search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரதம் இருக்கும் முறை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சித்திர குப்தன் என்பவர் எமதர்மனின் கணக்குப் பிள்ளை ஆவார்.
    • அடுத்த பிறவி, முக்தி ஆகியவற்றை எமதர்மன் தீர்மானம் செய்வார்.

    சித்ரா பவுர்ணமி அன்று பெண்கள் விரத முறையை மேற்கொள்கின்றனர். அன்று அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி வாசலில் தெற்கு திசையில் வாயில் போன்ற அமைப்பில் படிக் கோலம் இடுகின்றனர்.

    பூஜையறையில் மாவினால் சித்ர குப்தரின் உருவத்தினை வரைந்து ஏடு மற்றும் எழுத்தாணியை (பேப்பர் மற்றும் பேனா) உருவத்தின் அருகே வைக்கின்றனர். சர்க்கரைப் பொங்கல் மற்றும் பருப்பு பாயாசம் (பால் சேர்க்காமல்) படைத்து விளக்கேற்றி தீப ஆராதனை காண்பிக்கின்றனர்.

    பின்னர் தங்கள் வாழ்வில் செய்த பாவங்களைப் போக்குமாறும் இனி வரும் நாளில் பாவங்கள் செய்யாமல் இருக்க அருள் புரியுமாறும் வேண்டுகின்றனர். நிலையான செல்வம், நீடித்த ஆயுள், மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு கிடைக்க பிரார்த்திக்கின்றனர்.

    வழிபாடு முடிந்த பின் முறத்தில் அரிசி, பருப்பு, காய்கறி, தட்சிணை ஆகியவற்றை வைத்து எளியவர்களுக்கு தானம் செய்கின்றனர்.

    வீட்டிலோ அல்லது அருகில் உள்ள கோவிலுக்கோ சென்று சித்திர குப்தரின் வரலாற்றை படிக்கின்றனர். வழிபாடு முடிந்த பின் படிக்கோலத்தை அழிந்து விடுகின்றனர்.

    விரத முறையில் மக்கள் உப்பு, பால், மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்க்கின்றனர். காமதேனுவிடமிருந்து சித்திரகுப்தன் தோன்றியதால் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் தவிர்க்கப்படுகின்றன.

    சித்திர குப்தன் என்பவர் எமதர்மனின் கணக்குப் பிள்ளை ஆவார். சித்திர குப்தர் என்பதற்கு மறைந்துள்ள படம் எனப் பொருள்படும். இவர் உலக உயிர்களின் பாவ, புண்ணியங்களை கணக்கிட்டு எமதர்மனிடம் தருவார். அதனைக் கொண்டே உயிர்களின் அடுத்த பிறவி, முக்தி ஆகியவற்றை எமதர்மன் தீர்மானம் செய்வார் என்பது இந்து மக்களின் நம்பிக்கை.

    இவர் இடது காலை மடித்து வலது காலை ஊன்றி சுகாசனம் என்ற நிலையில் உள்ளார். தனது வலது கையில் எழுத்தாணியும் இடது கையில் ஓலைச்சுவடியும் வைத்திருப்பார். இவரிடம் என்றும் வற்றாத கணக்குப் புத்தகம் உள்ளது. அதன் பெயர் அக்கிர சந்தாணி ஆகும்.

    சித்திர குப்தனுக்கு என்று தனிக்கோவில் காஞ்சிபுரத்தில் உள்ளது. சித்ரா பவுர்ணமி அன்று இங்கு சித்திர குப்தனுக்கு சித்திரலேகாவுடன் திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. பின்னர் சித்திர குப்தர் மற்றும் சித்ரலேகா வீதி உலா வருகின்றனர்.

    சித்ரா பவுர்ணமி அன்று மதுரை, மானா மதுரை, பரமக்குடி போன்ற இடங்களில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறுகிறது. திருவண்ணாமலையில் கிரிவல நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் நமக்கும் மேலான சக்தி ஒன்று நம்மை இடைவிடாது கண்காணிக்கிறது எனவே தீய செயல்களை தவிர்த்து நல்ல செயல்களை செய்ய வேண்டும் என்பதே இவ்விழாவின் சாராம்சம் ஆகும்.

    மேலும் ஒற்றுமையுடன் பகிர்ந்துண்ணல், தான தர்மம் ஆகியவற்றையும் இவ்விழா எடுத்துரைக்கிறது. எனவே நாமும் இப்பிறவியில் தீமைகளை தவிர்த்து நன்மைகள் செய்து நன்நிலையை அடைய சித்ரா பவுர்ணமி அன்று வழிபாடு மேற்கொள்வோம்.

    • காரடையான் நோன்பை பெண்கள் கடைப்பிடிப்பார்கள்.
    • பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைத்து இருக்கும்

    மாசி மாதமும், பங்குனி மாதமும் சேரும் நாளில் `காரடையான் நோன்பை' பெண்கள் கடைப்பிடிப்பார்கள். `கவுரி விரதம்', `காமாட்சி விரதம்', `சாவித்திரி விரதம்' என்று பல பெயர்களில் இந்த விரதம் அழைக்கப்படுகிறது. `மாசி கயிறு பாசி படரும்' என்பது சொல்வழக்கு. அதாவது இந்த விரதம் இருக்கும் பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைத்து இருக்கும் என்பது இதன் பொருள்.

    அஸ்வபதி என்ற மன்னர், மாலதி தேவி என்ற நல்ல குணங்கள் நிரம்பப்பெற்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். நீண்ட காலமாக அவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படவில்லை. இதையடுத்து கணவன்- மனைவி இருவரும், வசிஷ்ட மகரிஷியை சென்று பார்த்து, தங்கள் குறைகளை கூறினர். அந்த தம்பதியர்க்கு, சாவித்திரி தேவியின் மகா மந்திரத்தை வசிஷ்டர் உபதேசம் செய்தார்.

    சாவித்திரி தேவியின் அந்த மகா மந்திரத்தை மன்னனும், அவனது மனைவியும் தொடர்ந்து சொல்லி வந்தனர். இதன் பயனாக விரைவிலேயே அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    தங்கள் தெய்வத்தின் ஞாபகமாக அந்த பெண் குழந்தைக்கு `சாவித்திரி' என்று பெயர் வைத்தார்கள். சாவித்திரி வளர்ந்து வருகையில் சிறிது தூரத்தில் உள்ள தேசத்தில் துயுமத்சேனன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு சத்திய சேனன் என்ற மகன் இருந்தான். சத்தியசேனன் மிக உயர்ந்த குணங்களைக் கொண்டிருந்தான்.

    சத்தியசேனன் அருமை பெருமைகளை கேள்விப்பட்ட சாவித்திரி, அவனையே தன் கணவனாக நினைத்து, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தாள். அதே நேரத்தில் துயுமத்சேனன், தன்னுடைய பகைவர்களின் துரோகத்தால் ராஜ்ஜியத்தை இழந்து, தன் மனைவி, மகனுடன் ஒரு வனத்தை வந்தடைந்தான்.

    சாவித்திரி தன் தந்தையிடம் "சத்தியவானையே (சத்தியசேனன்) திருமணம் செய்வேன்" என்று கூறினாள். அப்பொழுது நாரத மகரிஷி அங்கு வந்து, "நீ நினைக்கும் சத்தியவான், தற்பொழுது நாட்டை இழந்து, கண்களை இழந்த தன் தந்தையுடன் காட்டில் வசித்து வருகிறான். எல்லாவற்றுக்கும் மேலாக, அவன் இன்னும் சரியாக 12 மாதத்தில் இறந்து விடுவான். அவனை நீ திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாயா?" என்றார்.

    அதற்கு சாவித்திரி "என் மனதால் நினைத்த சத்தியவானை, இனி நான் மறக்க மாட்டேன். என்ன நடந்தாலும் சத்தியவானை தான் திருமணம் செய்து கொள்வேன்" என்று உறுதி படக் கூறினாள்.

    இதையடுத்து சாவித்திரியின் தந்தையான அஸ்வபதி, தன் மகளை அழைத்துக் கொண்டு வனத்தை அடைந்தார். அங்கு வாழ்ந்து வந்த சத்தியவானுக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுத்தார்.

     சரியாக 12 மாதம் முடியும் வேளையில், நடுக்காட்டில் விறகு வெட்டிக் கொண்டிந்த சத்யவான், திடீரென்று தன் மனைவி சாவித்திரியின் மடியில் சரிந்து விழுந்து தன் உயிரை இழந்தான்.

    அவனது ஆன்மாவை தன் பாசக் கயிற்றால் கட்டி இழுத்துச் சென்றார், எமதர்மன். சாவித்திரி மேற்கொண்ட பதிவிரதை மகிமையால், அவளது கண்ணுக்கு எமதர்மன் தெரிந்தார். சாவித்திரி, எமதர்மனை பின் தொடர்ந்து சென்றாள். அதைக் கண்டு ஆச்சரியப்பட்ட எமதர்மன், "உன்னுடைய கண்ணுக்கு என் உருவம் எப்படி தெரிகிறது? நீ திரும்பிச்செல். சரீரத்துடன் யாரும் என் பின்னால் எமலோகம் வர முடியாது. இறந்த பின் தான் வர முடியும்" என்றார்.

    எமதர்மன் சொன்னதைப் பொருட்படுத்தாமல், அவரைப் பின் தொடர்ந்தாள் சாவித்திரி. இதையடுத்து எமதர்மன், "சரி.. உனக்கு ஒரு வரம் தருகிறேன். நீ கேள்" என்றார். சாவித்திரியோ, "என் கணவனைத் திருப்பிக் கொடுங்கள்" என்று கேட்க, அதற்கு எமதர்மன், "பறித்த உயிரை திருப்பித் தர மாட்டேன். பதிவிரதையே, வேறு ஏதாவது வரம் கேள்" என்று கூறினார்.

    உடனே சாவித்திரி, "என் மாமனார் தன் கண்களால் அவரது 100 பேரக் குழந்தைகளைக் காண வேண்டும்" என்று வரம் கேட்டாள். (சத்தியவான் துயுமத்சேனனுக்கு ஒரே மகன்). சாவித்திரி கேட்ட வரத்தை தருவதாக எமதர்மனும் வாக்கு கொடுத்தார்.

    பின்னர் சாவித்திரி, "என் கணவனின் உயிரை நீங்கள் எடுத்துச் சென்றுவிட்டால், எப்படி எனக்கு குழந்தை உண்டாகும்" என்றாள். எமதர்மன், சாவித்திரியின் சாதுர்யத்தை எண்ணி மகிழ்ந்து, சத்தியவானின் உயிரைத் திருப்பித் தந்ததுடன், துயுமத்சேனன் இழந்த ராஜ்ஜியத்தையும் திரும்பப் பெறுவான் என்று வரம் கொடுத்தார்.

    சாவித்திரிக்கு அவளது கணவனைத் திரும்பித் தந்தது, அவள் கடைப்பிடித்து வந்த பதிவிரதை விரதம்தான். அதைத்தான் நாம் `சாவித்திரி விரதம்' என்கிறோம்.

    விரதம் இருக்கும் முறை

    பூஜை அறையில் கோலம் போட்டு விளக்கேற்றி வீட்டில் உள்ள பெண் குழந்தைகளின் எண்ணிக்கையின்படி ஒவ்வொரு இலையாக எண்ணி கோலத்தின் மீது வைப்பார்கள். இலையின் நூனி வடக்கு நோக்கி இருக்குமாறு போட வேண்டும். கார் அரிசி மற்றும் வெல்லம் கொண்டு இனிப்பு அடை, மற்றும் உப்பு அடை செய்து பின் நெய் விளக்கேற்றி பூரண கும்பம் வைத்து அம்பாளை பூஜிப்பார்கள்.

    கலசத்திற்கு பூச்சரம் அல்லது மாலை அணிவித்து, ரவிக்கை துண்டு வைத்து, கும்பத்தை அலங்காரம் செய்வார்கள். பின்னர் கும்பத்திற்கு தூப, தீபங்கள் காட்டி அம்பாளை வழிபடுவார்கள்.

    இந்த இலையின் நுனிப்பகுதியில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பூ கட்டிய மஞ்சள் சரடு ஆகியவற்றை வைத்து, இலையின் நடுவில் இரண்டு வெல்ல அடைகளும், வெண்ணெய்யும் வைக்க வேண்டும். வயதானவர்கள் இந்த இலையில் அம்மனுக்கு ஒரு சரடு சேர்த்து வைத்துக்கொள்வார்கள்.

    ஒற்றைப்படையில் இலை வந்தால், ஒரு இலையை அதிகப்படுத்துவார்கள். அதாவது ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு என இருந்தால் அதை மாற்றி, இரண்டு, நான்கு, ஆறு, எட்டு என இரட்டைப் படையில் வருமாறு இலைகளைப் போடுவார்கள்.

    வீட்டில் உள்ள வயதான பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள், ஒவ்வொரு இலையின் முன்பாக நின்று கொண்டு நீரை எடுத்து மூன்று முறை இலையை சுற்றி விட்டு, 'உருகாத வெண்ணெய்யும் ஓர் அடையும் நான் தருவேன். ஒரு காலும் என்னை விட்டு என் கணவர் பிரியாது இருக்க வேண்டும்' என சொல்லுவார்கள். பிறகு வீட்டில் உள்ள வயதான பெண், பூஜை அறையில் நின்று முதலில் சரடு ஒன்றை எடுத்து அம்மனுக்கு கட்டிவிட்டு அல்லது படத்திற்கு சாற்றி விட்டு, தோராம் என்னும் சுலோகத்தை சொல்லி, தன் கழுத்தில் கட்டிக்கொண்டு, குழந்தைகளுக்கும் அது போல் கட்டி விடுவார்கள்.

     அடையில் ஒன்றை தன் கணவருக்காக தனியாக எடுத்து வைத்துவிட்டு, பின் அடையை சாப்பிடுவார்கள். இரண்டு அடையை எடுத்து தனியாக வைத்து விட்டு, மறுநாள் பசு மாட்டிற்கு கொடுப்பார்கள். 'ஏழையார் நோற்ற நோன்பை மோழையார் கொண்டு செல்வார்' என்று பழமொழி. எனவே அன்று முழுவதும் மோர் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

    காரடையான் நோன்பை கடைப்பிடிப்பதால் ஜாதகத்தில் உள்ள மாங்கல்ய தோஷம் விலகும். மேலும் சிலருக்கு திருமணத்திற்குப்பின் ரஜ்ஜு தோஷம் இருந்தால், அந்த தோஷமும் விலகும். கணவருக்கு நீண்ட ஆயுள் உண்டாகும்.

    அங்க பூஜை

    * ஓம் காமாக்ஷ்யை நம: பாதௌ பூஜயாமி (கால்)

    * ஓம் கல்மஷக்ன்யை நம: குல்பே பூஜயாமி (முன்கால்)

    * ஓம் வித்யாப்ரதாயின்யை நம: ஜங்கே பூஜயாமி (நுனிக்கால்)

    * ஓம் கருணாம்ருத ஸாகராயை நம: ஜாநுநீ பூஜயாமி (முழங்கால்)

    * ஓம் வரதாயை நம: ஊரூ பூஜயாமி (தொடை)

    * ஓம் காஞ்சீ நகர வாஸின்யை நம: கடிம் பூஜயாமி (இடுப்பு)

    * ஓம் கந்தர்ப்ப ஜனன்யை நம: நாபிம் பூஜயாமி (நாபி)

    * ஓம் புரமதனபுண்யகோட்யை நம: வக்ஷ: பூஜயாமி (மார்பு)

    * ஓம் மஹாக்ஞான தாயின்யை நம: ஸ்தநௌ பூஜயாமி (ஸ்தனம்)

    * ஓம் லோகமாத்ரே நம: கண்டம் பூஜயாமி (கழுத்து)

    * ஓம் மாயாயை நம: நேத்ரே பூஜயாமி (கண்)

    * ஓம் மதுரவேணீ ஸஹோதர்யை நம: லலாடம் பூஜயாமி (நெற்றி)

    * ஓம் ஏகாம்பரநாதாயை நம: கர்ணம் பூஜயாமி (காது)

    * ஓம் காமகோடி நிலயாயை நம: சிர: பூஜயாமி (தலை)

    * ஓம் காமேச்வர்யைநம: சி'குரம் பூஜயாமி (முன் முடி)

    * ஓம் காமிதார்த்ததாயின்யை நம: தம்மில்லம் பூஜயாமி (நெற்றிச்சுட்டி)

    * ஓம் காமாக்ஷ்யை நமஸர்வாணி அங்கானி பூஜயாமி (முழுவதும்)

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிவ விரதங்கள் எட்டு. அவற்றுள் சிவராத்திரி ஒன்று.
    • நான்கு காலங்களிலும் சிவபூஜை செய்ய வேண்டும்.

    சிவ விரதங்கள் எட்டு. அவற்றுள் சிவராத்திரி ஒன்று. அதிகாலையில் நீராடி திருநீறும் ருத்திராட்ச மாலையும் அணிந்து சிவபூனுறு செய்து திரு ஐந்தெழுத்து ஓதவேண்டும். பகல் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். மாலையில் மீண்டும் நீராடி சிவாலயம் சென்று வழிபட வேண்டும். முடியுமானால் நெய்விளக்கு ஏற்றி மலரால் அர்ச்சனை செய்து உள்ளம் உருகி தேவாரம் மற்றும் திருவாசக பாடல்களை பாடி துதி செய்து வலம் வந்து அஷ்டாங்க வணக்கம் புரிந்து வழிபாடு செய்ய வேண்டும். சிவராத்திரி அன்று இரவில் நான்கு காலங்களிலும் சிவபூஜை செய்ய வேண்டும்.

    அன்று இரவு பதினான்கு நாழிகையின் போது முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்ம ஹத்திகளும் (பாவங்களும்) விலகும் என்பது உறுதி.

    சிவராத்திரி தினத்தன்று அதிகாலையில் எழுந்து கொள்ள வேண்டும். நீராடிவிட்டு சிவாலயம் ஒன்றிற்குச் சென்று, தான் இன்று சிவராத்திரி விரதம் அனுசரிக்க விருப்பதாகவும் தன்னுடைய விரதம் எவ்வித பங்கமும் இல்லாமல் நிறைவேற அருள வேண்டும் என்றும் தன் புலனடக்கத்திற்கு எந்தவிதக் கேடும் வந்து விடக்கூடாது என்றும் எம்பெருமானை வேண்டிக் கொள்ள வேண்டும்.

    பிறகு பூஜைக்குத் தேவையான பொருட்களை எல்லாம் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பொழுது சாயும் வேளையில் குளித்து விட்டு சுத்தமான உடைகளை உடுத்திக் கொள்ள வேண்டும். மூன்று முறை ஆசமனம் செய்து பரமேஸ்வரனைத் துதித்து பூஜையைத் தொடங்க வேண்டும்.

    நான்கு ஜாமங்களிலும் நான்கு சிவலிங்கங்களை மண்ணால் செய்து வழிபட வேண்டும். வேதம் கற்றவர்களைக் கொண்டு மந்திரங்களை உச்சரித்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். பால், தயிர், தேன், நெய், சர்க்கரை ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

    சிவராத்திரியின் முதல்நாள் பிரதோஷ தினம் ஆகையால் மாலையில் நடராஜப் பெருமானையும், சிவ மூலவரையும் வழிபட வேண்டும்.

    சிவராத்திரி இரவில் நான்கு கால வழிபாடு நடை பெறும். முதல் காலத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் காலத்தில் தட்சிணாமூர்த்தியையும், மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் காலத்தில் ரிஷபாரூடர் என்று அழைக்கப்பெறும் சந்திரசேகரரையும் வழிபட வேண்டும்.

    நான்கு காலங்களிலும் கருவறையிலுள்ள சிவ மூலவரை ஆகம முறைப்படி அபிஷேகங்கள் செய்வித்து வழிபட வேண்டும். மூன்றாம் காலம் லிங்கோத்பவ காலம் ஆகும். அந்நேரத்தில் கருவறைக்குப் பின்னே உள்ள லிங்கோத்ப வரை முறைப்படி வழிபட வேண்டும். அந்நேரத்தில் ஸ்ரீருத்ரத்தைப் பாராயணம் செய்தல், ஸ்ரீ சிவ சகஸ்ர நாமங்களை உச்சரித்தல், தேவாரத்தில் உள்ள லிங்க புராண திருக்குறுந்தொகை யையும் பாராயணம் செய்தல் வேண்டும்.

    சிவராத்திரி விரதமானது எம பயத்தை நீக்கும். சிவனடியார்களை எமதூதர்கள் நெருங்க அஞ்சுவார்கள் என்று பரஇதிகாசம் உரைக்கிறது.

    சிவராத்திரியின் நான்காம் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுவதால், உடல் பிணிகள் அனைத்தும் விலகும். சிவராத்திரி அன்று தான தருமங்கள் செய்வதால் கோடிப் புண்ணியம் கிடைக்கும். சிவலிங்கம், உருத்திராட்சம், ரத்தினங்கள், நிவேதனப் பொருட்கள், அன்னம் போன்றவைகளைத் தானம் செய்யலாம்.

    நான்கு காலங்களிலும் சிவபெருமானுக்கு பஞ்ச வில்வ தளங்களால் பஞ்சமுக அர்ச்சனை செய்ய வேண்டும். நான்காம் காலத்தில் மட்டும் செய்தால் கூடப் போதுமானது. பஞ்சமுக அர்ச்சனை செய்து, ஐந்து வகை அன்னங்களை சிவபெருமானுக்குப் படைத்தல் வேண்டும்.

    சிவபூஜை செய்ய இயலாதவர்கள் நான்கு காலங்களிலும் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் கலந்து கொண்டு தரிசிக்க வேண்டும். நிரம்பிய அன்புடன் திரு ஐந்தெழுத்து ஓதுதல் இன்றியமையாதது. மறுநாள் காலை நீராடி சிவனை வழிபட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

    இப்படி விரதம் இருந்தவர்களின் சகல வினைகளும் நெருப்பில் விழுந்த பஞ்சு போல எரிந்து கரிந்து சாம்ப லாகும். தீபங்களை வரிசையாக வைத்து சிவபெருமானை வழிபட வேண்டும். சிவபெருமான் தீபமங்கள ஜோதியாக விளங்குபவர். அவர் ஒளிவெள்ளமாக திருவண்ணாமலையில் காட்சி தருகிறார்.

    கோவிலுக்குள் நீராடிய பிறகே செல்ல வேண்டும். கொடி மரத்திற்கு வெளியே விழுந்து வணங்கி விநாயகரை ஒரு முறையும் சிவபெருமானை மூன்று முறையும், அம்பிகையை நான்கு முறையும் வலம்வரவேண்டும். வழிபடும் போது மனம் இறைவன் மீது மட்டுமே இருக்க வேண்டும். விபூதி மற்றும் பிரசாதத்தை பயபக்தியுடன் இரண்டு கைகளாலும் ஏந்திப் பெற வேண்டும். அதைக்கீழே சிந்துவதோ எறிவதோ பெரும்பாவமாகும். சண்டிகேஸ்வரர் மீது நூல் இடக்கூடாது.

    சிவலிங்கத்திற்கும் நந்திதேவருக்கும் இடையே போகக்கூடாது. கோவிலில் பிரசாதங்களை சாப்பிட்டு விட்டு தூண்களில் துடைப்பது தவறாகும். வழிபாடு முடிந்த பிறகு கொடிமரத்தின் அருகில் வடதிசை நோக்கி அமர்ந்து மூலமந்திரம் ஜெபிக்க வேண்டும். அதிக சப்தம் இல்லாமல் இனிமையாக தோத்தி ரப் பாடல்களை பாட வேண்டும்.கோவிலுக்கு செல்வோர் முக்கிய மாக விளக்குகளில் எண்ணெய் ஊற்ற வேண்டும். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாவதுடன், அந்த வீட்டில் தெய்வ கடாட்சமும், லட்சுமியின் அனு கிரகமும் உண்டாகும்.

    ×