search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக கூட்டணி"

    • டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் தே.மு.தி.க.வை அழைக்காததால் அக்கட்சி சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.
    • வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது.

    இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையில் ஒரு கூட்டணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு கூட்டணியும் அமைந்து உள்ளது.

    இதில் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பாரதிய ஜனதா கூட்டணியில் அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    டெல்லியில் நேற்று முன்தினம் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் தே.மு.தி.க.வை அழைக்காததால் அக்கட்சி சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.

    தே.மு.தி.க.வை விட குறைவான ஓட்டு வங்கி வைத்துள்ள சிறிய கட்சிகளுக்குகூட அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் தே.மு.தி.க.வை கண்டு கொள்ளாதது அக்கட்சி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    இதனால் வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலையில் தே.மு.தி.க. கட்சி தி.மு.க. கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு உண்டா? என்று தி.மு.க. மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழ்நாட்டில் தி.மு.க. தான் அதிக இடங்களில் போட்டியிடும். கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் எங்களது தொகுதி பங்கீடு இருக்கும்.

    இப்போதைய சூழலில் தி.மு.க. கூட்டணியில் இருக்கிற கட்சிகளுக்கே தொகுதி கொடுக்க முடியாமல் திணறி வருகிறோம்.

    இந்த நிலையில் தே.மு.தி.க. உள்ளிட்ட புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை என்றனர்.

    தே.மு.தி.க. கட்சிக்கு ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்த அளவில் ஓட்டுகள் இருந்தாலும் அது சட்டசபை தேர்தலுக்குதான் உதவும் என்பதால் பாராளுமன்ற தேர்தலுக்கு தே.மு.தி.க.வை பெரிய கட்சிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக தெரிகிறது.

    எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுமா? இல்லையா? என்பது போக போகத் தான் தெரியவரும்.

    இதுகுறித்து தே.மு.தி.க. தனது கூட்டணி நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கும் என தெரிகிறது.

    ×