search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அயோத்தி கோவில் தொடக்க விழா: இந்தியா கூட்டணி தலைவர்கள் புறக்கணிப்பு?
    X

    அயோத்தி கோவில் தொடக்க விழா: இந்தியா கூட்டணி தலைவர்கள் புறக்கணிப்பு?

    • அயோத்தியில் அடுத்த மாதம் 22-ந் தேதி ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது.
    • காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஆதிர் ரஞ்சன் சவுத்திரி ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அடுத்த மாதம் (ஜனவரி) 22-ந் தேதி ராமர் கோவில் திறப்புவிழா மற்றும் கும்பாபிஷேகம் பிரமாண்டமான முறையில் நடைபெறுகிறது.

    இந்த விழாவில் பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டவர்களுக்கும் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன.

    இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கும் ராமர் கோவில் தொடக்க விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த விழாவை புறக்கணிக்க இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கலந்து கொள்ளாது என ஏற்கனவே அக்கட்சியின் பொதுசெயலாளர் சீதாராம் யெச்சுரி அறிவித்துள்ளார். இதே போல திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜியும் புறக்கணிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:-

    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் மம்தா பானர்ஜியோ அல்லது கட்சியின் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்க மாட்டார்கள், மதத்துடன் அரசியலை கலப்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ஆதிர் ரஞ்சன் சவுத்திரி ஆகியோருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்வார்களா? என்பது தொடர்பாக கட்சி மேலிடம் எதுவும் அறிவிக்கவில்லை.

    இந்தியா கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறும்போது. இதுவரை விழாவில் பங்கேற்க அழைப்பு எதுவும் வரவில்லை என தெரிவித்தார்.

    Next Story
    ×