search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புழல் சிறை"

    • மனிதாபிமான அடிப்படையில் கழிவறைக்கு செல்ல அனுமதித்த போலீசாரை ஏமாற்றி அங்கிருந்து ரியாஸ் கான் ரசாக் தப்பியோடிவிட்டார்.
    • விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, விக்கிரவாண்டி மற்றும் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் அனுப்பினார்.

    விக்கிரவாண்டி:

    இலங்கை திரிகோண மலையைச் சேர்ந்த அப்துல் முஸ்தபா மகன் ரியாஸ் கான் ரசாக் (வயது 39). இவர் மதுரை பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றிவந்தார். இவரை விசாரித்ததில் ஆவணங்கள் இன்றி மதுரையில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடத்து மதுரை தெற்கு வாசல் போலீசார் இவர் மீது கடந்த 2019-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு விசாரணைக்காக மதுரை கோர்ட்டில் நேற்று வந்தது. இதற்காக ரியாஸ் கான் ரசாக்கை புழல் சிறையில் இருந்து மதுரைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வழக்கு விசாரணை முடிந்து மீண்டும் சென்னை புழல் சிறைக்கு திரும்பினர்.

    அப்போது இரவு 8.45 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பேரணி கூட்ரோடு அருகே உள்ள ஓட்டலில் போலீஸ் வாகனத்தை நிறுத்தி விட்டு குற்றவாளியை அழைத்துக் கொண்டு போலீசார் சாப்பிட சென்றனர். அப்போது தனக்கு வயிறு கோளாறாக உள்ளது என்று கூறிய ரியாஸ் கான் ரசாக் கழிவறைக்கு சென்று வருவதாக போலீசாரிடம் கூறினார்.

    மனிதாபிமான அடிப்படையில் கழிவறைக்கு செல்ல அனுமதித்த போலீசாரை ஏமாற்றி அங்கிருந்து ரியாஸ் கான் ரசாக் தப்பியோடிவிட்டார்.

    இது குறித்து விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, விக்கிரவாண்டி மற்றும் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் அனுப்பினார். தப்பிச் சென்ற குற்றவாளியை உடனடியாக பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க விழுப்புரம் மாவட்ட போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனால் விக்கிரவாண்டி பகுதி மீண்டும் பரபரப்பாகியுள்ளது.

    இது தவிர, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்ட போலீசாருக்கு இத்தகவல் அனுப்பப்பட்டது. 

    • புழல் சிறையில் நேர்காணல் செய்திடும் அறையில் சிறைவாசிகளிடம் உறவினர்கள் பேசுவதற்கு இன்டர்காம் வசதி அமைக்கப்பட்டது.
    • இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் ஏ.சி., வெல்டிங் மெஷின், ஹோம் அப்ளையன்சஸ் 3 மாத கால பயிற்சி ஆண் சிறைவாசிகளுக்கு அளிக்கப்பட்டது.

    சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக அம்ரீஸ் பூஜாரி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு புதிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

    புழல் சிறையில் நேர்காணல் செய்திடும் அறையில் சிறைவாசிகளிடம் உறவினர்கள் பேசுவதற்கு இன்டர்காம் வசதி அமைக்கப்பட்டது. சிறை பாதுகாப்பினை மேம்படுத்திட 5 நவீன கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.

    இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் ஏ.சி., வெல்டிங் மெஷின், ஹோம் அப்ளையன்சஸ் 3 மாத கால பயிற்சி ஆண் சிறைவாசிகளுக்கு அளிக்கப்பட்டது. டெய்லரிங் மற்றும் எம்பிராய்டரி பயிற்சி முடித்த பெண் சிறைவாசிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    ஊடுகதிர் அலகிடும் எந்திரம் ரூ.180 லட்சம் செலவில் கொள்முதல் செய்து நிறுவப்பட்டு இயங்கி வருகிறது. ஆயத்த ஆடை வடிவமைப்பு பயிற்சி முடித்த 20 சிறைவாசிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    சிறைவாசிகளுக்கு தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் மூலமாக வாய்ப்பாட்டு பயிற்சி மற்றும் இதர இசை கருவிகள் வாசிப்பு பயிற்சி தொடங்கப்பட்டது.

    கனரக தொழில்கூட சலவை எந்திரம் சிறைவாசிகளின் பயன்பாட்டிற்கென வாங்கி பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறைவாசிகளால் உருவாக்கப்பட்ட மூலிகை நர்சரியும் தொடங்கப்பட்டுள்ளது.

    • நாகராஜ் திடீரென தன்னிடம் இருந்த மாத்திரை, மருந்தை அளவுக்கு அதிகமாக தின்றார்.
    • உடல்நிலை பாதிக்கப்பட்ட நாகராஜை உடனடியாக மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    செங்குன்றம்:

    கொருக்குப்பேட்டை, ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் நாகராஜ் (32). பழைய வண்ணாரப்பேட்டை போலீசார் இவரை போக்சோ வழக்கில் கைது செய்து இருந்தனர். அவர் தண்டனை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    ஜெயிலில் இருந்த போது நாகராஜிக்கு உடலில் சொறி, சிரங்கு நோயால் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவருக்கு சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் மாத்திரை மற்றும் மருந்துகள் கொடுக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நாகராஜ் திடீரென தன்னிடம் இருந்த மாத்திரை, மருந்தை அளவுக்கு அதிகமாக தின்றார். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை உடனடியாக மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை நாகராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புழல் சிறையில் கைதிகள் சொகுசாக வசித்த விவகாரத்தின் தொடர்ச்சியாக மதுரை மத்திய சிறையில் உதவி ஆணையர் தலைமையில் 150 போலீசார் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். #MaduraiCentralPrison
    மதுரை:

    சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் இருந்த டி.வி.க்கள், எப்.எம். ரேடியோக்கள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். 

    சிறை அறைக்குள் இவை எப்படி வந்தன? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறையில் இருந்தவாறே வங்காளதேசம், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்போன்களில் சிலர் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த சிறைக் காவலர்கள் குறித்து விசாரணை நடைபெற்றது. மேலும் புழல் சிறையின் 5 தண்டனை கைதிகள் தமிழகத்தின் வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர். 

    இதனிடையே இன்று காலை மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் உதவி ஆணையர், 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 150 போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிறை கைதிகளிடம் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் உள்ளதா என சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    முன்னதாக கடந்த 16-ந் தேதி சேலம், கோவை மற்றும் கடலூர் சிறைகளிலும், 19-ந் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது சிறைகளில் தடை செய்யப்பட்ட சில பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியது. புழல் சிறையில் கைதிகளின் சொகுசு வாழ்க்கை புகாரை தொடர்ந்து தமிழக சிறைகளில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    முதல் வகுப்பு கைதிகள் தொலைக்காட்சி பெட்டிகளை வைத்துக்கொள்ள சிறை விதிகள் அனுமதிக்கிறது என சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். #PuzhalPrison #CVeShunmugam
    சென்னை:

    சென்னை புழல் மத்திய சிறையில் 750-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.

    இந்நிலையில் புழல் சிறையில் தண்டனை கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சில கைதிகள் சொகுசு மெத்தையுடன் கூடிய அறை, ஆடம்பர உடை, விதவிதமான உணவுகள், செல்போன்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது.

    மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக இன்று விளக்கமளித்த சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் கூறியதாவது:-

    முதல் வகுப்பு சிறைகளில் கைதிகள் தொலைக்காட்சிகளை வைத்துக்கொள்ள சிறை விதி அனுமதிக்கிறது. சிறை விதிகளின்படி கைதிகள் தங்களின் அறைகளில் வர்ணம் பூசிக் கொள்ளலாம். சிறையின் உள்ளே கலைகள் வரைய படிக்கும் கைதிகள் சிறை அதிகாரிகள் அனுமதியுடன் இதுபோல வரைந்து கொள்கின்றனர். 

    சில அதிகாரிகள் உதவியுடன் செல்போன்கள் மட்டும் சிறைக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    என தெரிவித்தார். 
    சென்னை புழல் சிறையில் கைதிகள் சொகுசாக வாழ்ந்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோவை, சேலம் மற்றும் கடலூர் மத்திய சிறைகளில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். #TNPrisons
    சென்னை:

    சென்னை புழல் மத்திய சிறையில் 750-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.

    இந்நிலையில் புழல் சிறையில் தண்டனை கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சில கைதிகள் சொகுசு மெத்தையுடன் கூடிய அறை, ஆடம்பர உடை, விதவிதமான உணவுகள், செல்போன்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்தது.

    இதனால் சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் இருந்த டி.வி.க்கள், எப்.எம். ரேடியோக்கள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். சிறை அறைக்குள் இவை எப்படி வந்தன? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சிறையில் இருந்தவாறே வங்காளதேசம், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்போன்களில் சிலர் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த சிறைக் காவலர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதனிடையே புழல் சிறையில் கைதிகள் சொகுசாக இருப்பதாக புகைப்படங்கள் வெளியானதை அடுத்து சேலம், கடலூர், கோவை மத்திய சிறையில் 180க்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

    சேலத்தில் துணை ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமையில்  40 போலீசாரும், கடலூரில் டிஎஸ்பி லாமேக் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசாரும் காலை 6 மணி முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதே போல் கோவையில் எஸ்.பி செந்தில்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சிறை கைதிகளிடம் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் உள்ளதா எனவும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
    சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள த.வா.க தலைவர் வேல்முருகன் மீது நெய்வேலி காவல்நிலையத்தில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #VelMurugan
    சென்னை:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த மாதம் 1-ந்தேதி உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடி தாக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கடந்த 26-ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இரண்டு நாட்கள் சிறையில் உண்ணாவிரதம் இருந்ததன் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். சிறுநீரக கோளாறும் இருப்பதால் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதால் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் வேல்முருகன் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 124ஏ,153, 153ஏ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனை அடுத்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அவரை போலீசார் கைது செய்தனர்.
    சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட த.வா.க தலைவர் வேல்முருகன், சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் இன்று உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    சென்னை:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த மாதம் 1-ந்தேதி உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடி தாக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று முன்தினம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் வேல்முருகன் நேற்று காலை புழல் சிறையில் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு உண்மை நிலையை கண்டு அறிய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக இந்த உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

    தொடர்ந்து சாப்பிட மறுத்த வேல்முருகன் இன்று 2-வது நாளாக புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்தார். தனது கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் என அவர் அறிவித்திருந்த நிலையில், திடீரென அவர் உடல்நலக்குறைவுக்கு உள்ளானார்.

    இதனை அடுத்து, அவரை போலீசார் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 
    ×