search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெரினா கடற்கரை"

    • கலங்கரை விளக்கம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி வேகமாக நடைபெறுகிறது.
    • ரெயில் நிலையம் கட்டுவது சவாலானது.

    சென்னை:

    சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தில் 116.1 கி.மீ நீளத்திற்கு மூன்று வழித்தடங்கள் ரூ.63,246 கோடியில் செயல்படுத்தப்படுகிறது.

    மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை (45.4 கி.மீ) 3-வது வழித்தடமும், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை (26.1 கி.மீ.) 4-வது வழித்தடமும், மாதவரம் முதல் சோழிங்க நல்லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்தடமும் அமைக்கப்படுகிறது.

    2-வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் 65 சதவீதம் உயர்மட்ட பாதையாகவும் மீத முள்ளவை சுரங்கப் பாதையாகவும் அமைகிறது.


    திருமயிலையில் கடந்த செப்டம்பர் மாதம் சுரங்கம் தோண்டும் எந்திரம் மூலம் பணி தொடங்கியது.

    பிளமிங்கோ என்ற சுரங்கம் தோண்டும் எந்திரமும் ஈகிள் என்ற 2-வது எந்திரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

    இந்த இரண்டு எந்திரங்க ளும் மெரினா கடற்கரை காந்திசிலை அருகே உள்ள கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, திருமயிலை மெட்ரோ வரை கிட்டத்தட்ட 2 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுகிறது.

    சுரங்கம் தோண்டும் எந்திரம் இன்னும் ஒரு மாதத்தில் கலங்கரை விளக்கத்தை வந்தடையும். வருகிற 20-ந் தேதி பிளமிங்கோ எந்திரமும், ஏப்ரல் 20-ந் தேதி ஈகிள் இரண்டாவது எந்திரமும் அதே இடத்தை அடையும்.

    இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், பிளமிங்கோ எந்திரம் 134 மீட்டர் நீள சுரங்கப்பாதையை முடித்து தற்போது மெரினா கடற்கரையில் உள்ள வீரமா முனிவர் சிலைக்கு அருகில் உள்ளது.

    அதே நேரத்தில் ஈகிள் எந்திரம் 71 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதையை முடித்துள்ளது. 19-ந் தேதி முக்கியமான பணிகள் தொடங்கப்படும்.

    கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில் நிலையத்தின் மேற்கூரை மற்றும் அடித்தள அடுக்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கலங்கரை விளக்கம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி வேகமாக நடைபெறுகிறது.


    திருமயிலையில் சில கடைகளை அகற்றுவதில் சிரமமாக உள்ளது. அதனால் தண்டவாளத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை என்றார்.

    இது பற்றி மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் எம்.ஏ.சித்திக் கூறுகையில், திருமயிலை மெட்ரோ 3 மற்றும் 4 வழித்தடங்களின் பரிமாற்றமாக இருக்கும். மேலும் அருகில் உள்ள சில ரெயில் நிலையங்கள் 2028-ம் ஆண்டில் கடைசி இரண்டு நிலையங்களாக திறக்கப்படும்.

    ஏனென்றால் இந்த ரெயில் நிலையம் கட்டுவது சவாலானது. ஆனாலும் நடைபாதை 4-ல் தொடரும் கலங்கரை விளக்க மெட்ரோ, திருமயிலை மெட்ரோ இயக்கப்படுவதற்கு முன்பு திறக்கப்படும்.

    கலங்கரை விளக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் தயாரானாலும் போரூர், பூந்தமல்லி வரை வசிக்கும் மக்கள் எளிதாக மெட்ரோ ரெயிலில் மெரினா கடற்கரையை அடையலாம் என்றார்.

    • சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் "ரோடமைன் பி" கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • பச்சை, ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிடக்கூடாது என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    சென்னை:

    புதுச்சேரி கோரிமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் 'ரோடமைன் பி' என்ற உடலுக்கு கேடு தரும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அதில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து புதுவையில் ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்கள் பொதுமக்களை கலவரப்படுத்தியது. பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, சென்னை மெரினாவில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாதிரிகளை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கும் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் "ரோடமைன் பி" கெமிக்கல் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமி சேர்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பச்சை, ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிடக்கூடாது என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தயாரிப்பு நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு, உணவு பாதுகாப்புத்துறைக்கு பரிந்துரை செய்தது.

    இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் தமிழகத்தில் தடை விதிக்கப்படும்.

    * உணவு பாதுகாப்புத்துறையின் பரிந்துரையின்பேரில் பஞ்சு மிட்டாய் தமிழகத்தில் தடை செய்வது குறித்து முடிவு செய்யப்படும்.

    * முதல்வருடனான இன்றைய சந்திப்பின்போது பஞ்சு மிட்டாய் குறித்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

    * விரைவில் உணவு பாதுகாப்புத்துறை அறிக்கை வெளியாகும் என்று தெரிவித்தார்.

    • பஞ்சு மிட்டாய் விற்றவர்களிடம் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பஞ்சு மிட்டாய் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
    • ரசாயனம் கலந்த பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பித்தால் குடலில் ஆறாத புண் ஏற்பட்டு, புற்றுநோயாக மாறும் அபாயம் இருக்கிறது.

    சென்னை:

    புதுச்சேரி கோரிமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் 'ரோடமின் பி' என்ற உடலுக்கு கேடு தரும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ரசாயனம் மனிதர்கள் சாப்பிட உகந்தது இல்லை என்பதும், தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடியது என்றும் தெரியவந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்கள் பொதுமக்களை கலவரப்படுத்தி இருக்கிறது.

    பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் சதாசிவம், செல்வம், அழகுபாண்டி, கண்ணன் உள்ளடங்கிய அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டு, கடற்கரையில் பஞ்சு மிட்டாய் விற்ற அனைவரையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பஞ்சு மிட்டாய் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன.

    இதன் மாதிரிகள் கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த ஆய்வு நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிலர் வாங்கிய பஞ்சு மிட்டாய்களை உடனடியாக விற்பனையாளரிடமே கொடுத்து காசு வாங்கி சென்ற சம்பவங்களும் அரங்கேறின. இந்த ஆய்வு மெரினாவில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து அதிகாரி சதீஷ்குமார் கூறியதாவது:-

    புதுச்சேரி விவகாரத்தை தொடர்ந்து மெரினாவில் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளோம். இதில் கைப்பற்றப்பட்ட பஞ்சு மிட்டாய்களில் ரோடமின் பி என்ற உயிர்க்கொல்லி ரசாயனம் இருப்பது தெரியவந்தால், அதை விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு பஞ்சு மிட்டாய் பாக்கெட்டுகளை சப்ளை செய்தவர்கள் மீதும் நடவடிக்கை பாயும். பரிசோதனை முடிவு ஓரிரு நாளில் வெளிவரும்.

    இந்த ரசாயனம் கலந்த பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பித்தால் குடலில் ஆறாத புண் ஏற்பட்டு, பின்னர் புற்றுநோயாக மாறும் அபாயமும் இருக்கிறது. சிறுநீரக பிரச்சனைகளை தாண்டி மூளை செயலிழக்கும் அபாயமும் இருக்கிறது. சட்டை, தோல் பொருட்களில் பயன்படுத்தப்படும் இந்த வகை ரசாயன பொருட்கள் உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடியது. இயற்கைக்கு மாறான நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெற்றோர்களும், உறவினர்களுடன் ஆழமாக பேசி மகிழ்ந்ததில் குழந்தைகள் கண்காணிக்க தவறிவிட்டனர்.
    • போலீஸ் நிலையம் எண் அடங்கிய ஸ்டிக்கர் இடம் பெற்றதால் காணாமல் போன குழந்தைகளை எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது.

    சென்னை:

    காணும் பொங்கலை தினத்தில் சென்னை வாசிகள் நேற்று உற்சாகமாக கொண்டாடினார்கள். கடற்கரை, பூங்காக்களை ஆக்கிரமித்து கொண்டு குடும்பத்துடன் குதூகலமாக ஆடிப்பாடினார்கள். அதில் முக்கியமான பொழுது போக்கு மையமாக மெரினா கடற்கரை இடம் பெற்றது.

    மெரினா கடற்கரையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் கூடி மகிழ்ந்தனர். நண்பர்கள், உறவினர்கள் குடும்பமாக கடற்கரை மணல் பரப்பில் அமர்ந்தும், ஓடி விளையாடியும் நேரத்தை செலவிட்டனர். அங்கு அசம்பாவித சம்பவம் எதுவும் நடக்காமல் இருக்க போலீசார் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    12 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர் மூலம் கண்காணித்தனர். கடலில் குளிக்க தடை விதித்து இருந்த நிலையில் மீறி வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.

    உழைப்பாளர் சிலை முதல் களங்கரை விளக்கம் வரை உள்ள மணல் பகுதி யில் குடும்பமாக அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவு, நொறுக்கு தீணிகளை ஒருவருக்கொருவர் பரிமாறி சாப்பிட்டனர். அப்போது தங்கள் குழந்தைகளை மணலில் விளையாடவிட்டு பார்த்து ரசித்தனர். தங்கள் அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் திடீரென திசைமாறி சென்றனர்.

    பெற்றோர்களும், உறவினர்களுடன் ஆழமாக பேசி மகிழ்ந்ததில் குழந்தைகள் கண்காணிக்க தவறிவிட்டனர். இதனால் பலரது குழந்தைகள் காணாமல் போனது.

    இரவிலும் பகலை போல வெளிச்சத்தை பரப்பும் உயர் மட்ட மின்விளக்குகள் அங்கு இருந்த போதிலும் குழந்தைகள், பெற்றோர் தெரியாமல் தடுமாறி சென்றன. அருகருகே குழு குழுவாக அமர்ந்து இருந்ததால் குழந்தைகளுக்கு தங்கள் பெற்றோரை கண்டு பிடிப்பதில் குழப்பம் ஏற்பட்டு அலைந்து திரிந்தனர். சில குழந்தைகள் அழத்தொடங்கின.

    இதற்கிடையில் அடுத்த சில நிமிடங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை காணாமல் பதறி போனார்கள். அங்குமிங்கும் அலைந்து திரிந்தார்கள்.

    காணும் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடிய குடும்பத்தினர், குழந்தைகள் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தனர். கடற்கரை பகுதியில் ஓடி திரிந்தனர்.

    பின்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் அழுது கொண்டே தெரிவித்தனர். அவர்களை சமாதானப்படுத்திய போலீசார் கொஞ்ச நேரத்தில் குழந்தைகளை உங்களிடத்தில் ஒப்டைக்கிறோம். தைரியமாக இருங்கள் என்று ஆறுதல் படுத்தினார்கள். 'மைக்' மூலம் போலீசாரை உஷார்படுத்தி தனியாக சுற்றித் திரியும் குழந்தைகளை கண்காணித்தனர்.

    மெரினா கடற்கரை பகுதி முழுவதும் பெண் மற்றும் ஆண் போலீசார் சல்லடை போட்டு தேடினார்கள்.

    போலீசார் எடுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிறு குழந்தைகளின் கழுத்தில் அடையாள அட்டை ஒன்று மாட்டப்பட்டு இருந்தது. அதில் குழந்தைகளின் பெயர், பெற்றோரின் செல்போன் எண், போலீஸ் நிலையம் எண் அடங்கிய ஸ்டிக்கர் இடம் பெற்றதால் காணாமல் போன குழந்தைகளை எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது.

    மெரினா கடற்கரை கூட்டத்தில் 25 குழந்தைகளும், எலியட்ஸ் கடற்கரையில் 2 குழந்தைகளும், மொத்தம் 27 குழந்தைகள் காணாமல் போய் உடனடியாக மீட்டு பெற்றோர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    குழந்தைகளை காணாமல் பதறிய பெற்றோர்கள் கிடைத்தவுடன் கண்ணீர்விட்டனர். போலீசாருக்கு நன்றியை தெரிவித்து கடற்கரையில் இருந்து கடந்து சென்றனர்.

    • மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.
    • தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணிப்பு.

    பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் தமிழர்கள் மத்தியில் களைகட்டி வருகிறது. தை திருநாளை முன்னிட்டு, நேற்று மாட்டுப் பொங்கலும், இன்று காணும் பொங்கலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    காணும் பொங்கலான இன்று தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக கூடியுள்ளனர். இதனால் கடற்கரை பகுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

    இந்த ஆண்டும் காணும் பொங்கலை வழக்கமான உற்சாகத்தோடும், மிகுந்த ஆர்வமுடன் கொண்டாடி வருகின்றனர்.

    இதேபோல், சென்னையில் மெரினா கடற்கரையில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.

    முன்னதாக, மெரினாவில் கூடும் மக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர். 

    போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோர் மேற்பார்வையில் மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.

    மெரினா கடற்கரை எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகள் முழுவதிலும் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    காணும் பொங்கல் தினத்தில் திரளாக மக்கள் கூடுவார்கள் என்பதால் அன்றைய தினம் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பெண் காவலர்கள் ஓய்வு எடுப்பதற்கு 21 அறைகள் உள்ளன.
    • போதை ஊசி பயன்பாட்டை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    சென்னை பூக்கடை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஐசக் தெருவில் பெண் காவலர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டிருந்த ஓய்வு அறைகளுடன் கூடிய கட்டிடம் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த தங்கும் விடுதி கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது.

    போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தங்கும் விடுதியை திறந்து வைத்தார். கூடுதல் கமிஷனர் ஆஸ்ரா கார்க், மற்றும் போலீஸ் அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

    பின்னர் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெண் காவலர்கள் ஓய்வு எடுப்பதற்கு 21 அறைகள் உள்ளன. 57 பெண் காவலர்கள் தங்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளூர் காவலர்களும், வெளியூர்களில் இருந்து சென்னை வரும் காவலர்களும் இந்த அறைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

    வழக்குகள் தொடர்பாக கோர்ட்டுகளுக்கு வருபவர்களுக்கு இந்த அறைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் தினமும் 100 ரூபாய் கொடுத்து இங்கு தங்கி கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கேள்வி: இரவு நேரத்தில் பெண் போலீசாரிடம் தகராறு செய்யும் சம்பவங்கள் எதிரொலியாக அவர்களுக்கு துப்பாக்கி வழங்கப்படுமா?

    பதில்: சென்னை மாநகரம் அனைவருக்கும் பாதுகாப்பான நகரமாகும். குறிப்பாக பெண்களின் பாதுகாப்புக்கு உகந்த நகரம் என்று புள்ளி விவரங்களும் கூறுகின்றன. எனவே இரவு நேரத்தில் ரோந்து செல்லும் பெண் போலீசாருக்கு துப்பாக்கிகளை கொடுக்க தேவையில்லை.

    கேள்வி: சென்னையில் போதை ஊசி பயன்பாடு அதிகரித்துள்ளதே?

    பதில்: போதை ஊசிகள், மாத்திரைகள் பயன்படுத்துவதை தடுக்க சுகாதாரத்துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசித்து வருகிறோம். போதை ஊசி பயன்பாட்டை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

    காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரையில் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு போலீசாரை இடமாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இடமாற்றம் தொடர்பான முதல் பட்டியல் வருகிற 31-ந்தேதி வெளியாகும்.

    இவ்வாறு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கூறினார்.

    • மெரினா கடற்கரை எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகள் முழுவதிலும் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர்.
    • கூட்ட நெரிசலில் பிக் பாக்கெட், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் அதனை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வருகிறார்கள். வருகிற 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் மறுநாள் 16-ந் தேதி மாட்டுப் பொங்கலும் அதற்கு மறுநாள் (17-ந் தேதி) காணும் பொங்கலும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

    காணும் பொங்கல் அன்று தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பொழுதை போக்குவார்கள். இதனால் கடற்கரை பகுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதும்.

    இந்த ஆண்டும் காணும் பொங்கலை வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாட மக்கள் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர். மெரினாவில்

    சென்னையில் மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் அன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.

    இதன் படி வருகிற 17-ந் தேதி அன்று மெரினாவில் கூடும் மக்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு தேவை யான பாதுகாப்பு ஏற்பாடு களை போலீசார் செய்து வருகிறார்கள். போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோர் மேற்பார்வையில் மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    மெரினா கடற்கரை எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட கடலோர பகுதிகள் முழுவதிலும் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர்.

    காணும் பொங்கல் தினத்தில் திரளாக மக்கள் கூடுவார்கள் என்பதால் அன்றைய தினம் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் கடலில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக கடற்கரை யோரங்களில் தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டு உள்ளன. இதையும் தாண்டி மக்கள் கடலில் இறங்கி விடக்கூடாது என்பதற்காக போலீஸ் குதிரைப்படை வீரர்களை கொண்டும் கண்காணிக்கப்பட உள்ளது.

    மெரினாவில் கூட்ட நெரிசலின் போது குழந்தைகள் காணாமல் போனால் அவர்களை கண்டுபிடிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்காக மெரினாவுக்கு பெற்றோருடன் வருகை தரும் குழந்தைகளின் கைகளில் பாதுகாப்பு வளையம் ஒன்றை கட்டிவிட போலீசார் முடிவு செய்துள்ளனர். அந்த வளையத்தில் போலீஸ் உதவி மைய செல்போன் எண்களும், பெற்றோர்களின் செல்போன் எண்களும் இடம் பெற்றிருக்கும். இதன் மூலமாக மாயமாகும் குழந்தைகளை உடனுக்குடன் கண்டு பிடிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    கூட்ட நெரிசலில் பிக் பாக்கெட், செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    டிரோன்கள் மூலமாகவும் வானில் வட்டமடித்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மெரினாவில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்தும் போலீசார் பைனாகுலர் மூலமாக கூட்டத்தை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அண்ணா சதுக்கம் மற்றும் மெரினா போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • மெரினா கடற்கரையில் கடந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் ஒரு லட்சம் பேர் திரண்டனர்.
    • தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    2023-ம் ஆண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) விடைபெறுகிறது. நாளை நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கப்போகும் 2024-ம் ஆண்டை வரவேற்க உலகமே தயாராகி வருகிறது.

    நாடு முழுவதும் நாளை நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்ட உள்ளன. தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டுவது வழக்கம். இந்த ஆண்டும் சென்னையில் புத்தாண்டை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

    கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றன.

    புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து சென்னை மாநகர போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி உள்ளனர். கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    நாளை இரவு 7 மணியில் இருந்து புத்தாண்டு தினமான ஜனவரி 1-ந்தேதி காலை 6 மணி வரை மெரினா கடற்கரை சாலையில் எந்த வாகனங்களும் செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மெரினா கடற்கரையில் கடந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் ஒரு லட்சம் பேர் திரண்டனர். இந்த ஆண்டும் அதேபோன்று பொதுமக்கள் அதிகளவில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து அங்கு தற்காலிக புற காவல் நிலையங்களை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் நாளை இரவு ஈடுபட உள்ளனர். போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, அஸ்ரா கார்க் சுதாகர் மற்றும் இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோரின் மேற்பார்வையில் புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. மெரினாவில் நாளை இரவு குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    கடற்கரை பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து பைனாகுலர் மூலமாக போலீசார் கண்காணிக்க உள்ளனர். கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக அவர்களது கைகளில் அடையாள வளையம் ஒன்றும் கட்டப்படுகிறது.

    அதில் பெற்றோர்கள் மற்றும் போலீசாரின் உதவி எண்கள் இடம் பெற்று இருக்கும். இதன் மூலம் காணாமல் போய் தவிக்கும் குழந்தைகளை உடனடியாக மீட்க முடியும் என்பதால் இந்த நடைமுறையை கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை போலீசார் பின்பற்றி வருகிறார்கள்.

    சென்னை மாநகரில் மட்டும் சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டு உள்ளது.

    அதில் அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்தி முடிக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகரில் நாளை நள்ளிரவில் போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு விட்டு மதுபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது என்றும் போலீசார் எச்சரித்து உள்ளனர்.

    கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களில் மதுபோதையில் வருபவர்களை வீட்டில் கொண்டு போய் விடுவதற்கும் நிகழ்ச்சி நடத்துபவர்கள் வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை மாநகரில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பெரிய மேம்பாலங்களை நாளை நள்ளிரவில் மூடுவதற்கும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். விபத்துகளை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புத்தாண்டு தினத்தில் வாலிபர்கள் சிலர் பைக் ரேசில் ஈடுபடுவார்கள் அதனை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக சுமார் 500 இடங்களில் சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்காக ஒவ்வொரு பகுதிகளிலும் போலீஸ் ரோந்து வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

    புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடித்து அமைதியான முறையில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று சென்னை மாநகர காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    சென்னையில் உள்ள 100 முக்கிய கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுதலங்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நாளை மாலை முதல் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ. குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால், மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல் ஆளிநர்கள், குதிரைப்படைகள் மற்றும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மணல் பகுதியிலும் தற்காலிக காவல் உதவி மைய கூடாரங்கள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

    மெரினா, சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலையிலும் இதுபோன்று உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்படும். மேலும், முக்கிய இடங்களில் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல் துறை, கடலோர பாதுகாப்பு குழுமம், மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையும், எச்சரிக்கை பதாகைகளும் பொருத்தப்பட்டு கடலில் மூழ்கி உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக குதிரைப் படைகள் கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும்.

    மேலும், அவசர மருத்துவ உதவிக்கு முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும்.

    குற்றத்தடுப்பு நடவடிக்கை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுத்தல் ஆகிய பணிகளுக்கு தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும்.

    மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வாகனம் அதிகம் சேரும் இடங்களில் உபயோகிக்கப்படும். பொது இடங்களில் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டு உள்ளது.

    அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும். ஒலி பெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் காவல்துறை மற்றும் இதர துறைகளில் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்த வேண்டும். மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

    கடற்கரை மட்டுமில்லாமல் சென்னையில் உள்ள அனைத்து இடங்களிலும் ஒரு காவல் நிலையத்திற்கு 5ல் இருந்து 10 ரோந்து வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஓட்டுநர் உரிமம் ரத்து செய்வது மட்டும் அல்லாது குற்ற ஆவண காப்பகத்தில் குற்றம் செய்தவரின் தகவல்கள் சேர்க்கப்பட்டு மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களின் மீது பதியப்பட்ட வழக்கு குறித்த தகவல்கள் இடம் பெறும் பட்சத்தில் தடையில்லாச் சான்று பெறுவதில் சிரமம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மெரினா கடற்கரையில் 31-ந்தேதி அன்று இரவு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்பார்கள்.
    • மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

    சென்னை:

    புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாகி உள்ளன.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முழு வீச்சில் தயாராகி வருகின்றன. இதையொட்டி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

    இதன்படி புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை மாநகர போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை மாநகரில் வருகிற 31-ந் தேதி அன்று இரவு 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் முழுவதிலும் போலீசார் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளனர்.

    புத்தாண்டு கொண்டாட்ட தினமான வருகிற 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று கடற்கரை பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

    இதன்படி கடற்கரை பகுதிகளில் ரோந்து பணியை தீவிரப்படுத்தவும், தடுப்பு வேலிகளை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மெரினா கடற்கரையில் 31-ந்தேதி அன்று இரவு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்பார்கள். குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் மெரினாவில் கூடுவார்கள் என்பதால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க சிறப்பு படைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தற்காலிக புறக்காவல் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.

    இந்த புறக்காவல் நிலையங்களில் பெண் போலீசார் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    சிறுவர், சிறுமிகள் கூட்டத்தில் காணாமல் போனால் அவர்களை கண்டுபிடிப்பதற்காக கைகளில் 'அடையாள வளையம்' கட்டிவிடப்படுகிறது. இதில் பெற்றோர்களின் செல்போன் எண் மற்றும் போலீஸ் உதவியை நாடும் செல்போன் எண்கள் ஆகியவை இடம்பெற்று இருக்கும்.

    இதன் மூலம் மாயமாகும் சிறுமிகளை எளிதாக கண்டுபிடிக்க முடியும். இந்த நடைமுறையை சென்னை மாநகர போலீசார் கடந்த சில ஆண்டுகளாகவே பின்பற்றி வருகிறார்கள். இதனால் மெரினாவில் காணாமல் போகும் குழந்தைகள் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விடுவார்கள்.

    இப்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உள்ள போலீசார் சென்னை மாநகர் முழுவதும் 400 இடங்களில் வாகன சோதனையிலும் ஈடுபடுகிறார்கள்.

    கிழக்கு கடற்கரை சாலை, மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசாரை நியமித்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் போலீசார் மோட்டார் சைக்கிள் பந்தயத்தை தடுக்கவும் நடவடிக்கைகளை எடுத்து உள்ளனர்.

    இதற்காக 20 தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் மணலிலும், கடலிலும் செல்லும் வகையிலான வாகனங்களில் ரோந்து சென்று கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    மதுபோதையில் வாகனங்களை ஓட்டிச்சென்று விபத்துக்களை ஏற்படுத்துபவர்களை பிடிக்க சென்னை மாநகர் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்தி போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது. மெரினா உள்ளிட்ட கடல் பகுதிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கண்காணிக்கும் வகையில் டிரோன் பாதுகாப்பிலும் போலீசார் ஈடுபட உள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் மற்றும் பெண்களிடம் சில்மிஷம் போன்ற செயல்களில் ஈடுபடுவோரையும் டிரோன் மூலமாக போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துக்களை தடுப்பதற்கு அடையாறு பகுதியில் இருந்து மாமல்லபுரம் வரை சுமார் 50 இடங்களில் தடுப்புகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.

    இதற்கு முன்பு புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது விபத்துகள் நடைபெற்ற இடங்கள் கண்டறியப்பட்டு 500-க்கும் மேற்பட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்து விபத்துகளை கட்டுப்படுத்தவும் போலீசார் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.

    • புயல் காரணமாக காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் மெரினா கடற்கரை வந்துள்ளது.
    • மெரினா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரையில் இருந்தும் பொது மக்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர்.

    மிச்சாங் புயல் உருவானதை அடுத்து நாளை தீவிர புயலாக உருவெடுத்து கரையை கடக்கிறது.

    மிச்சாங் புயல் நெருங்கி வருவதன் எதிரொலியாக சென்னை உள்பட 3 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், புயல் எச்சரிக்கையை தொடர்ந்து புயல் கரையை கடக்கும் வரை சென்னை மெரினா கடற்கரையின் இணைப்பு சாலையில் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், சென்னையில் உள்ள அனைத்து கடற்கரைக்கும் செல்ல பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    புயல் காரணமாக காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் மெரினா கடற்கரை வந்துள்ளது.

    இதனால், மெரினா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரையில் இருந்தும் பொது மக்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர்.

    • போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • இறந்த நபர் யார் என அடையாளங்களை காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை:

    மெரினா திருவள்ளுவர் சிலை பின்புறம் கடற்கரையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கரை ஒதுங்கியுள்ளது. மெரினா போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், இறந்த நபர் யார் என அடையாளங்களை காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கருங்கல்லினால் ஆன சிலைகள் பற்றி பட்டினப்பாக்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
    • மீட்கப்பட்ட சிலையை மெரினா போலீசார் மயிலாப்பூர் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

    சென்னை:

    தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பழமையான கோவில்களில் இருந்து திருடப்பட்ட பழங்கால சாமி சிலைகளை மீட்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

    அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகங்களில் இருந்து பழங்கால சாமி சிலைகள் சமீபத்தில் மீட்கப்பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்டன. இந்த சிலைகளை சம்பந்தப்பட்ட கோவில்களில் ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் உள்ள துலுக்கானத்தம்மன் கோவில் எதிரே மணல் பரப்பில் 2 பழங்கால சாமி சிலைகள் கிடந்தன. கருங்கல்லினால் ஆன இந்த சிலைகள் பற்றி பட்டினப்பாக்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சிலைகளை மீட்டு அப்பகுதியைச் சேர்ந்த தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

    இதேபோல் மெரினா போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது கலங்கரை விளக்கம் பின்புறம் உள்ள கடற்கரையில் ஒரு அடி உயரமுள்ள கற்சிலை கண்டெடுக்கப்பட்டது.

    மீட்கப்பட்ட சிலையை மெரினா போலீசார் மயிலாப்பூர் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

    கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் இந்தப் பழமையான சிலைகளை கோவில்களில் திருடி வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×