search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதிகளுக்கு சொகுசு வசதிகள் விவகாரம் - மதுரை மத்திய சிறையில் போலீசார் சோதனை
    X

    கைதிகளுக்கு சொகுசு வசதிகள் விவகாரம் - மதுரை மத்திய சிறையில் போலீசார் சோதனை

    புழல் சிறையில் கைதிகள் சொகுசாக வசித்த விவகாரத்தின் தொடர்ச்சியாக மதுரை மத்திய சிறையில் உதவி ஆணையர் தலைமையில் 150 போலீசார் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். #MaduraiCentralPrison
    மதுரை:

    சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சிறைத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில் இருந்த டி.வி.க்கள், எப்.எம். ரேடியோக்கள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். 

    சிறை அறைக்குள் இவை எப்படி வந்தன? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறையில் இருந்தவாறே வங்காளதேசம், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்போன்களில் சிலர் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த சிறைக் காவலர்கள் குறித்து விசாரணை நடைபெற்றது. மேலும் புழல் சிறையின் 5 தண்டனை கைதிகள் தமிழகத்தின் வெவ்வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர். 

    இதனிடையே இன்று காலை மதுரை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காவல் உதவி ஆணையர், 2 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 150 போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிறை கைதிகளிடம் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் உள்ளதா என சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    முன்னதாக கடந்த 16-ந் தேதி சேலம், கோவை மற்றும் கடலூர் சிறைகளிலும், 19-ந் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது சிறைகளில் தடை செய்யப்பட்ட சில பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியது. புழல் சிறையில் கைதிகளின் சொகுசு வாழ்க்கை புகாரை தொடர்ந்து தமிழக சிறைகளில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×