செய்திகள்

ஜெயலலிதா கைரேகை வழக்கில் அ.தி.மு.க.வினர் கோர்ட்டில் தடை பெற்றுள்ளனர்: சரவணன்

Published On 2017-12-09 08:08 GMT   |   Update On 2017-12-09 08:08 GMT
ஆர்.கே. நகர் தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்பதால் ஜெயலலிதா கைரேகை வழக்கில் அ.தி.மு.க.வினர் உச்சநீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளனர் என மதுரையில் டாக்டர் சரவணன் கூறினார்.
மதுரை:

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கைரேகை தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து இருப்பதாக அரசு வக்கீல் கோர்ட்டில் தெரிவித்தார்.

இது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த தி.மு.க. மாநில மருத்துவரணி துணைத்தலைவரும், திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டவருமான டாக்டர் சரவணன் இன்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக நான் (டாக்டர் சரவணன்) போட்டியிட்டேன்.


இந்த தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே. போஸ் தாக்கல் செய்த வேட்பு மனுவில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா கையெழுத்துக்கு பதிலாக கைரேகை வைக்கப்பட்டிருந்தது. அதில் பல்வேறு முரண்பாடுகள் இருந்ததால் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முன்பு ஆஜராகியும் விளக்கம் அளித்தேன்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நடந்தபோது பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை ஜெயிலர், ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பான சி.டி. ஆதாரத்தை ஐகோர்ட்டு உத்தரவுப்படி தாக்கல் செய்தார்.

அப்போது அரசு வக்கீல் குறுக்கிட்டு இந்த வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை வருகிற 15-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற தடை தொடர்பாக இன்னும் ஒருவார காலத்தில் எங்கள் கட்சி மேலிடத்தில் கலந்து பேசி பதில் மனு தாக்கல் செய்வேன்.

ஜெயலலிதா கைரேகை தொடர்பான வழக்கின் முடிவு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தங்களுக்கு பாதிப்பை ஏற்படும் என்பதால் அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு செயல்பட்டு உச்சநீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.

அரசியல் உள்நோக்கத்துடன் இது நடைபெற்றுள்ளது. இந்த தடையை நீக்க சட்டப்படி பாடுபடுவேன். ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்றதாக கூறப்படும் டாக்டர் பாலாஜி முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்து வருகிறார். எனவே தான் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த கோரிக்கை விடுத்தோம்.

ஜெயலலிதா சுய நினைவுடன் இருக்கும் போது அவரிடம் கைரேகை பெற்றதாக தெரியவில்லை. உயிரோடு இருக்கும் போது வைக்கப்படும் கைரேகையில் வியர்வை சுரப்பி, ரத்த ஓட்டம் போன்றவை உயிரோட்டமாக இருக்கும். ஆனால் அ.தி.மு.க. வேட்பாளர் வேட்பு மனுவில் உள்ள கைரேகையில் அப்படி இல்லை. இதை நான் மருத்துவர் என்ற முறையில் சொல்கிறேன்.

எனவே ஜெயலலிதா கைரேகையை எரோஸ் கோபிக் ஆய்வுக்கு அனுப்ப நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமி‌ஷன் முன்பு கோரிக்கை வைப்பேன்.

இந்த விவகாரத்தில் மக்களுக்கு முழு உண்மையும் தெரிய தி.மு.க. மேலிடத்தில் பேசி சட்ட நடவடிக்கை எடுப்பது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News