என் மலர்
இந்தியா

கோயில் to நடிகரின் வீடு.. சபரிமலை தங்கத் தகடுகளில் நீடிக்கும் மர்மம் - புதிய ஆவணங்கள் கசிவு!
- ஆகஸ்ட் 29 அன்றுதான் சென்னை 'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' நிறுவனத்தை அடைந்தன.
- சபரிமலை கோயிலில் நிறுவப்பட்டுள்ள பலகைகள் முழுத் தங்கமா, அல்லது தங்க முலாம் பூசப்பட்ட செம்பா?
சபரிமலையில் துவார பாலகர் சாமிசிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பியபோது 4.600 கிலோ தங்கம் மாயமானதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள கேரள பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கேரள சட்டசபையில் இந்த விவகாரம் எதிரொலித்து அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி வருகின்றன.
ஆனால் புதுப்பித்தல் நடைமுறையில் எந்த குளறுபடியும் நிகழவில்லை என்றும் வரும் 17 ஆம் தேதி நடை திறக்கப்படும்போது தகடுகள் மீண்டும் பொருத்தப்படும் என்றும் தேவசம் போர்டு தெரிவித்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்த ஒரு சில ஆவணங்கள் வெளியாகி பேசுபொருளாகி வருகிறது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, 2019 ஜூலை 19 அன்று அகற்றப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட பலகைகளின் எடை 42.8 கிலோகிராம் எனக் கணக்கிடப்பட்டது.
மறுநாள் (ஜூலை 20, 2019) பலகைகள் உபயதாரர் உன்னிகிருஷ்ணன் பொட்டி என்பவரின் பொறுப்பில், முலாம் பூசும் பணிக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டன. ஆனால், இவை 39 நாட்கள் தாமதமாக ஆகஸ்ட் 29 அன்றுதான் சென்னை 'ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்' நிறுவனத்தை அடைந்தன.
சென்னை நிறுவனத்தில் பலகைகள் பதிவு செய்யப்பட்டபோது, அவற்றின் எடை 38.25 கிலோகிராம் எனப் பதிவாகியிருந்தது. இதன் மூலம், பயணத்தின் போது சுமார் 4.54 கிலோகிராம் தங்கம் அல்லது தங்க முலாம் பூசிய செம்பு குறைந்திருந்தது தெரியவந்துள்ளது.
பலகைகள் சென்னைக்குச் செல்லும் வழியில் நேரடியாக கொண்டு செல்லப்படாமல் வழியில் பல இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
பலகைகள் கோட்டயத்தில் உள்ள ஒரு தனியார் கோயில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கோயில்கள், பெங்களூருவில் உள்ள அய்யப்பா ஆலயம் மற்றும் கேரள நடிகர் ஜெயராமின் வீட்டிற்கு ஒரு தனியார் பூஜைக்காகவும் எடுத்துச் செல்லப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
சென்னை ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனமும், இந்த கவசங்களுக்கு நடிகர் ஜெயராமின் சென்னை வீட்டில் வைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக ஒரு ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.
உபயதாரர் உன்னிகிருஷ்ணன் பொட்டி 2019 இல் அனுப்பிய மின்னஞ்சலில், தங்கத்தை ஒரு திருமணம் உள்ளிட்ட தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பயன்படுத்த அனுமதி கோரியிருந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தற்போது சபரிமலை கோயிலில் நிறுவப்பட்டுள்ள பலகைகள் முழுத் தங்கமா, அல்லது தங்க முலாம் பூசப்பட்ட செம்பா?. திரும்பக் கொண்டுவரப்பட்ட பலகைகள் அசல் துண்டுகள்தானா, அல்லது அதுபோன்ற பிரதிகள் தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கேரள உயர் நீதிமன்றம் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க கேரள அரசு ஏடிஜிபி வெங்கடேஷ் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆறு வாரங்களுக்குள் அதன் அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. இதன் பின்னர் உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






