search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐயப்பன் கோவில்"

    • நிர்மால்ய தரிசனம் மற்றும் அபிஷேகமும், தொடர்ந்து கணபதி ஹோமமும் நடை பெறுகிறது.
    • பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்படும் நிலையில், மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அப்போதும் நெய் அபிஷேகம் உள்ளிட்ட அனைத்து பூஜைகளும் நடத்தப்படும்.

    மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை முடிந்து கடந்தமாதம் (ஜனவரி) 21-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்ட நிலையில், மாசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5மணிக்கு திறக்கப்படுகிறது.

    கோவில் தந்திர கண்ட ரரு மகேஷ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி மகேஷ், கோவில்நடையை திறந்துவைத்து தீபம் ஏற்றுகிறார். பின்பு பதினெட்டாம் படியில் இறங்கி உள்முற்றத்தில் உள்ள ஹோமகுண்டத்தில் தீ மூட்டுவார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

    இரவில் ஹரிவராசனம் பாடப்பட்டு நடை சாத்தப்படும். நாளை(14-ந்தேதி) முதல் வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை வழக்கமான பூஜைகள் அனைத்தும் நடத்தப்படும். நாளை அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடைதிறக்கப்படும். பின்பு அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம் மற்றும் அபிஷேகமும், தொடர்ந்து கணபதி ஹோமமும் நடை பெறுகிறது.

    அதுமட்டுமின்றி நாளை முதல் தொடர்ந்து 5 நாட்களும் படிபூஜை, அஷ்டாபிஷேகம், உதயாஸ்த மன பூஜை உள்ளிட் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். அந்த 5 நாட்களும் பக்தர்கள் நெய் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தலாம். தினமும் காலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலும், காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும் நெய்யபிஷேகம் நடைபெறும்.

    மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படும். மாலை 6.30 மணிக்கு தீபாராதனையும், தொடர்ந்து படிபூஜை மற்றும் புஷ்பாபிஷேகமும், 6.45 மணிக்கு அத்தாழ பூஜையும் நடைபெறும்.

    பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் உடனடி முன்பதிவு செய்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பம்பையில் உடனடி முன்பதிவு கவுண்டர்கள் செயல்படுகின்றன.

    மாசி மாத பூஜை வருகிற 18-ந்தேதி முடிகிறது. அன்றுஇரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். அதன்பிறகு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பங்குனி மாத பூஜைக்காக அடுத்தமாதம்(மார்ச்) 13-ந்தேதி மீண்டும் திறக்கப்படும்.

    • அனைவரும் நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் வைத்து மாயமாகியிருக்கின்றனர்.
    • மாயமானவர்கள் பற்றி எந்தவித முன்னேற்ற தகவல்களும் கிடைக்கவில்லை.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் கடந்த 20-ந்தேதி முடிவுக்கு வந்தது. ஒவ்வொரு ஆண்டைப்போன்று, இந்த ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு விரதமிருந்து வந்தனர்.

    பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்ததால், சீசன் காலத்தில் பல நாட்கள் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் சபரிமலைக்கு வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி சிரமப்பட்டனர்.

    இந்நிலையில் சபரிமலை நடை திறக்கப்பட்ட கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை சபரிமலைக்கு யாத்திரை வந்த பக்தர்களில் 9 பேர் மாயமாகியிருப்பதாகவும், அவர்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    அவர்களில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மற்றவர்களில் 2 பேர் ஆந்திரா மாநிலம், தெலுங்கானா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த தலா ஒருவர் ஆவார்கள். அவர்கள் அனைவரும் நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் வைத்து மாயமாகியிருக்கின்றனர்.

    மாயமானவர்கள் பெயர் விவரம் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் சென்னையை சேர்ந்த கருணாநிதி (வயது58), திருவள்ளூரை சேர்ந்த ராஜா (39), திருவண்ணாமலையை சேர்ந்த ஏழுமலை (57), பொம்மையாபாளையத்தை சேர்ந்த அய்யப்பன் (24) ஆவர்.

    இதேபோல் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்களின் பெயர் விவரமும் வெளியாகி இருக்கிறது. அவர்கள் மாயமானது குறித்து பத்தினம்திட்டா மாவட்ட காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. காணாமல்போனவர்கள் தொடர்பான வழக்கு விசாரணையை பம்பை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆனால் மாயமானவர்கள் பற்றி எந்தவித முன்னேற்ற தகவல்களும் கிடைக்கவில்லை. இதனால் மாயமானவர்களை கண்டுபிடிக்கும் பொறுப்பை பத்தினம் திட்டா மாவட்ட காவல் துறை தலைவர் அஜித், ரன்னி துணை போலீஸ் சூப்பிரண்டிடம் ஒப்படைத்துள்ளார். அவரது தலைமையிலான போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • ஒவ்வொரு ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் சபரிமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்தனர்.
    • பொன்னம்பலமேட்டில் கை முறையாகவே மகர ஜோதி ஏற்றப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்த ஆண்டும் பல லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர்.

    மகரவிளக்கு பூஜை நடந்த கடந்த 15-ந்தேதி மாலையில் மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. சன்னிதானம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த மகரஜோதியை லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் பொன்னம் பலமேட்டில் தெரியும் மகரஜோதி கையாலேயே ஏற்றப்படுகிறது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் சபரிமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்தனர். இந்த முறை குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. பக்தர்கள் எண்ணிக்கை குறித்த காவல்துறையின் கணிப்பு சரிதான்.

    சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பலர் பதிவு செய்யாமல் வருகின்றனர். மாலை அணிந்து வருபவர்களை தடுக்க முடியாது. வயதானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றவர்களைப்போன்று பதினெட்டாம்படியில் வேகமாக ஏற முடியாது.

    நெரிசல் ஏற்படும் போது போலீசார் கட்டுப்பாடுகளை விதிப்பது இயல்பான ஒன்று தான். அப்படிப்பட்ட நேரத்தில் போலீசார் கூறுவதை தேவசம்போர்டு ஏற்க வேண்டும். அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் புறக்கணிக்கப்படுவதாக கூறுவது சரியல்ல. சபரிமலைக்கு எதிரான பொய் பிரசாரத்தின் பின்னணியில் அரசியல் உள்ளது.

    அதேபோல் தேவசம் போர்டு பணத்தை அரசு எடுக்கிறது என்ற பிரசாரம் உண்மைக்கு புறம்பானது. தேவசம்போர்டு வருமானம் கோவில்களின் செலவுகளுக்கே பயன்படுத்தப்படுகிறது. பொன்னம்பலமேட்டில் கை முறையாகவே மகர ஜோதி ஏற்றப்படுகிறது. பழங்குடியின தலைவர்களால் மகரஜோதி ஏற்றப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐயப்ப பக்தர்கள் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபடலாம்.
    • பக்தர்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து மகர ஜோதி தரிசனம் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்யலாம்

    சென்னை:

    சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு மகர ஜோதியை முன்னிட்டு கடந்த 1-ந்தேதி பதினெட்டாம் படி திறக்கப்பட்டது. இதையடுத்து விரதம் இருந்து இருமுடி எடுத்து வரும் ஐயப்ப பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து தரிசனம் செய்து வருகிறார்கள்.

    ஐயப்ப பக்தர்கள் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபடலாம்.

    வருகிற 15-ந்தேதி பொங்கல் அன்று மாலை 6 மணிக்கு மேல் மகர ஜோதி தரிசனமும், சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெறுகிறது.

    மகர ஜோதி காலத்தில் அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் திறந்திருக்கும். பக்தர்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து மகர ஜோதி தரிசனம் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    • பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
    • ஏமாற்றத்துடனும், மிகுந்த மனவருத்தத்துடனும் பக்தர்கள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கூடலூர்:

    சர்வதேச ஆன்மீக தலமான சபரிமலை ஐயப்பன்கோவிலுக்கு ஆண்டுதோறும் தமிழகம் , கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய முடியாமல் திரும்பி வரும் நிலை ஏற்பட்டது. அதேபோல் சென்னை அசோக் நகரை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 40 பேர் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

    கூட்ட நெரிசல் காரணமாக அவர்கள் வந்த குழுவில் பலர் இடமாறி சென்றுவிட்டனர். பலமணிநேரம் கழித்து ஒருவரையொருவர் தேடிபிடித்து கண்டுபிடித்த நிலையில் பெரும்பாலான பக்தர்கள் சாமிதரிசனம் செய்யவில்லை என தெரியவந்தது. மீண்டும் வரிசையில் வந்து சாமி தரிசனம் செய்வது இயலாத காரியம் என்பதால் அவர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டது.

    தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவி புண்ணிய தலமாக விளங்குவதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இங்கு நீராடி பின்னர் தங்கள் யாத்திரையை தொடங்குவது வழக்கம். சுருளி மலைப்பகுதியில் ஐயப்பன்கோவில் ஒன்றும் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சபரிமலையில் செய்யப்படும் கலசபூஜை, படிபூஜை, புஷ்பாபிஷேகம், மண்டலஅபிஷேகம் உள்ளிட்ட அனைத்து பூஜைகளும் நடைபெறுவது வழக்கம்.


    இதனை அறிந்து சென்னையில் இருந்து சாமி தரிசனம் செய்யமுடியாமல் திரும்பிய ஐயப்ப பக்தர்கள் சுருளியில் உள்ள ஐயப்பன்கோவிலில் நெய்தேங்காயை உடைத்து ஐயப்பனுக்கு அபிஷகேம் செய்து வழிபாடு செய்தனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், கடந்த 16 ஆண்டுகளாக நாங்கள் சபரிமலைக்கு யாத்திரை வருகிறோம். ஆனால் இந்த ஆண்டுபோல எப்போதும் சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பியதே கிடையாது. எங்களை போன்றே பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்களும் சாமி தரிசனம் செய்யமுடியவில்லை.

    இதனால் ஏமாற்றத்துடனும், மிகுந்த மனவருத்தத்துடனும் பக்தர்கள் செல்லும் நிலை ஏற்பட்டள்ளது. போலீசாரின் கெடுபிடியால் 18-ம் படியை கூட தொட முடியவில்லை. ஆன்லைன் முன்பதிவு என்ற பெயரில் பக்தர்கள் தடுக்கப்படுகின்றனர். கடந்த காலங்களில் இருந்தது போலவே சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கவேண்டும். 2 நாள் தங்கிஇருந்துகூட ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் முடிவுசெய்வார்கள். இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் தேவஸ்தானம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

    • ஐயப்பனுக்கு தங்க அங்கி அணி விக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை.
    • நாளை வரை தங்க அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    திருவனந்தபுரம்:

    மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும், மாலையணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    ஒவ்வொரு நாளும் பக்தர்கள் வருகை அதிகரித்ததன் காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சபரிமலையில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் தலையிட்ட கேரள ஐகோர்ட்டு, பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

    அதன்பேரில் தரிசன நேரம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. ஆனால் பக்தர்கள் வருகை குறையவில்லை. இதனால் பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் நிறுத்தி நிறுத்தியே சன்னிதானத்துக்கு அனுப்பப்படுகின்றனர்.

    பல மணிநேரம் காத்திருந்தே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. நேற்றுமுன்தினம் மொத்தம் ஒரு லட்சத்து 969 பக்தர்கள் படினெட்டாம் படி ஏறி சாமி தரிசனம் செய்தனர். நேற்றும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையிலேயே இருந்தது.

    இந்தநிலையில் சபரிமலையில் மண்டல பூஜை நாளை (27-ந்தேதி) காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறுகிறது.

    ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, இன்று மதியம் பம்பைக்கு வந்து சேரும். பின்பு அங்கிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணியளவில் சன்னிதானத்தை சென்றடைகிறது.

    அதன் பிறகு ஐயப்பனுக்கு தங்க அங்கி அணி விக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்படும். ஐயப்பன் நாளை வரை தங்க அங்கியில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    சபரிமலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. அதன்படி ஆன்லைன் முன்பதிவு இன்று 64 ஆயிரமாக குறைக்கப் பட்டிருந்தது. மண்டல பூஜை நடைபெறக்கூடிய நாளைய (27-ந்தேதி) 70 ஆயிரம் பேருக்கே முன்பதிவு செய்யப்படும்.

    மண்டல பூஜை விழா முடிந்து, நாளை இரவு 11 மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்பு மகரவிளக்கு பூஜைக்காக 30-ந்தேதி மாலை மீண்டும் திறக்கப்பட உள்ளது.

    • சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவி வருகிறது.
    • குழந்தைகளுடன் வந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய போலீசார் உதவி செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் (நவம்பர்) 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இருந்த போதிலும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டு வருகின்றனர். இதன் காரணமாக சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவி வருகிறது.

    பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு தரிசன நேரம் அதிகரிப்பு, வரிசை வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை தேவசம்போர்டு செய்திருக்கிறது. இருந்த போதிலும் பக்தர்கள் கூட்டம் கட்டுக் கடங்காத வகையில் இருப்பதால், சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வெகுநேரம் காத்திருப்பது தொடர் கதையாகவே உள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட்டிருக்கும் கேரள ஐகோர்ட்டு, சபரிமலையில் ஏற்படும் நெரிசல் குறித்து ஆய்வு செய்ய 12 பேர் அடங்கிய சட்டக்குழுவை நியமிக்க பரிசீலித்து வருகிறது. மேலும் பக்தர்களின் குறைகளை ஆய்வு செய்யவும், பக்தர்களுக்கான வசதிகளை மதிப்பீடு செய்யவும் சட்டக்குழு நியமிக்கப்படும் என்றும் ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

     

    கடந்த 2 நாட்களாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மிகவும் கட்டுக் கடங்காத வகையில் இருந்தது. இதன் காரணமாக பம்பையிலேயே பக்தர்கள் வரிசையில் காத்திருந்து மலையேற வேண்டிய நிலை நிலவியது. மலைப்பாதை எங்கும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

    கோவிலில் நடைப்பந்தல், சன்னிதான பகுதி என அனைத்து பகுதியிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பதினெட்டாம் வழியாக ஒரு நிமிடத்திற்கு 80 முதல் 85 பேர் வரை செல்ல அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகளுடன் வந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய போலீசார் உதவி செய்தனர்.

    கோவில் நடை திறக்கப்பட்ட 25 நாட்களில் 16 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்திருக்கின்றனர். கடந்த சில நாட்களாகவே தினமும் 90ஆயிரம் பக்தர்கள் மெய்நிகர் வரிசை வழியாக வந்து சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். அந்த எண்ணிக்கையை நீதிமன்றம் 80 ஆயிரமாக குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் சாமி தரிசனத்துக்கான உடனடி முன்பதிவுக்கு எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இதனால் உடனடி முன்பதிவு செய்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர். இதன்காரணமாகவே பக்தர்கள் கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காத வகையில் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் சாமி தரிசனத்துக்கான உடனடி முன்பதிவை நிறுத்த வேண்டும் என்று போலீசார் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

    • பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தேவஸ்தானம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
    • அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது முதல் இருமுடி கட்டிய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அய்யப்பனை தரிசனம் செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகர பூஜைகளுக்காக கடந்த 16-ந்தேதி திறக்கப்பட்டது.

    அன்று முதல் ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை வந்து அய்யப்பனை தரிசித்து செல்கின்றனர். தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தேவஸ்தானம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக சபரிமலை மற்றும் பத்தினம்திட்டா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி வந்தது.

    இதனால் சபரிமலை வரும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது மழை ஓய்ந்து விட்டதால் பக்தர் களின் வருகை மீண்டும் அதிகரித்துள்ளது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது முதல் இருமுடி கட்டிய பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அய்யப்பனை தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்டம் நிர்வாகம் செய்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பக்தர்கள் உடனடியாக முன்பதிவு செய்யும் வகையில் நிலக்கலில் உடனடி முன்பதிவு மையம் செயல்பட்டு வருகிறது.
    • மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது.

    திருவனந்தபுரம்:

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரி மலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள்(17-ந்தேதி) காலை மண்டல பூஜை தொடங்கியது. இதையடுத்து சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.

    சன்னிதானம், நடைப்பந்தல், பம்பை உள்ளிட்ட இடங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது. தினமும் பக்தர்கள் வெகுநேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பக்தர்கள் உடனடியாக முன்பதிவு செய்யும் வகையில் நிலக்கலில் உடனடி முன்பதிவு மையம் செயல்பட்டு வருகிறது.

    வரும் நாட்களில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்குவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும் அதிகாலை 4 மணியில் இருந்து மதியம் 1 மணி வரையிலும், பின்பு மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் மொத்தம் 16 மணி நேரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

    இதன் மூலம் பக்தர்களின் கூட்ட நெரிசலை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடிவும் என்று கருதப்படுகிறது. தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டிருப்பது நிம்மதி அளிப்பதாக பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    சபரிமலையில் மண்டல பூஜை டிசம்பர் 27-ந் தேதி நடக்கிறது. மண்டல பூஜை முடிந்ததும் அன்று இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது. பின்பு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது.

    அன்றை தினம் முதல் ஜனவரி 15-ந் தேதி வரை மகர விளக்கு பூஜைகள் நடைபெறுகிறது. ஜனவரி 15-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மகரஜோதி தரிசனம் நடைபெறும். தொடர்ந்து 19-ந்தேதி வரை பூஜைகள் நடைபெறும். மறுநாள் 20-ந்தேதி பந்தள ராஜ குடும்ப பிரதிநிதி சாமி தரிசனம் செய்த பிறகு கோவில் நடை சாத்தப்படும். அன்றுடன் மகர விளக்கு பூஜை நிறைவு பெறுகிறது.

    • கோவிலில் உள்ள ஐயப்பன் சன்னதியில் குருசுவாமி ரவி குருக்கள் துளசி மாலை அணிவித்தார்.
    • பூஜைப் பொருட்கள் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

    திருவள்ளூர்:

    சபரிமலை செல்லும் பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம். இன்று கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

    திருவள்ளூரில் உள்ள தீர்த்தீஸ்வரர் கோவிலில் மாலை அணிந்து விரதம் தொடங்குவதற்காக அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்களுக்கு கோவிலில் உள்ள ஐயப்பன் சன்னதியில் குருசுவாமி ரவி குருக்கள் துளசி மாலை அணிவித்தார். மாலை அணிவதற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். ஐயப்ப பக்தர்கள் விரதம் தொடங்கியதை தொடர்ந்து நேற்று முதல் பூஜைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் சந்தனம், துளசி மாலை, காவி, நீலம் மற்றும் கருப்பு நிறத்திலான வேஷ்டி, துண்டுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

    இதேபோல் திருவள்ளூர் வல்லபமகா கணபதி கோயில், காக்களூர் சிவாவிஷ்ணு கோயில், திருப்பாசூர் வாசீஸ்வரர் கோவில், திருத்தணி சுப்ரமணியசுவாமி கோயில், திருத்தணி சுந்தர விநாயகர் கோயில், பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவில், மப்பேடு சிங்கீஸ்வரர், கூவம் ஒன்றீஸ்வரர், திருமழிசை ஓத்தாண்டீஸ்வரர், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், மீஞ்சூரில் உள்ள தர்மசாஸ்தா கோவில், சூரப்பட்டு ஐயப்பன் கோவில்களிலும் இன்று அதிகாலை முதல் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

    காஞ்சிபுரம் நகரீஸ்வரர் கோவிலில் பாண்டுரங்க குருசாமி தலைமையில் ஏராளமான மாலை அணிந்து விரதத்தை தொங்கினர். இதனைத் தொடர்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு பாலாபிஷேகமும் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

    • 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். அதன் பிறகு மகர விளக்கு பூஜை காலம் தொடங்கும்.
    • ராஜா அண்ணாமலை புரத்தில் 18 படிகளுடன் கோவில் அமைந்துள்ளது. இங்கு காலை 6 மணிக்கு நடை திறக்கிறது. அது முதல் மாலை அணியலாம்.

    சென்னை:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டது. நாளை (கார்த்திகை 1) மண்டல பூஜை காலம் தொடங்குகிறது. 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். அதன் பிறகு மகர விளக்கு பூஜை காலம் தொடங்கும்.

    இந்த காலத்தில் மாலை அணிந்து விரதம் இருந்து லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் சபரி மலைக்கு செல்வார்கள்.

    மண்டல பூஜை காலத்தில் சபரிமலைக்கு செல்பவர்கள் பம்பை வரை வாகனங்களில் செல்வார்கள். அங்கிருந்து சின்னப் பாதை எனப்படும் நீலிமலை வழியாக கால்நடையாக அய்யப்பன் சன்னிதானம் செல்வார்கள்.

    மகரவிளக்கு காலத்தில் செல்லும் பக்தர்களில் பலர் எரிமேலி வரை வாகனங்களில் செல்வார்கள். அங்கு பேட்டை துள்ளிவிட்டு அடர்ந்த காட்டுப் பகுதியான பெருவழி பாதையில் நடந்து செல்வார்கள். பேரூர்தோடு, காளைகட்டி, அழுதாமலை, கல்லிடும் குன்றம், கரிமலை, பெரியானை வட்டம் வழியாக பம்பை சென்றடைவார்கள் அங்கிருந்து நீலிமலை வழியாக சன்னிதானம் செல்வார்கள்.

    நாளை விரதத்தை தொடங்கும் அய்யப்ப பக்தர்கள் அதிகாலையில் துளசி மாலை அணிவார்கள். அன்றாட வாழ்வியலில் இருந்து மாறுபட்டு துறவு வாழ்க்கை போல் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றி கொள்வார்கள். கருப்பு, நீலம், காவி ஆடைகள் அணிந்து, காலில் செருப்பு அணியாமல் இருப்பார்கள். தினமும் காலையிலும், மாலையிலும் குளிர்ந்த நீரில் குளித்து சரணம் சொல்லி பூஜை செய்வார்கள்.

    விரத காலம் முழுவதும் உணவு கட்டுப்பாடு, மனக்கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். புனிதமான மாலை அணியும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. இதற்காக சென்னையில் உள்ள முக்கியமான அய்யப்பன் கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கோடம்பாக்கம் மகாலிங்க புரத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஏராளமானவர்கள் மாலை அணிவார்கள். கடந்த ஆண்டு சுமார் 15 ஆயிரம் பேர் மாலை அணிந்ததாகவும் இந்த ஆண்டு அதைவிட அதிகமாக இருக்கும் என்று கருதுவதால் கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக கூறினார்கள்.

    அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கிறது. அதுமுதல் மாலை அணியலாம். கோவிலிலேயே மாலை மற்றும் நீலவேஷ்டிகள் விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். டிக்கெட் கட்டணமாக ரூ.10 வசூலிக்கிறார்கள்.

    ராஜா அண்ணாமலை புரத்தில் 18 படிகளுடன் கோவில் அமைந்துள்ளது. இங்கு காலை 6 மணிக்கு நடை திறக்கிறது. அது முதல் மாலை அணியலாம். டிக்கெட் கட்டணம் ரூ.10 செலுத்தி மாலை அணிந்து கொள்ளலாம். மாலை, வேட்டிகள் விற்பனைக்காக தனியாக கடைகள் உள்ளன.

    மடிப்பாக்கம் அய்யப்பன் கோவிலில் 18 படிகள் அமைந்துள்ளது. மாலை அணிந்து இருமுடி கட்டி செல்பவர்கள் மட்டும் படிகள் வழியாக ஏறி செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    இன்று சுத்தி பூஜை நடந்தது. நாளை காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் மாலை அணியலாம். இங்கும், மாலை, வேஷ்டி, விற்பனைக்கு உள்ளது. அர்ச்சனை கட்டணமாக ரூ.10 செலுத்த வேண்டும். காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து பறை எடுப்பு (நெல் அளப்பது) நடைபெறுகிறது. ஊர்வலமாக அய்யப்பா நகர் தெருவில் அழைக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று நெல் அளப்பார்கள்.

    மாலையில் படி பூஜை நடக்கிறது. தொடர்ந்து 18 நாட்கள் படி பூஜை நடக்கிறது.

    மேடவாக்கம் அருகில் உள்ள வெள்ளக்கல்லில் 18 படியுடன் கூடிய அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டதும் பக்தர்கள் மாலை அணியலாம். தினமும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறுவது போல் பூஜைகள் நடைபெறும்.

    திருவொற்றியூர் ஹைரோடு டோல்கேட் அருகே வடசென்னை அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நாளை காலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. நிர்மால்ய தரிசனம், அபிஷேகம் முடிந்ததும் அய்யப்பனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெறும். மணலி, காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளவர்கள் ஏராளமானோர் மாலை அணிந்து கொள்வார்கள்.

    அண்ணாநகர் அய்யப்பன் கோவில் நாளை காலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. உடனே பக்தர்கள் மாலை அணிய தொடங்குவார்கள் என்றனர்.

    இந்த அய்யப்பன் கோவில்கள் அனைத்திலும் மாலை அணிவதோடு, மாலை அணிந்த பக்தர்கள் இருமுடி கட்டவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • கோவில் நடை மீண்டும் ஆகஸ்டு 9-ந்தேதி திறக்கப்படும்.
    • 10-ந் தேதி நிறைபுத்தரிசி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடை திறக்கப்பட்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும். இதுதவிர ஒவ்வொரு மலையாள மாதத்தின் (நிகரான தமிழ் மாதம்) முதல் 5 நாட்களிலும் விஷு, ஓணம் பண்டிகை, பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் சபரிமலைக்கு திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்தநிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நேற்று மாலையில் திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை நடத்தினார். தொடர்ந்து கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு 18-ம் படி வழியாக அனுமதிக்கப்பட்டனர். நேற்று மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறவில்லை. மாத பிறப்பையொட்டி கோவில் கருவறை மற்றும் சன்னிதான சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது.

    இன்று (திங்கட்கிழமை) முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் கோவிலில் வழக்கமான நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், சகஸ்ரகலசாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை போன்றவை நடைபெறும்.

    21-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

    ஆடிமாத பூஜையில் பக்தர்கள் வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

    மேலும் கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருவனந்தபுரம், கோட்டயம், செங்கன்னூர், பத்தனம்திட்டை, கொட்டாரக்கரை, எர்ணாகுளம் உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதி மாலையில் திறக்கப்படும். 10-ந் தேதி நிறைபுத்தரிசி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.

    ×