செய்திகள்

தஞ்சை, கும்பகோணத்தில் தமிழிசையை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2018-06-28 14:13 GMT   |   Update On 2018-06-28 14:13 GMT
டாக்டர் ராமதாஸ்-அன்புமணி ஆகியோரை தொடர்ந்து இழிவாக பேசி வரும் தமிழிசை சவுந்தர்ராஜனை கண்டித்து தஞ்சை ரெயிலடியில் பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர்:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்-அன்புமணி ராமதாஸ் ஆகியோரை தொடர்ந்து இழிவாக பேசி வரும் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனை கண்டித்து தஞ்சை ரெயிலடியில் பா.ம.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தின்போது டாக்டர் ராமதாசை வரம்பு மீறி விமர்சித்து பேசி வரும் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் பா.ம.க. நிறுவனர் ராமதாசிடம், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் குஞ்சிதபாதம் தலைமை தாங்கினார். கோரை கேசவன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கோபிசந்தர் வரவேற்றார். நகர பொருளாளர் அருண்குமார், தஞ்சை மேற்கு ஒன்றிய செயலாளர் பாபு, மாவட்ட பொருளாளர் ரேணுகாகோவிந்தராஜன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் யோகலட்சுமி, நகர பொருளாளர் ராஜாத்தி அம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

கும்பகோணத்தில் பா.ம.க. சார்பில் காந்தி பூங்கா அருகில் உழவர் பேரியக்கம் மாநில தலைவர் கோ.ஆலயமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

பா.ம.க. நிறுவனர் ராமதாசை பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், மரம்வெட்டி என்று கூறியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டன முழக்கம் எழுப்பினர்.

Tags:    

Similar News