search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chitra Gupta"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சித்திர குப்தன் என்பவர் எமதர்மனின் கணக்குப் பிள்ளை ஆவார்.
    • அடுத்த பிறவி, முக்தி ஆகியவற்றை எமதர்மன் தீர்மானம் செய்வார்.

    சித்ரா பவுர்ணமி அன்று பெண்கள் விரத முறையை மேற்கொள்கின்றனர். அன்று அதிகாலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி வாசலில் தெற்கு திசையில் வாயில் போன்ற அமைப்பில் படிக் கோலம் இடுகின்றனர்.

    பூஜையறையில் மாவினால் சித்ர குப்தரின் உருவத்தினை வரைந்து ஏடு மற்றும் எழுத்தாணியை (பேப்பர் மற்றும் பேனா) உருவத்தின் அருகே வைக்கின்றனர். சர்க்கரைப் பொங்கல் மற்றும் பருப்பு பாயாசம் (பால் சேர்க்காமல்) படைத்து விளக்கேற்றி தீப ஆராதனை காண்பிக்கின்றனர்.

    பின்னர் தங்கள் வாழ்வில் செய்த பாவங்களைப் போக்குமாறும் இனி வரும் நாளில் பாவங்கள் செய்யாமல் இருக்க அருள் புரியுமாறும் வேண்டுகின்றனர். நிலையான செல்வம், நீடித்த ஆயுள், மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு கிடைக்க பிரார்த்திக்கின்றனர்.

    வழிபாடு முடிந்த பின் முறத்தில் அரிசி, பருப்பு, காய்கறி, தட்சிணை ஆகியவற்றை வைத்து எளியவர்களுக்கு தானம் செய்கின்றனர்.

    வீட்டிலோ அல்லது அருகில் உள்ள கோவிலுக்கோ சென்று சித்திர குப்தரின் வரலாற்றை படிக்கின்றனர். வழிபாடு முடிந்த பின் படிக்கோலத்தை அழிந்து விடுகின்றனர்.

    விரத முறையில் மக்கள் உப்பு, பால், மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்க்கின்றனர். காமதேனுவிடமிருந்து சித்திரகுப்தன் தோன்றியதால் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் தவிர்க்கப்படுகின்றன.

    சித்திர குப்தன் என்பவர் எமதர்மனின் கணக்குப் பிள்ளை ஆவார். சித்திர குப்தர் என்பதற்கு மறைந்துள்ள படம் எனப் பொருள்படும். இவர் உலக உயிர்களின் பாவ, புண்ணியங்களை கணக்கிட்டு எமதர்மனிடம் தருவார். அதனைக் கொண்டே உயிர்களின் அடுத்த பிறவி, முக்தி ஆகியவற்றை எமதர்மன் தீர்மானம் செய்வார் என்பது இந்து மக்களின் நம்பிக்கை.

    இவர் இடது காலை மடித்து வலது காலை ஊன்றி சுகாசனம் என்ற நிலையில் உள்ளார். தனது வலது கையில் எழுத்தாணியும் இடது கையில் ஓலைச்சுவடியும் வைத்திருப்பார். இவரிடம் என்றும் வற்றாத கணக்குப் புத்தகம் உள்ளது. அதன் பெயர் அக்கிர சந்தாணி ஆகும்.

    சித்திர குப்தனுக்கு என்று தனிக்கோவில் காஞ்சிபுரத்தில் உள்ளது. சித்ரா பவுர்ணமி அன்று இங்கு சித்திர குப்தனுக்கு சித்திரலேகாவுடன் திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. பின்னர் சித்திர குப்தர் மற்றும் சித்ரலேகா வீதி உலா வருகின்றனர்.

    சித்ரா பவுர்ணமி அன்று மதுரை, மானா மதுரை, பரமக்குடி போன்ற இடங்களில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறுகிறது. திருவண்ணாமலையில் கிரிவல நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் நமக்கும் மேலான சக்தி ஒன்று நம்மை இடைவிடாது கண்காணிக்கிறது எனவே தீய செயல்களை தவிர்த்து நல்ல செயல்களை செய்ய வேண்டும் என்பதே இவ்விழாவின் சாராம்சம் ஆகும்.

    மேலும் ஒற்றுமையுடன் பகிர்ந்துண்ணல், தான தர்மம் ஆகியவற்றையும் இவ்விழா எடுத்துரைக்கிறது. எனவே நாமும் இப்பிறவியில் தீமைகளை தவிர்த்து நன்மைகள் செய்து நன்நிலையை அடைய சித்ரா பவுர்ணமி அன்று வழிபாடு மேற்கொள்வோம்.

    ×