்துள்ளார். அவரின் சமூக சேவையை பாராட்டி பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கியுள்ளன.



    இந்தநிலையில் ஆலங்குடியில் மிகச்சிறிய வீட்டில் வசித்து வந்த கணேசனின் வீடு, கடந்த ஆண்டு தமிழகத்தில் வீசிய கஜா புயலில் பலத்த சேதமடைந்தது. வீட்டை இழந்த அவர் தங்குவதற்கு இடமின்றி தவித்து வந்தார். இதனிடையே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக ஆலங்குடிக்கு சென்றிருந்த நடிகர் ராகவா லாரன்ஸ், சமூக சேவகர் கணேசனின் சேவையை அறிந்தும், அவர் வீடின்றி தவிப்பதையும் அறிந்து உடனே அவருக்கு உதவி செய்ய முன்வந்தார்.

    அதன்படி ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக வீடு ஒன்று கட்டி கொடுக்க முடிவு செய்து அதற்கான பணிகளையும் தொடங்கினார். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த வீடு கட்டும் பணி முடிவடைந்து இன்று திறப்பு விழா நடைபெற்றது. இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு வீட்டை திறந்து வைத்து, அதனை கணேசனிடம் ஒப்படைத்தார். தனக்கு வீடு கட்டி கொடுத்து உதவிய ராகவா லாரன்சுக்கு கணேசன் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். மேலும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர். 
    Next Story
    ×