search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்னை முதல்-அமைச்சராக்க ஜெயலலிதா விரும்பினார்: விஜயசாந்தி
    X

    என்னை முதல்-அமைச்சராக்க ஜெயலலிதா விரும்பினார்: விஜயசாந்தி

    உடல்நலம் குன்றி சொத்து குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் பதவியை இழந்திருந்த நேரத்தில் தன்னை முதல் - அமைச்சராக்க ஜெயலலிதா விரும்பியதாக விஜயசாந்தி கூறியுள்ளார். #Jayalalithaa #Vijayashanti
    சென்னை:

    சினிமா, அரசியல் இரண்டிலும் தடம் பதித்தவர் நடிகை விஜயசாந்தி.

    ஐதராபாத்தில் வசித்து வரும் இவர் இப்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். இதற்கு முன்னர் பாரதிய ஜனதாவில் இருந்தார்.

    ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்.’ படம் விஜயசாந்தியை பட்டி தொட்டியெல்லாம் தெரிய வைத்தது. ரஜினி, கமலுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இவர் இப்போது முழு நேர அரசியல் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவோடு நெருங்கிய நட்பு பாராட்டிய விஜயசாந்தி, சென்னை வரும்போது போயஸ்கார்டன் சென்று அவரை சந்தித்து பேசுவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

    உடல்நலம் குன்றி சொத்து குவிப்பு வழக்கில் முதல்-அமைச்சர் பதவியை இழந்திருந்த நேரத்தில் தன்னை முதல் - அமைச்சராக்க ஜெயலலிதா விரும்பியதாக விஜயசாந்தி கூறியுள்ளார்.

    இது தொடர்பாக வாரப் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த அதிரடி பேட்டி வருமாறு:-



    எனது திரைப்படங்களை பார்த்து ஜெயலலிதா பல முறை என்னை பாராட்டியுள்ளார். இதனால் எங்களுக்குள் நட்பு அதிகரித்தது. போயஸ் கார்டன் இல்லத்தில் அவரை சந்தித்து பேசிய போது, உடல்நலம் பாதிக்கப்பட்டு காணப்பட்டார். 2 காலிலும் கட்டை விரல்களில் நகங்கள் நீக்கப்பட்டு கட்டு போடப்பட்டிருந்தது. சர்க்கரை நோய் பாதிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டார். நான் ஆறுதல் கூறி நம்பிக்கையுடன் பேசினேன்.

    அப்போது பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருந்தது. ஜெயலலிதா கேட்டுக் கொண்டதால் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தேன்.

    அரசியல் தொடர்பாகவும் என்னோடு மனம் விட்டு பேசுவார். சொத்து குவிப்பு வழக்கு பிரச்சனையால், ஜெயலலிதா பதவி இழந்திருந்த நேரத்தில் அ.தி.மு.க.வில் சேருமாறு எனக்கு அழைப்பு விடுத்தார்.

    அப்போது ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதற்கு நம்பிக்கையான ஒருவரை எதிர் பார்க்கிறேன் என்று அவர் என்னிடம் கூறினார். ஆனால் அப்போதைய சூழலில் என்னால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தெலுங்கானாவுக்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். அதனால் தமிழக அரசியலுக்கு வருவது சரியாக இருக்காது என்று கூறி விட்டேன்.

    இதனை ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா அதன் பின்னரே ஓ.பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக்கினார். நான் இருக்க வேண்டிய இடத்தில்தான் அப்போது ஓ. பன்னீர்செல்வம் இருந்தார்.

    சசிகலாவுடனும் எனக்கு நல்ல நட்பு உண்டு. நமக்கு வேண்டப்பட்டவர் கஷ்டத்தில் இருக்கும் போது, அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தேன். அவரது கணவர் நடராஜன் மறைந்ததும் மன்னார்குடி சென்று அஞ்சலி செலுத்தினேன்.

    பெங்களூர் சிறையில் சசிகலாவையும் சந்தித்து பேசினேன். இதெல்லாம் அரசியலுக்கு அப்பாற்றப்பட்டது. ஜெயலலிதா மரணத்தில் சசிகலாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவது வதந்தி. மோடியின் சூழ்ச்சி.

    ரஜினி சீக்கிரம் அரசியலுக்கு வர வேண்டும். தமிழக மக்களின் சார்பில் நானும் அவருக்கு அழைப்பு விடுக்கிறேன். கமலை பொறுத்த வரையில் அரசியலுக்கு வந்து விட்டார். அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இவ்வாறு விஜயசாந்தி கூறியுள்ளார். #Jayalalithaa #Vijayashanti
    Next Story
    ×