செய்திகள்

கஜா புயல் பாதிப்புகள் குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்- கனிமொழி

Published On 2018-12-02 07:01 GMT   |   Update On 2018-12-02 07:01 GMT
தமிழகத்தில் புயல் பாதித்த 12 மாவட்டங்களுக்கு போதிய நிதி அளிக்காதது வேதனைக்குரியது என்றும் இப்பிரச்சனை குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என்றும் கனிமொழி தெரிவித்தார். #DMK #Kanimozhi #GajaCyclone
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. இன்று நெல்லை வந்தார். தாழையூத்து தனியார் விருந்தினர் மாளிகையில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2008-ம் ஆண்டில் தி.மு.க. தலைவர் கலைஞர் கொண்டுவந்த அரசாணையின் படி இரண்டு வருடம் பணிபுரிந்த மாற்றுத்திறனாளிகளை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றார். ஆனால் இப்போதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பணி நியமனம் செய்யப்படாமல் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்காதது குறித்து முதலில் அமைச்சர் சரோஜா பேச வேண்டும்.


கஜா புயல் பாதிப்புகள் குறித்து முழு அளவில் தமிழக அரசு ஆய்வு செய்யவில்லை. தமிழக அரசிற்கே பாதிப்புகளுக்கான முழு அளவீடுகள் தெரியவில்லை. உண்மை நிலையை மத்திய அரசுக்கு எடுத்து சொல்லவில்லை. எதிர்த்து கேள்வி கேட்க முடியாமல் பதவிகளை காப்பாற்றி கொள்ளும் நிலையிலேயே தமிழக அரசு செயல்படுகிறது.

சிலை அமைப்பதற்கு 3000 கோடி செலவு செய்யும் மத்திய அரசு தமிழகத்தில் புயல் பாதித்த 12 மாவட்டங்களுக்கு போதிய நிதி அளிக்காதது வேதனைக்குரியது. இந்த பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கேரள கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது குறித்து கனிமொழி எம்.பி.யிடம் கேட்டபோது, ‘கேரள கழிவுகள் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக நாடுகளின் கழிவுகளும் இந்தியாவில் வந்துதான் கொட்டப்படுகின்றன’ என்றார். #DMK #Kanimozhi #GajaCyclone
Tags:    

Similar News