செய்திகள்

காங்கிரசுடன் கூட்டணி பற்றி இப்போது சொல்லமுடியாது- கமல்ஹாசன் பேட்டி

Published On 2018-10-20 08:15 GMT   |   Update On 2018-10-20 08:15 GMT
காங்கிரசுடன் கூட்டணி பற்றி இப்போது சொல்லமுடியாது என்று சென்னை விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். #kamalhaasan #congress #rahul

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல் ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறேன். இது எனக்கான அடையாளம் இல்லை. ஏற்கனவே சினிமா மூலம் மக்களுக்கு என்னை தெரியும். தற்போது மக்களை சந்திப்பது என்பது எங்களுடைய அரசியல் பாதையில் எப்படி நடக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று மக்களிடம் கேட்டறிந்து இருக்கிறோம்.

தமிழகத்தில் வருகின்ற தேர்தலுக்கான பணிகளை எங்கள் கட்சிக்குள்ளே பேசி தயார்படுத்திக்கொண்டு இருக்கிறோம். ராகுல் காந்தியை நான் சந்தித்தது பலநாட்களுக்கு முன்பு. தற்போது இல்லை. அது கூட்டணியா? என்று இப்போது சொல்ல முடியாது.

சபரிமலை பக்தர்களின் உணர்வு குறித்து என்னிடம் கருத்து கேட்பது சரியாக இருக்காது, ஏனென்றால் எனக்கு அதுபற்றி தெரியாது. சபரிமலைக்கு நான் செல்லாததால் அவர்கள் உணர்வு குறித்து என்னால் கருத்து கூற இயலாது.

காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கர்நாடக அரசு மதிக்க வில்லை. சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கேரள மக்கள் மதிக்கவில்லை. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மத்திய அரசு வரவேற்றது. ஆனால் கேரளாவில் சபரிமலையில் ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறது. இதிலும் அரசியல் இருக்கிறது.

கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய பிறகும் பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் செல்வது என்பது அவர்களின் உரிமை மறுக்கப்படுகிறது என்று சொல்லலாம். பறிக்கப்படவில்லை.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

தொடர்ந்து அவரிடம் அமைச்சர் ஜெயக்குமார் உங்களைப் பற்றி விமர்சனம் செய்து இருப்பதுபற்றி கேட்டதற்கு அவருக்கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் என்றார்.


துரைமுருகன் உங்களைப் பற்றி கமல் நடிப்பு பிடிக்கும், கமல் அரசியல் பிடிக்காது என்று கூறி இருக்கிறாரே என்று கேட்டதற்கு கமல் பதில் அளிக்கையில் துரை முருகன் நடிப்பு பிடிக்க வில்லை என்றார்.

ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் என்னை தொடர்ந்து விமர்சிப்பதற்கு காரணம் என்மீது கொண்ட பதட்டம் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News