search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் சோதனை"

    • வழக்கை மாநில அரசு தேசிய புலனாய்வுக்கு மாற்றியது.
    • கண்காணிப்பு கேமிராவில் பதிவான வாலிரை பிடிக்க 8 தனிப்படை அமைத்து தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூரு:

    பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் கபேவில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக போலீசார் மேற்கொண்ட ஆய்வில் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருந்து காட்சியில் வாலிபர் ஒருவர் ஓட்டலுக்கு தலையில் தொப்பி மற்றும் முககவசம் அணிந்து வந்து ரவா இட்லி சாப்பிட்டு விட்டு ஒரு பையை விட்டு விட்டு சென்றதும், அந்த பையில் இருந்து குண்டு வெடித்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த வழக்கை மாநில அரசு தேசிய புலனாய்வுக்கு மாற்றியது.

    தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறனர். மேலும் கண்காணிப்பு கேமிராவில் பதிவான வாலிரை பிடிக்க 8 தனிப்படை அமைத்து தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த வாலிபரை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அந்த சந்தேக நபர் கர்நாடக மாநிலம் தும்கூரில் தலைமறைவாக இருப்பதாக தேசிய புலனாய்வு முகமைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து 28 வாகனங்களில் போலீசார் தும்கூர் நகருக்கு இரவு சென்றனர்.

    பின்னர் தும்கூர் போலீசாருடன் இணைந்து இரவு முழுவதும் அங்குள்ள ரெயில் நிலையம், பேருந்து நிலையம், மாநகரட்சி வளாகம், மண்டிப்பேட்டை உள்பட நகரின் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமிராக்களை கைப்பற்றியும் ஆய்வு செய்தனர்.

    இதனால் தும்கூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
    • பஸ்-ரெயில் மற்றும் விமான நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோவை:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த ஓட்டல் குண்டுவெடிப்பு சம்பவத்தை முன்னிட்டு தமிழகத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். அந்த வகையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கோவை மாவட்டத்தில் வாளையாறு, ஆனைக்கட்டி உள்பட 10-க்கும் மேற்பட்ட சோதனைச்சாவடிகளில் தற்போது போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அந்த வழியாக செல்லும் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவற்றின் டிரைவர்களிடம் உரிய போக்குவரத்து ஆவணங்களை கேட்டு வாங்கி சோதனை செய்து வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

    கோவையில் பஸ்-ரெயில் மற்றும் விமான நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வரும் பயணிகள் மெட்டல் டிடெக்டர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். மேலும் அவர்களது உடைமைகளையும் போலீசார் தீவிரமாக பரிசோதனை செய்து வருகின்றனர்.

    இதுதவிர இரவுநேரங்களில் போலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக ரோந்துப்பணிகளில் ஈடுபடுகின்றனர். இதுதவிர கோவையில் உள்ள விடுதிகளில் சந்தேகப்படும்படி யாராவது தங்கி உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் திரிபவர்களை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று அவர்களிடம் வீட்டு முகவரி மற்றும் செல்போன் எண்ணை சேகரித்து அனுப்பி வருகின்றனர். கோவை ஓட்டல்களில் தங்கியிருக்கும் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

    நீலகிரி மாவட்டத்தில் இருந்து கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு செல்வதற்காக பிரத்யேக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு தற்போது கூடுதலாக போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மேலும் அந்த பகுதிகளில் விடிய-விடிய வாகன தணிக்கை சோதனைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

    குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி தமிழகம்-கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் அமைந்து உள்ள கக்கநல்லா சோதனைச்சாவடியில் கூடுதலாக போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அங்கு கூடலூர் போலீஸ் டி.எஸ்.பி வசந்தகுமார் தலைமையில் போலீசார் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

    • ஒவ்வொரு பத்திரப்பதிவு முடிந்த பின்னரும், சார்பதிவாளரின் உதவியாளர் வெளியில் வந்தபடியே இருந்தார்.
    • திடீரென உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே நாகம்மாபுதூரில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தினமும் பத்திரப்பதிவுகள் நடப்பது வழக்கம்.

    இந்த நிலையில் இந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில், அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்களை ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் மூலமாக லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவுகள் நடந்து வருவதாக கடந்த ஒரு மாத காலமாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

    இதையடுத்து கோவை லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி. திவ்யா தலைமையிலான போலீசார் நேற்று காலை அன்னூர் நாகம்மாபுதூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு, திறப்பதற்கு முன்பே சாதாரண உடையில், சாதாரண காரில் சென்றனர்.

    காலை 10 மணிக்கு சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், பத்திரப்பதிவு அலுவலகத்தில் என்னென்ன நடக்கிறது என்பதை கண்காணித்த படியே இருந்தனர்.

    அப்போது ஒவ்வொரு பத்திரப்பதிவு முடிந்த பின்னரும், சார்பதிவாளரின் உதவியாளர் வெளியில் வந்தபடியே இருந்தார்.

    அப்படி வரும் அவர், அங்கு தனியார் இ-சேவை மையம் நடத்தி வருபர்களிடம் ஏதோ பேசி கொண்டும், அதனை தொடர்ந்து கையில் பையுடனும் உள்ளே சென்ற வண்ணம் இருந்தார்.

    இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக கண்காணித்தபடி இருந்தனர்.

    மாலை 4 மணிக்கு எல்லாம் பத்திரப்பதிவுகள் முடிந்து விடும். ஆனால் இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் மாலை 6.30 மணியை தாண்டியும் பத்திரப்பதிவுகள் நடந்த வண்ணம் இருந்தது.

    இரவாகியும் யாரும் வீட்டிற்கு செல்லவில்லை. இதையடுத்து காலை முதல் இரவு வரை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடக்க கூடியவற்றை கண்காணித்து கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இரவு 8.30 மணிக்கு ஏ.டி.எஸ்.பி திவ்யா தலைமையில், சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.

    அப்போது அங்கு அதிகாரிகள் பணத்தை பங்கு போடுவதற்கு தயாராக இருந்தனர்.

    திடீரென உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

    இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தின் கதவுகளை மூடினர்.

    மேலும் அங்கிருந்தவர்கள் யாரையும் வெளியில் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. அவர்கள் வைத்திருந்த செல்போன்களையும் பறிமுதல் செய்து கொண்டனர்.

    தொடர்ந்து அலுவலகம் முழுவதும் அங்குலம், அங்குலமாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது, அங்கு கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் பணம் இருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அலுவலகத்தில் கடந்த 6 மாத காலமாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட ஆவணங்களையும் சரிபார்த்தனர். முக்கிய ஆவணங்களையும் எடுத்து கொண்டனர். அங்கிருந்த அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

    இதேபோல், சார்பதிவாளர் அலுவலகம் எதிரே உள்ள தனியார் இ-சேவை மையத்திலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கிருந்து ரூ.49 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் பணத்திற்கான உரிய ஆவணங்களை காண்பித்ததால் அந்த பணத்தை அவர்களிடம் திரும்ப ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். இரவு 8.30 மணிக்கு தொடங்கிய சோதனையானது இன்று காலை 9 மணிக்கு தான் நிறைவு பெற்றது. 12 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனையானது நீடித்தது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களையும், கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இது சம்பந்தமாக , லஞ்சம் வாங்கியவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவுத்துறைக்கு பரிந்துரை செய்ய உள்ளனர்.

    சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையானது அன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அங்குலம், அங்குலமாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் கம்ப்யூட்டர்கள் உள்பட முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன.
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜுலை மாதம் ஜெகநாதன் (66 ) துணை வேந்தராக பதவி ஏற்றார். அவரது பதவி காலம் ஜுன் 2024 வரை உள்ளது.

    இந்நிலையில் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோ கருப்பூர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார், அதில், துணை வேந்தர் ஜெகநாதன், பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல், கணினி அறிவியல் இணை பேராசிரியர் சதீஷ் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோர் இணைந்து பூட்டர் அறக்கட்டளை என்ற பெயரில் கல்வி நிறுவனமும், அப்டெக்கான் போரம் என மற்றொரு அமைப்பையும் ெதாடங்கி உள்ளனர்.

    இவர்கள் பெரியார் பல்கலைக்கழக பிரதி நிதிகளாக இருந்து கொண்டு அரசு அனுமதியின்றி துணை அமைப்புகளை தொடங்கி இயக்குனர்களாக உள்ளனர். அதனால் ஜெகநாதன், தங்கவேல், சதீஷ், பல்கலைக்கழக சட்டப்பிரிவு 19-ன் படி பொது ஊழியர்களாக கருதப்படு கின்றனர். புதிதாக தொழில் தொடங்க கூடாது அதற்கு பல்கலை மற்றும் தமிழக அரசு அனுமதி பெற வேண்டும், விதி மீறிய இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இது குறித்து சூரமங்கலம் உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையில் போலீசார் விசாரித்து நேற்று முன்தினம் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியில் வந்த துணை வேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். அவரை சேலத்திற்கு அழைத்து வந்து 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    பின்னர் கருப்பூர் போலீசார் ஜெகநாதன் உள்பட 4 பேர் மீதும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, சொந்த நிறுவனம் தொடங்கி லாப நோக்கில் செயல்பட்டது, போலி ஆவணங்களை தயாரித்து தனி நிறுவனங்களை தொடங்கி யது உள்பட 8 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    பின்னர் இரவு 10 மணியளவில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப் பட்டது. அப்போது அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் இ.சி.ஜி. உள்பட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து ஜே.எம்.2 மாஜிஸ்திரேட் தினேஷ்குமார் வீட்டில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது ஒரு வாரத்திற்கு சூரமங்கலம் போலீசில் தினமும் கையெழுத்திட வேண்டும், 8-வது நாளில் நேரில் ஆஜராக வேண்டும் என கூறி மாஜிஸ்திரேட் நிபந்தனை ஜாமீன் வழங்கினார். தொடர்ந்து நேற்று சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் ஜெகநாதன் கையெழுத்திட்டு சென்றார்.

    இதற்கிடையே பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துணை வேந்தர் அலுவலகம், இல்லம், ஆய்வு மாளிகை விடுதி, பதிவாளர் தங்கவேலு வீடு, அலுவலகம், அவரது கணினி அறிவியல் அலுவலகம், கணினி அறிவியல் உதவி பேராசிரியர் சதீஷின் அலுவலகம் , சூரமங்கலத்தில் உள்ள துணை வேந்தர் வீடு ஆகிய 7 இடங்களில் உதவி கமிஷனர்கள் தலைமையில் 40 பேர் அடங்கிய போலீசார் சோதனையை தொடங்கினர். அங்குலம், அங்குலமாக நடத்தப்பட்ட இந்த சோதனையில் கம்ப்யூட்டர்கள் உள்பட முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன.

    இதில் துணை வேந்தர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது வீட்டில் யாரும் இல்லை. அங்கிருந்த அலுவலக நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் வீட்டில் இருந்து கட்டு கட்டாக முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து துணை வேந்தர் ஜெகநாதனின் வீட்டிற்கு ஜெராக்ஸ் மற்றும் ஸ்கேன் மிஷின்களை எடுத்து சென்றனர். அங்கு கைப்பற்றிய ஆவணங்களை அந்த எந்திரங்கள் மூலம் நகல் எடுத்து அதனை அட்டை பெட்டிகளில் அடைத்து எடுத்து சென்றனர்.

    துணை வேந்தர் வீடு உள்பட 7 இடங்களிலும் போலீசாரின் சோதனை விடிய, விடிய நடந்தது. 2-வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருவதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே தலைமறைவாக உள்ள பதிவாளர் உள்பட 3 பேரையும் பிடிக்க போலீசார் நடிவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் துணை வேந்தர் ஜாமீனுக்கு எதிராக புகார்தாரர் இளங்கோ தரப்பிலும், அரசு தரப்பிலும் மேல் முறையீடு செய்யப்படும் என்றும் புகார்தாரர் இளங்கோ கூறி உள்ளார்.

    • சோதனையின் போது கல்குவாரி சம்பந்தமாக ஏதாவது ஆவணங்கள் இருக்கிறதா என்பதையும் பார்த்தனர்.
    • தி.மு.க.வில் மாநில விளையாட்டு அணி துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

    கோவை:

    தி.மு.க முன்னாள் அமைச்சரும், சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவருமான பொங்கலூர் பழனிசாமி கோவை பீளமேட்டில் வசித்து வருகிறார்.

    இவரது பெயரில், கர்நாடக மாநிலத்தில் அதிகளவில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு கற்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், இவர் நடத்தி வரும் கல்குவாரிகள், அரசின் விதியை மீறி செயல்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து போலீசார் இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் கல்குவாரி உரிமையாளரான பொங்கலூர் பழனிசாமியின் வீட்டில் சோதனை நடத்த கர்நாடக மாநில போலீசார் முடிவு செய்தனர்.

    இதற்காக அவர்கள் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். கோர்ட்டு சோதனை மேற்கொள்ள போலீசாருக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து கர்நாடக மாநில போலீசார் 15 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை கோர்ட்டு ஆர்டருடன் கோவைக்கு வந்தனர்.

    கோவை ராமநாதபுரம் கிருஷ்ணா வீதியில் உள்ள பொங்கலூர் பழனிசாமியின் வீட்டிற்கு சென்று, கோர்ட்டு ஆர்டரை காண்பித்து விட்டு சோதனை மேற்கொண்டனர். அவரது வீடு முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர்.

    சோதனையின் போது கல்குவாரி சம்பந்தமாக ஏதாவது ஆவணங்கள் இருக்கிறதா என்பதையும் பார்த்தனர்.

    இந்த வீட்டில் பொங்கலூர் பழனிசாமியின் மகன் பைந்தமிழ் பாரி வசித்து வருகிறார். இவர் தி.மு.க.வில் மாநில விளையாட்டு அணி துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

    இதேபோல் பீளமேட்டில் உள்ள பொங்கலூர் பழனிசாமியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கல்லூரியிலும் கர்நாடக போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீட்டில் கர்நாடக போலீசார் சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விழா நடைபெறும் கல்லூரி மைதானத்திற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
    • மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    நாடு முழுவதும் 76-வது சுதந்திர தினவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் 2 துணை கமிஷனர்கள், 5 உதவி கமிஷனர்கள் மற்றும் 10 இன்ஸ்பெக்டர்கள் என 1200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விழா நடைபெறும் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்திற்குள் இன்று முதல் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்க ப்பட்டுள்ளது. மேலும் விழா நடைபெறும் கல்லூரி மைதானத்திற்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    இதேபோல் திருப்பூர் மாநகரில் உள்ள லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகள் போன்றவற்றில் நேற்று இரவு முதல் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உரிமையாளர்களிடம் சந்தேகப்படும்படியாக யாராவது தங்கி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீசுக்கு தகவல் தெரிவிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

    அதேபோல் 12 ரோந்து வாகனங்களில் போலீசார் விடிய விடிய ரோந்து சுற்றி வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவின் பேரில் காங்கேயம், தாராபுரம், பல்லடம், உடுமலை என மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • மனிதாபிமான அடிப்படையில் கழிவறைக்கு செல்ல அனுமதித்த போலீசாரை ஏமாற்றி அங்கிருந்து ரியாஸ் கான் ரசாக் தப்பியோடிவிட்டார்.
    • விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, விக்கிரவாண்டி மற்றும் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் அனுப்பினார்.

    விக்கிரவாண்டி:

    இலங்கை திரிகோண மலையைச் சேர்ந்த அப்துல் முஸ்தபா மகன் ரியாஸ் கான் ரசாக் (வயது 39). இவர் மதுரை பகுதியில் சந்தேகப்படும் படியாக சுற்றிவந்தார். இவரை விசாரித்ததில் ஆவணங்கள் இன்றி மதுரையில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடத்து மதுரை தெற்கு வாசல் போலீசார் இவர் மீது கடந்த 2019-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு விசாரணைக்காக மதுரை கோர்ட்டில் நேற்று வந்தது. இதற்காக ரியாஸ் கான் ரசாக்கை புழல் சிறையில் இருந்து மதுரைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வழக்கு விசாரணை முடிந்து மீண்டும் சென்னை புழல் சிறைக்கு திரும்பினர்.

    அப்போது இரவு 8.45 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பேரணி கூட்ரோடு அருகே உள்ள ஓட்டலில் போலீஸ் வாகனத்தை நிறுத்தி விட்டு குற்றவாளியை அழைத்துக் கொண்டு போலீசார் சாப்பிட சென்றனர். அப்போது தனக்கு வயிறு கோளாறாக உள்ளது என்று கூறிய ரியாஸ் கான் ரசாக் கழிவறைக்கு சென்று வருவதாக போலீசாரிடம் கூறினார்.

    மனிதாபிமான அடிப்படையில் கழிவறைக்கு செல்ல அனுமதித்த போலீசாரை ஏமாற்றி அங்கிருந்து ரியாஸ் கான் ரசாக் தப்பியோடிவிட்டார்.

    இது குறித்து விழுப்புரம் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, விக்கிரவாண்டி மற்றும் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் அனுப்பினார். தப்பிச் சென்ற குற்றவாளியை உடனடியாக பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க விழுப்புரம் மாவட்ட போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனால் விக்கிரவாண்டி பகுதி மீண்டும் பரபரப்பாகியுள்ளது.

    இது தவிர, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்ட போலீசாருக்கு இத்தகவல் அனுப்பப்பட்டது. 

    • பண்ருட்டி பகுதிகளில் ஓட்டல்கள், லாட்ஜ்களில் போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர்.
    • உரிய அடையாள சான்று இல்லாத நபர்களுக்கு அறைகள் கொடுக்க வேண்டாம் எனவும் லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

    கடலூர்:

    பண்ருட்டியில் லாட்ஜ்களில்காவல் ஆய்வாளர் நந்தகுமார் தலைமையிலான காவல் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சிறப்புச்சோதனையில் பழைய குற்றவாளிகள், சந்தேக நபர்கள் யாரேனும் தங்கி உள்ளனரா, ஆயுதங்கள், போதைப் பொருட்கள் வைத்துள்ளனரா என்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்கள் அல்லது பொருட்கள் குறித்து தகவல் அறிந்தால் உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவும், உரிய அடையாள சான்று இல்லாத நபர்களுக்கு அறைகள் கொடுக்க வேண்டாம் எனவும் லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

    ×