தமிழ்நாடு

நீலகிரி சுற்றுலா தலங்களை 39 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்

Published On 2024-04-29 07:32 GMT   |   Update On 2024-04-29 07:32 GMT
  • முதுமலைக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அங்கு யானைகளுக்கு உணவு கொடுக்கும் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.
  • நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலுமே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

ஊட்டி:

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரங்களில் கடுமையான வெயில் நிலவுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். அந்தளவுக்கு வெயிலின் உக்கிரம் இருக்கிறது. கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்ச்சியான காலநிலை நிலவக்கூடிய மலைபிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளை நோக்கி செல்கின்றனர்.

மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த சில வாரங்களாக சுற்றுலா பயணிகள் வருகையானது அதிகரித்து காணப்படுகிறது. வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அலைமோதி வந்தது. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து குடும்பம், குடும்பமாக ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் அங்குள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகிறார்கள். படகு இல்லத்தில் படகு சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

முதுமலைக்கு சென்ற சுற்றுலா பயணிகள் அங்கு யானைகளுக்கு உணவு கொடுக்கும் நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலுமே சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று ஒரே நாளில் நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களை 39 ஆயிரத்து 23 சுற்றுலா பயணிகள் பார்வையிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு 23 ஆயிரத்து 78 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளது. இதேபோல் காட்டேரி பூங்காவுக்கு 1,011 பேரும், தேயிலை பூங்காவுக்கு 1,100 பேரும், ரோஜா பூங்காவுக்கு 8 ஆயிரத்து 868 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 4 ஆயிரத்து 680 பேரும், மரவியல் பூங்காவுக்கு 286 பேரும் வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். 

Tags:    

Similar News