search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமஜென்ம பூமி"

    • ராமனை பழித்து பிழைத்துவிடலாம் என நினைத்தது ஒரு கூட்டம் அன்று....
    • எத்தனை எதிர்ப்பு வந்தாலும் ராமன் தன் நாடு திரும்பிவிட்டான்.....

    சென்னை:

    தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கவிதை நடையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெரியாரும் பெருமாளும் ஒன்று என்று சொல்வா "ராம்"

    பெரியார் தொண்டர்களை ஆராதிப்பா "ராம்"

    ஆனால் பெருமாள் பக்தர்களுக்கு வாழ்த்து சொல்லமாட்டா "ராம்".

    அனைத்து மதத்தையும் சமமாக பாவிக்கிறா "ராம்"

    ஆனால் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லமாட்டா "ராம்"

    அதனால்தான் அன்று செருப்பு மாலை போட்டவர்களை

    வெறுப்பை உமிழும் கறுப்பு இயக்கங்களை விரட்டி

    அதுவே நம் தமிழ்நாட்டுக்கு வரப்போகும் ராமராஜ்ஜியம்.....

    எம் தமிழ்நாட்டில் என்ன சிறப்பு எனில்...

    எந்நாட்டிலும் ராம்நாடு இல்லை தமிழ்நாட்டில் ஓர் மாவட்டமே "ராம்"நாடு அதனால் தான் சீதையை தேடிய ராமனை அங்கு தேடி மோடி வந்தார்....

    11 நாள் உபவாசம் இருந்து பக்தியோடு வந்தார்....

    சமூக நீதிக்கு வித்திட்ட நாயகனாக திகழ்ந்த ராமரை

    சமூக நீதிக்கு எதிரானவராக சித்தரித்து

    ஈரோட்டில் விதைத்த விஷ விதையை ஒழிக்க

    ராமனை பழித்து பிழைத்துவிடலாம் என நினைத்தது ஒரு கூட்டம் அன்று....

    இன்று கூட்டம் கூட்டமாக ராமனை வழிபட்டு

    அனைவர் கண்ணிலும் ஒளியாய் இருக்கும் ராமனை.....

    வழக்கமாய் நடக்க வேண்டியதை வழக்காடு மன்றம் சென்று... வென்று பெற்றவர்களுக்கு

    எத்தனை எதிர்ப்பு வந்தாலும் ராமன் தன் நாடு திரும்பிவிட்டான்.....

    தடை ஏற்படுத்தப்பட்டால் தடைகள் தகர்த்தெறியப்படும்....

    என்று ஒலிக்கட்டும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை....

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • சிவனை வணங்க வேண்டும் என்றால் சிவமாக இரு, ராமனை வணங்கவேண்டும் என்றால் ராமனாக இரு என்று பொருள்.
    • அகங்காரம், சுயநலம், பாகுபாடு உள்ளிட்ட பல்வேறு இடர்கள் காரணமாக உலகம் வீழ்ச்சியை நோக்கி செல்கிறது.

    ராமர் கோவில் அமைந்தது தேசத்தின் பெருமை- ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்இந்துக்களின் புண்ணிய பூமியான அயோத்தியில் நாளை (திங்கட்கிழமை) ராமர் கோவில் பிரதிஷ்டை செய்யப்படுவதையொட்டி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சுமார் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடிய வரலாறு நம் பாரதத்தின் வரலாறு. ஆரம்ப காலத்தில் நடந்த படையெடுப்புகள் செல்வத்தை கொள்ளையடிக்க நடந்தன. சில (அலெக்சாண்டர் படையெடுப்பு போன்றவை) ஆக்கிரமிப்பை மையமாக வைத்து நடந்தன.

    ஒரு நாட்டின், ஒரு சமுதாயத்தின் தன்னம்பிக்கையை குறைக்க அவர்களின் வழிபாட்டுத்தலத்தை அழிப்பது அக்காலத்தில் அவசியமாக இருந்தது. எனவே, அன்னிய படையெடுப்பாளர்கள் பாரதத்தில் பல்வேறு கோவில்களை அழித்தார்கள். அவர்கள் குறிக்கோள் பாரதிய சமுதாயத்தின் சுயநம்பிக்கையை சிதைத்து, பலவீனமாக்கி, பின்னர் நிரந்தரமாக இங்கு ஆட்சி செய்வதாக இருந்தது. அயோத்தியில் இருந்த ராமர் கோவிலும் அதே எண்ணத்துடன் அழிக்கப்பட்டது.

    ராமஜென்ம பூமி விஷயத்தில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே தொடங்கிய சட்டப்போராட்டம் தொடர்ந்தது. 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ந்தேதி அன்று, 134 ஆண்டு கால சட்டப்போராட்டத்திற்கு பிறகு, சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு சான்றுகளை ஆய்வு செய்து அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்ப்பை வழங்கியது. இருதரப்பு நம்பிக்கைகள் மற்றும் எண்ணங்களுக்கும் இந்த தீர்ப்பு மதிப்பளித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகுதான் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

    ஆன்மிக ரீதியாக பார்த்தால், பெருவாரியான மக்களால் வழிபடப்படும் கடவுளாக இருக்கிறார் ராமர். ராமரின் வாழ்க்கை ஒரு நெறியான வாழ்க்கை என்று ஒட்டுமொத்த சமுதாயமும் போற்றுகிறது. அயோத்தியா என்றால் 'போர் இல்லாத நகரம், 'சச்சரவுகள் இல்லாத நகரம்' என்று பொருள். இந்த நேரத்தில், ஒட்டுமொத்த நாடும், அயோத்தியை எப்படி மீண்டும் நிர்மாணம் செய்வது என்பது பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும், இது நமது கடமையும் கூட.

    ராமர் கோவில் அமைந்துள்ள இந்த தருணம் நமது தேசத்தின் பெருமையை மீண்டும் எழ செய்துள்ளது. பாரத சமுதாயம் ராமரின் வாழ்க்கை முறைகளை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாகவும் இது விளங்குகிறது. ராமரை கோவிலில் வணங்க சொல்லப்பட்டுள்ள முறைகள் பத்ரம், புஷ்பம், பலம், தோயம் (இலை, பூ, பழம், தண்ணீர்).

    அதுமட்டுமில்லாது ராமரின் உருவத்தை நமது மனதில் பதித்து, அந்த நெறிப்படி நமது வாழ்க்கையை அமைத்து ராமரை பூஜிக்க வேண்டும். 'சிவோ பூத்வா சிவம் பஜேத், ராமோ பூத்வா ராமம் பஜேத்' என்பார்கள், அதாவது சிவனை வணங்க வேண்டும் என்றால் சிவமாக இரு, ராமனை வணங்கவேண்டும் என்றால் ராமனாக இரு என்று பொருள்.

    'மற்றவர் மனைவியை தாயாக பார்ப்பவனும், பிறர் சொத்தை ஒரு பிடி மண்ணாக பார்ப்பவனும், அனைத்து ஜீவராசிகள் உள்ளேயும் தன்னை காண்பவனே பண்டிதன்' என்ற சொல் வழக்கு உள்ளது. பாரதிய கலாசாரம் வலியுறுத்துவது இதையே. இதேபோன்று ராமரின் பாதையில் நாமும் செல்ல வேண்டும்.

    வாழ்க்கையில் சத்தியம், வலிமை மற்றும் துணிவுடன் மன்னிக்கும் மனம், நேர்மை, அடக்கம், அனைவர் மீதும் அன்பு பாராட்டல், தூய்மையான எண்ணம், கடமையை நிறைவேற்றுவதில் கண்டிப்பு உள்ளிட்ட பண்புகள் ராமனிடம் இருந்து கற்று நாம் அனைவரும் பின்பற்றக்கூடியதாகும். இவற்றை நம் வாழ்வில் கொண்டுவர நேர்மை, அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைக்க வேண்டும்.

    நமது தேசிய கடமைகளை மனதில் கொண்டு, இந்த பண்புகளை நமது சமுதாய வாழ்விலும் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த பண்பின் அடிப்படையில்தான் ராமர் - லட்சுமணர் 14 ஆண்டுகள் வனவாசம் முடித்ததுடன், வலிமையான ராவணனையும் வீழ்த்தினார்கள்.

    ராமரின் குணங்களை பிரதிபலிக்கும் நீதி, கருணை, சமத்துவம், சமூக நல்லிணக்கம், நேர்மை, சமுதாய நடத்தை ஆகியவற்றை பரப்பவும்; துணிச்சலான, சுரண்டல் இல்லாத, சமநீதியை கொண்ட வலிமையான சமுதாயம் உருவாவதை உறுதிசெய்வோம். இது நாம் ராமருக்காக மேற்கொள்ளும் சமுதாய பூஜை.

    அகங்காரம், சுயநலம், பாகுபாடு உள்ளிட்ட பல்வேறு இடர்கள் காரணமாக உலகம் வீழ்ச்சியை நோக்கி செல்கிறது. பால ராமர் அயோத்தியில் எழுந்தருள்வதும், அவரது பிராண பிரதிஷ்டை நடப்படும் பாரத பூமியின் புனர் நிர்மாணத்தின் ஆரம்பம். இது எல்லோருக்கும் நன்மை பயக்கக்கூடியது, எவர் மீதும் விரோதம் பாராட்டாதது. நல்லிணக்கம், ஒற்றுமை, வளர்ச்சி, அமைதிக்கான வழியை காட்டவல்லது.

    நாம் இதை பின்பற்றி எடுத்து செல்லும் பக்தர்கள். இன்று, கோவில் எழுந்ததற்கான ஆன்மிக கொண்டாட்டங்களில் பங்கேற்கும் அதே வேளையில், பாரதத்தை புனர் நிர்மாணம் செய்து, அதன் மூலம் உலகை புனர் நிர்மாண பணியில் ஈடுபட உறுதி எடுத்துக்கொள்வோம். இந்த பேரொளியை மனதில் வைத்து, முன்னேறி செல்வது காலத்தின் கட்டாயம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரஜினி இன்று காலை மனைவி லதா மற்றும் தனுஷ், பேரன் ஆகியோருடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் அயோத்திக்கு புறப்பட்டு சென்றார்.
    • 500 வருட பிரச்சனைக்கு சுப்ரீம் கோர்ட் மூலம் தீர்வு கிடைத்துள்ளது.

    அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழா நாளை (22-ந் தேதி) நடைபெறுகிறது.

    விழாவுக்கு முக்கிய திரைப்பிரபலங்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தி திரை உலகின் முன்னணி நடிகரான அமிதாப்பச்சன், தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் மற்றும் தமிழ் திரைப்பிரபலங்கள் பலருக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

    இதைத் தொடர்ந்து ரஜினி இன்று காலை மனைவி லதா மற்றும் தனுஷ், பேரன் ஆகியோருடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் அயோத்திக்கு புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    500 வருட பிரச்சனைக்கு சுப்ரீம் கோர்ட் மூலம் தீர்வு கிடைத்துள்ளது. ராமர் கோவில் திறப்புவிழா வரலாற்றில் மறக்க முடியாத நாள். ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டைக்கான விழா இன்று ஆகமவிதிகள்படி தொடங்கியது.
    • குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டைக்கான 7 நாள் பூஜையின் தொடக்க நாளான இன்று அதிகாலை 4.30 மணிக்கு கருவறையில் பூஜைகள் நடந்தன.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தில் மிக பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. 71 ஏக்கரில் அமையும் இந்த ஆலயம் நாடு முழுவதும் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    3 அடுக்குகளுடன் கட்டப்பட்டு வரும் இந்த ஆலயத்தில் முதல் தளத்தில் மூலவர் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதற்காக 3 சிற்பிகள் குழந்தை ராமர் சிலையை வடிவமைத்துள்ளனர்.

    51 இஞ்ச் உயரம் கொண்ட குழந்தை ராமர் சிலை கருவறையில் வருகிற 22-ந்தேதி மதியம் 12.20 மணி முதல் 1 மணிக்குள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இதற்கான சிறப்பு பூஜைகளை செய்ய உள்ளார். விழாவில் சுமார் 7 ஆயிரம் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படும் குழந்தை ராமர் சிலைக்காக 3 சிற்பிகள் செய்த சிலைகளில் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய குழந்தை ராமர் சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத்ராய் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

    இந்த நிலையில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டைக்கான விழா இன்று (செவ்வாய்க்கிழமை) ஆகமவிதிகள்படி தொடங்கியது. இதையொட்டி அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இன்று முதல் 7 நாட்களுக்கு ஐதீகப்படி பூஜைகள் நடைபெறும்.

    இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு என்னென்ன பூஜைகள் மேற்கொள்ளப்படும் என்ற விவரத்தை அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டைக்கான 7 நாள் பூஜையின் தொடக்க நாளான இன்று அதிகாலை 4.30 மணிக்கு கருவறையில் பூஜைகள் நடந்தன. அங்கு முதல் தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

    இதையடுத்து புனித நீராடல் மேற்கொள்ளப்படும். இதற்காக அயோத்தி நகரில் உள்ள சரயு நதிக்கரையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு பசுக்கள் தானம் செய்யப்பட்டு பசுக்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து விஷ்ணு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

    அதன் பிறகு பிராயசித்த பூஜைகள் முறைப்படி நடத்தப்பட்டது.

    நாளை (புதன்கிழமை) குழந்தை ராமர் சிலை அயோத்திக்கு ஊர்வலமாக எடுத்து வரப்படும். அதே சமயத்தில் சரயு நதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலசங்களில் புனித நீர் எடுத்துக்கொண்டு அயோத்தி ஆலயத்துக்கு வருவார்கள்.

    அந்த புனித நீர் அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் பயன்படுத்தப்படும்.

    18-ந்தேதி (வியாழக்கிழமை) யாக சாலை பூஜைகள் தொடங்குகிறது. விநாயகர் பூஜையுடன் யாக சாலைகளில் சிறப்பு மந்திரங்கள் ஓதப்பட்டு பூஜைகள் செய்யப்படும். வருண பூஜை, வாஸ்து பூஜைகள் அடுத்தடுத்து நடைபெறும்.

    அதற்கு அடுத்த நாள் (19-ந்தேதி) யாக சாலை பூஜைகள் தொடர்ந்து நடத்தப்படும். நவக்கிரக பூஜைகள் ஆகமவிதிகளின்படி மேற்கொள்ளப்படும். இதில் ஆயிரக்கணக்கான வேத விற்பன்னர்கள் கலந்து கொள்வார்கள். இதற்காக அயோத்தி ராமர் கோவில் அருகே மிக பிரமாண்டமாக குடில்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    20-ந்தேதி (சனிக்கிழமை) அயோத்தி ராமர் கோவிலை சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். யாக சாலை பூஜைகளில் குறைகள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும். சரயு நதியில் இருந்து எடுத்து வரப்படும் புனித நீரால் ஆலயம் முழுமையாக சுத்தம் செய்யப்படும்.

    அதன் பிறகு வாஸ்து சாந்தி பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டைக்கான பூஜைகள் தொடங்கும். ஞாயிற்றுக்கிழமை (21-ந்தேதி) முழுக்க முழுக்க குழந்தை ராமர் சிலை 125 வகை அபிஷேகங்களால் புனித நீராடல் செய்யப்படும்.

    இதையடுத்து அயோத்தி ஆலயத்தில் முக்கிய நிகழ்வான குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழா 22-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும். அன்று மதியம் 12.20 மணி முதல் 1 மணிக்குள் குழந்தை ராமர் சிலையை ஆகம விதிகளின்படி பிரதிஷ்டை செய்வார்கள். இந்த பூஜையை வாரணாசியில் இருந்து வரும் வேதவிற்பன்னர்கள் கண்காணிப்பார்கள்.

    குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும்போது 121 ஆச்சார்யார்கள் வேத மந்திரங்களை முழங்குவார்கள்.

    பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலைக்கு முக்கிய பூஜைகள் செய்வார். அவருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரபிரதேச கவர்னர் ஆனந்திபென் பட்டேல், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இருப்பார்கள்.

    விழாவில் 150 நாடுகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழாவுக்கு அழைக்கப்பட்டு உள்ள சுமார் 7 ஆயிரம் பேரில் சுமார் 3 ஆயிரம் பேர் சாதுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு 21 மற்றும் 22-ந்தேதிகளில் பக்தர்கள் யாரும் ராமர் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 23-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் பக்தர்கள் அயோத்தி கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்படுவார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் 2 ராமர் சிலைகள் வைக்கப்படுகின்றன.
    • சிலைதான் வருகிற 22-ந்தேதி அன்று அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

    அயோத்தி:

    பா.ஜ.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கும் பணி கடந்த இரு வருடங்களாக முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வருகிற 22-ந்தேதி கோவிலில் மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

    கருவறையில் 'பால ராமர்' (குழந்தை பருவத்தில் ராமர்) சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. 'பிராண பிரதிஷ்டை' என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

    நாடு முழுவதும் இருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வை முன்னிட்டு சிறப்பு விமான சேவை, ரெயில் சேவை உள்பட போக்குவரத்து வசதிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏதுவாக 300 டன் அரிசி சத்தீஸ்கரில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளது.

    அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் 2 ராமர் சிலைகள் வைக்கப்படுகின்றன. அதில் ஒரு சிலை ஏற்கனவே அங்கு கடந்த 1949-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சிலையாகும். இது உற்சவர் சிலையாக இருக்கும். அங்கு நடக்கும் தேர் திருவிழா, ஊர்வலம் போன்றவற்றில் இந்த சிலை பயன்படுத்தப்படுகிறது. மற்றொரு சிலை, ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த சிலையை வடிப்பதற்கு பெங்களூருவை சேர்ந்த கணேஷ் பட், மைசூரு அருண் யோகிராஜ் மற்றும் ராஜஸ்தான் ஜெய்ப்பூரை சேர்ந்த சத்தியாநாராயண பாண்டே ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்ட 51 அங்குலம் உயரம் கொண்ட 5 வயது குழந்தை ராமர் தனது கையில் வில்லுடன் காட்சி அளிக்கும் உருவம் வரைந்து கொடுக்கப்பட்டன. அதன்படி சிலை வடிக்க அறிவுறுத்தப்பட்டது.

    அவர்கள் 3 பேரும் கடந்த ஜூன் மாதத்தில் சிலை வடிக்கும் பணியினை தொடங்கினர். அதற்கான கற்களை கோவில் அறக்கட்டளையினர் வழங்கினர். அதில் 2 கற்கள், கர்நாடக மாநில வனப்பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டன. மற்றொன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வெள்ளை கற்கள் ஆகும்.

    இந்த 3 சிற்பிகளும், முழுமையாக சிலை வடித்தனர். இதில் ஒன்றை தேர்வு செய்ய கடந்த 29-ந்தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இறுதியாக மைசூருவைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடித்த சிலை தேர்வு செய்யப்பட்டதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த சிலைதான் வருகிற 22-ந்தேதி அன்று அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

    இந்த சிலையை வடித்த அருண் யோகிராஜ் குடும்பத்தினர் 4 தலைமுறைகளாக சிலை வடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வடித்த சிலைதான் அயோத்தி ராமர் கோவிலில் இடம்பெறப் போவதால் அவர் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த நிலையில் அயோத்தி நகரம் விழாக்கோலத்திற்கு மாறத் தொடங்கி இருக்கிறது. பக்கத்து மாநிலங்களில் இருந்து மக்கள் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பி கொண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

    அதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அயோத்தி முழுக்க ஆங்காங்கே அன்னதானம் நடந்து வருகிறது. கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கும் குழந்தை ராமர் சிலையை காண மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வமும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது.

    அந்த குழந்தை ராமர் சிலை எப்படி இருக்கும் என்று வடமாநில மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையடுத்து மூலவர் ராமர் சிலையை வருகிற 17-ந்தேதி உலகுக்கு காட்ட முடிவு செய்துள்ளனர்.

    அன்றைய தினம் (17-ந்தேதி) அந்த ராமர் சிலை அயோத்தியில் நகர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இந்த தகவலை ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்து உள்ளார்.

    மேலும் அவர் கோவிலில் மூலவர் சிலையாக பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நேரத்தையும் அறிவித்துள்ளார். கோவில் வளாகத்திலும் அயோத்தி நகரில் வால்மீகி சமூகத்தினர் வசிக்கும் குடியிருப்பு பகுதியிலும் அட்ஷதை வழங்கும் நிகழ்ச்சியை நேற்று தொடங்கி வைத்தார்.

    அப்போது சம்பத்ராய் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவில் கருவறையில் பால ராமர் சிலையை நிறுவும் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி 22-ந்தேதி பிற்பகல் 12.20 மணிக்கு நடைபெறும்.

    அந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து சுற்று வட்டாரங்களிலும் மக்கள் அதிகம் கூடும் சந்தைகளிலும் பக்தர்கள் ஆரத்தி எடுத்தும் பிரசாதம் வழங்கியும் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    மாலையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு பக்தர்கள் தங்கள் வீடுகளில் ஸ்ரீராம ஜோதி என்னும் தீபமேற்றி வழிபாடு செய்யவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வேண்டுகோளை பிரதமர் நரேந்திரமோடியும் நாட்டு மக்களிடம் விடுத்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அயோத்தியில் அடுத்த மாதம் 22-ந் தேதி ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது.
    • காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஆதிர் ரஞ்சன் சவுத்திரி ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அடுத்த மாதம் (ஜனவரி) 22-ந் தேதி ராமர் கோவில் திறப்புவிழா மற்றும் கும்பாபிஷேகம் பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது.

    இந்த விழாவில் பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டவர்களுக்கும் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன.

    இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கும் ராமர் கோவில் தொடக்க விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த விழாவை புறக்கணிக்க இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கலந்து கொள்ளாது என ஏற்கனவே அக்கட்சியின் பொதுசெயலாளர் சீதாராம் யெச்சுரி அறிவித்துள்ளார். இதே போல திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜியும் புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-

    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் மம்தா பானர்ஜியோ அல்லது கட்சியின் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்க மாட்டார்கள், மதத்துடன் அரசியலை கலப்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஆதிர் ரஞ்சன் சவுத்திரி ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்வார்களா? என்பது தொடர்பாக கட்சி மேலிடம் எதுவும் அறிவிக்கவில்லை.

    இந்தியா கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறும்போது. இதுவரை விழாவில் பங்கேற்க அழைப்பு எதுவும் வரவில்லை என தெரிவித்தார்.

    • திறப்பு விழா முடிந்த பிறகு பொதுமக்கள் ராமரை தரிசிப்பதற்கான ஏற்பாட்டை பா.ஜ.க. செய்கிறது.
    • வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கம்-2 நிகழ்ச்சிக்கும், தமிழ் நாட்டில் இருந்து மக்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேசம் அயோத்தியில் ராமர் கோவிலை அடுத்த மாதம் (ஜனவரி) 22-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

    கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு கருதியும் நெரிசலை தவிர்க்கவும் பொதுமக்கள் இவ்விழாவுக்கு வர வேண்டாம் என ராம ஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இதனால், திறப்பு விழா முடிந்த பிறகு பொதுமக்கள் ராமரை தரிசிப்பதற்கான ஏற்பாட்டை பா.ஜ.க. செய்கிறது. இந்த இலவச ஆன்மிகப் பயணத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் மற்றும் பீகார் மாநிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

    இந்த நிலையில், நாடு முழுவதிலும் இருந்து 5 கோடி பேர் அயோத்தி ராமர் கோவிலில் இலவசமாக தரிசனம் செய்ய பா.ஜ.க. ஏற்பாடு செய்து உள்ளது. இதற்காக, 'ராம் தர்ஷன் அபியான்' எனும் பெயரில் ஜனவரி 24-ல் தொடங்கும் ஆன்மிக யாத்திரை மார்ச் 24 வரை நடைபெற உள்ளது.

    இதற்காக, ரெயில்வே துறையில் நாடு முழுவதிலும் இருந்து 275 சிறப்பு ரெயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதில், உணவு உள்ளிட்ட சகல வசதிகளுடன் 5 கோடி பேரும் இலவசமாக பயணம் செய்யலாம். இதன் மூலம், ராமர் தரிசனத்துடன், அயோத்தியின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் பற்றி நாட்டு மக்களை அறிய வைப்பதுதான் பா.ஜ.க.வின் நோக்கம்.

    வாரணாசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கம்-2 நிகழ்ச்சிக்கும், தமிழ் நாட்டில் இருந்து மக்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். பயணம், தங்குதல், உணவு என அனைத்து வசதிகளும் இலவசமாக அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய கல்வித்துறை அமைச்சகம் செய்தது போல், அயோத்தி பயண ஏற்பாட்டை பா.ஜ.க. செய்ய உள்ளது.

    அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக உ.பி. அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது. இவ்விழா, இந்திய வரலாற்றில் ஒரு மாபெரும் நிகழ்ச்சியாக அமையும் வகையில் மிகமிக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    • அயோத்தி ராமர் கோவில் சனாதன முறைப்படி, நாகரா கட்டிட கலையில் கட்டப்படுகிறது.
    • சனாதனம் என்பது நமது வாழ்வியல் முறை. அதனை இந்து மதத்திற்குள் மட்டும் அடக்கி விட முடியாது.

    அயோத்தி:

    அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கட்டிட வடிவமைப்பை குஜராத்தை சேர்ந்த சந்திரகாந்த் சோமபுரா என்பவர் தான் செய்து இருக்கிறார். அவருக்கு 80 வயது ஆகிறது. அவரது மகன்கள் நிகில் மற்றும் ஆசிஷ் ஆகியோர் கண்காணிப்பில் தான் தற்போது கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. கோவில் கட்டுமானம் குறித்து சந்திரகாந்த் சோமபுரா 'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி அளித்தார்.

    அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- அயோத்தி ராமர் கோவில் வடிவமைக்கும் வாய்ப்பு கிடைத்தது எப்படி?

    பதில்:- எங்களது சோமபுரா குடும்பம் பல ஆண்டுகளாக கோவில் கட்டும் பணியை செய்து வருகிறோம். நான் அதில் 15-வது தலைமுறை. எனது தந்தை தான் சோம்நாத் கோவிலை கட்டினார். பிர்லா மந்திர் கோவில்கள் எல்லாம் எங்களால் கட்டப்பட்டவை தான். எனவே தொழில் அதிபர் பிர்லா தான், அப்போது விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக்லால் சிங்காவிடம் என்னை பரிந்துரை செய்தார்.

    கேள்வி:- அயோத்தி ராமர் கோவில் வரைபடம் தயாரித்த அனுபவம் பற்றி சொல்லுங்கள்?

    பதில்:- ராம ஜென்ம பூமியில் கோவில் கட்ட வேண்டும், அதற்கு வடிவமைப்பு செய்து தாருங்கள் என்று 1989-ம் ஆண்டு என்னிடம் கேட்டார்கள். அதற்காக என்னை கோவில் வளாகத்திற்குள் அழைத்து சென்றார்கள். அப்போது இங்கு ராணுவ பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதனால் கட்டிட அளவு எடுப்பதற்கான உபகரணங்கள், பேனா, பென்சில், பேப்பர் என எந்த பொருட்களையும் எடுத்து வர முடியவில்லை. இதனால் நான் நடந்தே அளவு எடுத்தேன். ஒவ்வொரு அளவையும் எனது மனதில் குறிப்பு எடுத்து வைத்து கொண்டேன். பின்னர் வீட்டிற்கு திரும்பியவுடன் கோவில் கட்டுமானத்திற்கு 3 வரைபடங்கள் தயாரித்தேன். அதனை அடிப்படையாக கொண்டு, மரத்தால் கோவில் மாதிரியை உருவாக்கினேன். இந்த கோவில்கள் 1992-ம் ஆண்டு நடந்த கும்பமேளா விழாவின்போது சாமியார்கள் பார்வைக்கு வைத்தேன். அதில் அவர்கள் தேர்வு செய்த ஒன்றுதான் அயோத்தி ராமர் கோவிலாக தற்போது உருவாகி வருகிறது.

    கேள்வி:- பல நாற்றாண்டுகளை தாண்டி நிலைத்து இருக்கும் தென்னகத்து கோவில்களான மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில்களுடன் அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்தை ஒப்பிட முடியுமா?

    பதில்:- மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவிலுக்கு எல்லாம் நானும் வந்திருக்கிறேன். தமிழகத்தில் உள்ள கோவில்கள் எல்லாம் மிகவும் நேர்த்தியாக, கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ளன. அதில் சந்தேகம் எதுவும் இல்லை. ஆனால் கோவில்கள் என்பது வெறும் கட்டிட கலை அல்ல. அதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கோவிலுக்கு சென்றால் நமக்கு ஒரு அதிர்வலைகளை அது ஏற்படுத்த வேண்டும். மன நிம்மதி, சந்தோஷம் ஆகியவற்றை தர வேண்டும். இவற்றை மீனாட்சி அம்மன் கோவில்போல் அயோத்தி ராமர் கோவிலும் பக்தர்களுக்கு தரும் என்பதில் நீங்கள் எள்ளளவும் சந்தேகப்பட வேண்டாம். அதே நேரத்தில் அயோத்தி கோவில் கட்டுமானத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால் பழங்கால முறைப்படி, நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டு வரும் கோவில் என்பதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    கேள்வி:- நீங்கள் குறிப்பிடும் பழங்கால முறைப்படியான கட்டுமானம் என்பது எது?

    பதில்:- அயோத்தி ராமர் கோவில் சனாதன முறைப்படி, நாகரா கட்டிட கலையில் கட்டப்படுகிறது. இந்த கோவிலுக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டு உள்ளது. கற்களின் ராஜாவான ராஜஸ்தான் இளஞ்சிவப்பு கற்கள் மூலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கற்கள் பல நூற்றாண்டுகள் நிலைத்து நிற்கும். கோவில் கட்டுமானத்தில் இரும்பு, உருக்கு போன்று எந்த உலோகங்களையும் பயன்படுத்தவில்லை. பழங்கால முறைப்படி வெறும் கற்கள் மூலமே, நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்படுகிறது. இந்த கோவில் சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து நிலைத்து இருக்கும். அதனை தற்போது உள்ள தொழில்நுட்ப வல்லுனர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். நிலநடுக்கம், வெள்ளம்-மழை போன்ற எந்த ஒரு பேரிடரையும் தாங்கி நிற்கும் அளவுக்கு கோவில் மிக வலுவாக கட்டப்பட்டு வருகிறது. பழங்கால கோவில்களில் உள்ளது போன்று அயோத்தி கோவிலிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

    கேள்வி:- சனாதன தர்மத்திற்கான கோவில் என்பதனை எப்படி புரிந்து கொள்வது?

    பதில்:- சனாதனம் என்பது நமது வாழ்வியல் முறை. அதனை இந்து மதத்திற்குள் மட்டும் அடக்கி விட முடியாது. ஒவ்வொரு மனிதனும் அதனை கடைபிடிக்க வேண்டும். அது மதத்திற்கானது அல்ல, மனிதனுக்கு ஆனது என்ற பார்வையில் அதனை அணுக வேண்டும். அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் வெறும் ராமர் கோவில் மட்டுமின்றி இதர தெய்வங்கள் கோவிலும் கட்டப்பட உள்ளது.

    கேள்வி:- இந்த கோவிலின் சிறப்பம்சமாக எதனை நீங்கள் சொல்வீர்கள்?

    பதில்:- அயோத்தி ராம ஜென்ம பூமியில், ராமர் கோவில் கட்டுவதே மாபெரும் சிறப்பானது. சுமார் 2.7 ஏக்கர் பரப்பளவில், 58 ஆயிரம் சதுரடியில் 3 தளங்களுடன் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அதன் கருவறை எண்கோண வடிவத்தில் கட்டப்படுகிறது. அதுதான் கோவிலின் உச்சபட்ச சிறப்பு அம்சம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அயோத்தி கோவிலில் அர்ச்சகர்களுடன் சேர்த்து சுமார் 150 பேர் பணியாற்றுகின்றனர்.
    • ஊதிய உயர்வுக்கு பிறகு அனைவரின் சம்பளம் இரு மடங்கை நெருங்கும் என கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்படுகிறது. அடுத்த வருடம் ஜனவரியில் இக்கோவில் திறக்கப்பட உள்ளது. இதற்கான பலன் வரும் பாராளுமன்ற தேர்தலில் தமக்கு கிடைக்கும் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது. இதற்கு கோவில் ஊழியர்கள் ஒரு தடையாக இருந்து விடக்கூடாது என்பது பா.ஜ.க.வின் எண்ணமாக உள்ளது.

    இச்சூழலில் அனைவருக்கும் ஊதிய உயர்வு அளிக்க, அக்கோவிலை கட்டிவரும் ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை, உத்தர பிரதேச அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

    கோவில் தலைமை அர்ச்சகரின் மாத சம்பளம் ரூ.25,000 ஆக உள்ளது. இது ரூ.32,500 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதற்குமுன் ரூ.15,520 என்றிருந்த அவர்களது மாத சம்பளம் இந்த ஆண்டு ஏப்ரலில் ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் 6 மாதங்களில் அவர்களுக்கான ஊதியம் இரண்டு மடங்கு உயர்கிறது.

    இதுபோல் உதவி அர்ச்சகர்களுக்கு கடந்த ஏப்ரலில் ரூ.20,000 என்றிருந்த சம்பளம் ரூ.31,960 ஆகவும், இதர உதவியாளர்களுக்கு ரூ.8,940 என்றிருந்த ஊதியம் இனி ரூ.24,440 ஆகவும் உயர்த்தி தரப்படும். ராமர் கோவிலின் மற்ற பணியாளர்களுக்கும் இதேபோல் ஊதிய உயர்வு கிடைக்கும். வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோவிலிலும் இதுபோல் அனைவருக்கும் ஊதிய உயர்வு அளிக்கப்பட உள்ளது.

    இதற்காக 16 பேர் கொண்ட ஓர் ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையில் அனைவரது சம்பளம், இதர படிகள் மற்றும் சலுகைகளை உயர்த்தலாம் என அறிவுறுத்தியது. இதையடுத்து இதன்படி சம்பள உயர்வு அளிக்கலாம் என உத்தரபிரதேச அரசுக்கு காசி விஸ்வநாதர் கோவில் அறக்கட்டளை பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையையும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.

    வாரணாசி அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.60 ஆயிரமும் இதர பணியாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.47 ஆயிரம் வரையும் சம்பளம் கிடைக்கிறது. ஊதிய உயர்வுக்கு பிறகு அனைவரின் சம்பளம் இரு மடங்கை நெருங்கும் என கூறப்படுகிறது. இக்கோவிலில் அர்ச்சகர்களுடன் சேர்த்து சுமார் 150 பேர் பணியாற்றுகின்றனர். இக்கோவிலில் தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிரந்தரமும் அளிக்கப்பட உள்ளது. உத்தர பிரதேச அரசின் இந்த முடிவுக்கு எதிர்வரும் மக்களவைத் தேர்தல் காரணமாக கூறப்படுகிறது.

    • ராம ஜென்ம பூமியில் யோகி ஆதித்யநாத் வழிபாடும் மேற்கொண்டார்.
    • ராமர் கோவில் கட்டுமானப்பணியின் முன்னேற்றம் குறித்து அதன் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராயிடம் யோகி ஆதித்யநாத் கேட்டறிந்தார்.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஓட்டல் ஒன்றில், பல்வேறு மேம்பாட்டுப்பணிகள் தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர், அயோத்தியில் நடைபெறும் தீப உற்சவ விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ளும்படியும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் யோகி ஆதித்யநாத், அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப்பணியை திட்டமிட்ட காலத்தில், உயர்ந்த தரத்தில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    ராம ஜென்ம பூமியில் யோகி ஆதித்யநாத் வழிபாடும் மேற்கொண்டார்.

    பின்னர், ராமர் கோவில் கட்டுமானப்பணியின் முன்னேற்றம் குறித்து அதன் அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராயிடம் யோகி ஆதித்யநாத் கேட்டறிந்தார்.

    இதுதொடர்பாக அலுவலர்களிடமும் விவரங்களை கேட்டு தெரிந்துகொண்ட முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுடனும் உரையாடினார். 

    • ராம்ஜானகி பாதை, பக்தி பாதை போன்றவற்றுக்கான செயல்திட்டம் தயாராகி விட்டது.
    • விமான நிலையம் மற்றும் ரெயில் நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன.

    லக்னோ:

    அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமியில் மிக நீண்ட போராட்டங்களுக்குப்பிறகு பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதையொட்டி அயோத்தி நகர் முழுவதும் உள்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாநில அரசு தீவிரப்படுத்தி உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    ராமர் கோவில் திறக்கப்படுவதை முன்னிட்டு அயோத்தியில் நடந்து வரும் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அந்தவகையில் சகாதத்கஞ்சில் இருந்து நயா காட் செல்லும் 13 கி.மீ. நீள ராம பாதைப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன.

    ராம்ஜானகி பாதை, பக்தி பாதை போன்றவற்றுக்கான செயல்திட்டம் தயாராகி விட்டது. ராமஜென்ம பூமி பாதை 30 மீட்டரும், பக்தி பாதை 14 மீட்டரும் அகலம் கொண்டவை.

    விமான நிலையம் மற்றும் ரெயில் நிலையங்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன.

    ராமஜென்ம பூமி மற்றும் அனுமன்ஹார்கி கோவில் செல்லும் பக்தர்கள் எளிதில் சென்று வருவதற்கு சாலை வசதிகள் முக்கியமானது என்பதால் அந்த பணிகளும் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன.

    பிரமாண்டமான கோவில் மற்றும் அதற்கான வசதிகளுக்காக அயோத்தி நகரின் இந்த விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு வியாபாரிகள் எத்தகைய தயக்கமும் இன்றி தங்கள் கடைகள் இருக்கும் இடத்தை வழங்கி வருகின்றனர்.

    இதற்காக வழங்கப்படும் இழப்பீடு தொகை தொடர்பாக புகார்கள் எதுவும் இல்லை. அயோத்தி நகர விரிவாக்க பணிகளுக்காக அப்புறப்படுத்தப்படும் வியாபாரிகளுக்கு புதிய வணிக வளாகங்களில் கடைகள் ஒதுக்கப்படும்.

    ராமர் கோவில் திறப்பு விழாவுக்காக ஏராளமான கடைகளுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் இந்த மேம்பாட்டு பணிகளை தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    ×