கொடைக்கானலில் 4500 பிஸ்கட்டுகளால் வடிவமைக்கப்பட்ட சுவிட்சர்லாந்து கிராம வீடுகள்
- பஞ்சுகள், மின்விளக்குகள், கிறிஸ்துமஸ் தாத்தா உருவம் உள்ளிட்டவைகள் கொண்டு அமைக்கப்பட்டு இருக்கும் காட்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
- சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பதுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் தனியார் விடுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள கிரைண்டல்வால்ட் கிராமத்தில் அமைந்திருக்கும் வீடுகள் போல வடிவமைக்கப்பட்டுள்ள ஜிஞ்சர் பிரட் ஹவுஸ் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை உலகம் முழுவதும் கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்ட தொடங்கியுள்ளது. இதனையடுத்து கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 100 கிலோ மைதா, 15 கிலோ பிரவுன் சுகர், 15 லிட்டர் தேன், ஜிஞ்சர் 1 கிலோ பட்டர், 10 லிட்டர் கீரிம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு கடந்த 5 தினங்களாக 4500 ஜிஞ்சர் பிஸ்கட்கள் உருவாக்கப்பட்டது.
3 நாட்கள் வேலைப்பாடுகளை கொண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள கிரைண்டல்வால்ட் கிராமத்தில் அமைந்திருக்கும் வீடுகளை போன்று ஜிஞ்சர் பிரட் ஹவுஸ்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்படும். அப்போது பனிப்பொழிவு வீட்டின் மீது படர்ந்து வெண்மையாக காணப்படும். அது போலவே ஜிஞ்சர் பிரட் ஹவுஸ் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பஞ்சுகள், மின்விளக்குகள், கிறிஸ்துமஸ் தாத்தா உருவம் உள்ளிட்டவைகள் கொண்டு அமைக்கப்பட்டு இருக்கும் காட்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் விடுதியில் தங்கியுள்ள சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பதுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் இந்த ஜிஞ்சர் பிரட் ஹவுஸ் தற்போது வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் புத்தாண்டு வரை விடுதியின் நுழைவு வாயில் மற்றும் ரெஸ்டாரண்ட் வளாகத்திலேயே சுற்றுலாப்பயணிகள் பார்வைக்காக வைக்கப்படும் எனவும் விடுதி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கொடைக்கானலில் தொடரும் பனிப்பொழிவு மற்றும் மூடுபனிக்கு இடையே கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அவர்கள் இங்கு நிலவும் ரம்யமான சீதோசனத்தை உற்சாகமாக கண்டு மகிழ்கின்றனர்.