செய்திகள்

ஜெயலலிதா நினைவிடம் கட்ட தடை விதிக்க வேண்டும்: ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு

Published On 2017-07-24 07:52 GMT   |   Update On 2017-07-24 07:52 GMT
சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்ட தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை:

ஐகோர்ட்டில், வக்கீல் எஸ்.துரைசாமி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இவரது உடல் மெரினா கடற்கரையில், அறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். சமாதிகளுக்கு அருகே புதைக்கப்பட்டுள்ளது.

தற்போது உடல் புதைக்கப்பட்டுள்ள இடத்தில், பல கோடி ரூபாய் செலவில், ஜெயலலிதாவின் நினைவிடம் கட்டப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது சட்டவிரோதமாகும்.

மேலும், இந்திய கடலோர ஒழுங்குமுறை சட்டத்தின் படி, கடலோர பகுதிகளில் குறிப்பிட்ட தூரத்துக்கு கட்டிடம் எதுவும் கட்டக் கூடாது.


இந்த சட்டவிதிகளை மீறி, ஜெயலலிதாவின் உடலை அங்கு புதைத்துள்ளனர். தற்போது, அங்கு நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்க தடை விதிக்க வேண்டும். மேலும், சட்டவிரோதமாகவும், கடலோர ஒழுங்குமுறை சட்டத்துக்கு எதிராகவும், கடலுக்கு மிக அருகில் புதைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து, வேறு இடத்தில் புதைக்க வேண்டும்.

இதுகுறித்து தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சே‌ஷசாயி ஆகியோர் முன்பு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கோர்ட்டில் ஆஜராகி வாதிட்டார்.

இந்த மனுவுக்கு தமிழக தலைமை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், மத்திய சுற்றுச்சூழல் துறையின் செயலாளர், தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் ஆகியோர் 4 வாரத்துக்குள் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News