search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு விபத்து"

    • வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்த 4 கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.
    • பட்டாசு வெடிவிபத்தில் மேலும் 2 பேர் பலியான சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள குருவிமலை அடுத்த வளத்தோட்டம் பகுதியில் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை இருந்தது.

    கடந்த 22-ந்தேதி மதியம் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் இருந்தபோது திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலை முழுவதும் தீ பரவி அங்கிருந்த வெடிகள், மூலப்பொருட்கள் வெடித்து சிதறின.

    இந்த வெடி விபத்தில் காஞ்சிபுரம் பல்லவன் தெருவை சேர்ந்த பூபதி, பள்ளூரை சேர்ந்த முருகன், குருவிமலையை சேர்ந்த தேவி, காஞ்சிபுரத்தை சேர்ந்த சுதர்சன் உள்பட மொத்தம் 9 பேர் சம்பவம் நடந்த அன்றே பலியானார்கள். இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்த 4 கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.

    வெடிவிபத்தில் உடல் கருகிய 18 பேர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வளத்தோட்டம் பகுதியை சேர்ந்த கஜேந்திரன்(50), மற்றும் கூத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் ஜெகதீஷ் (35) ஆகிய 2 பேர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர்.

    இதனால் பட்டாசு வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது. இன்னும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 5 பேர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 2 பேர், காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 9 பேர் என மொத்தம் 16 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அவர்களது உடல் நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். பட்டாசு வெடிவிபத்தில் மேலும் 2 பேர் பலியான சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
    • தோட்டத்தின் மத்தியில் குடிசை தொழிலாக பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அணைக்கரை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இதில் அங்கு வேலை பார்த்த ஒரு ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பட்டாசு ஆலையின் உரிமையாளர், தோட்டத்தின் மத்தியில் குடிசை தொழிலாக பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். விபத்து நடந்தபோது ஒருவர் மட்டுமே வேலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • பட்டாசு விபத்தில்லாத மாவட்டமாக உருவாக்க தொழிலாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் பேசினார்.
    • இந்த பயிற்சி வகுப்பு எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்தை தடுக்கும் முதலீடாகும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் தனியார் கல்லூரி யில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் பட்டாசு உற்பத்தி தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதை கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தொழி லக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மூலம் தொழிற்சாலை பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த பாதுகாப்பு கையேடுகளை கலெக்டர் வெளியிட்டு தொழிலாளர்களுக்கு வழங்கினார். பின்னர் அவர் பேசியதா வது:-

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற் சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிபு ணர்களை கொண்டு இந்த காலத்திற்கு ஏற்றவாறு தொழிற்சாலைகள் அமைத்தல் மற்றும் பாது காப்பான உற்பத்தி முறையை கையாளுதல் தொடர்பாக, பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    இதையடுத்து விருதுநகர் மற்றும் சிவகாசி கோட்டங்க ளில் 28 விழிப்புணர்வு முகாம்கள் நடத்த திட்ட மிடப்பட்டு, இன்று முதல் விழிப்புணர்வு முகாம் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பட்டாசு தொழிற் சாலைகளில், விபத்தில்லா உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு விழிப் புணர்வு முகாம்கள், கருத்த ரங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

    பட்டாசு உற்பத்தி தொழில் சுமார் 50 ஆண்டு களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் பல்வேறு மக்களுக்கு வேலைவாய்ப்பும், நாட்டின் பொருளாதரத்தில் மிகப் பெரிய பங்களிப்பையும் இந்த தொழில் வழங்கி வருகிறது.

    இந்த பயிற்சி வகுப்பு எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்தை தடுக்கும் முதலீடாகும். நாட்டின் பல்வேறு வளர்ச்சி, முன்னேற்றங்களுக்கு காரணம் தொழிலாளர்கள் தான். அத்தகைய தொழி லாளர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

    எனவே இந்த கருத்த ரங்கை நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு அரசின் மூலம் பட்டாசு விபத்தை தடுப்பதற்கு எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும், நடவ டிக்கைகளுக்கும் பட்டாசு தொழிலாளர்கள், உறு துணையாக இருந்து விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்குவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கருத்தரங்கில் இணை இயக்குநர்கள் (தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம்) வேல்முருகன் (விருதுநகர்), ரவிசந்திரன் (சிவகாசி), சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, டான்பாமா தலைவர் கணேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • பட்டாசு விபத்தில் மூதாட்டி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
    • வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்தார்.

    சென்னை:

    நாமக்கல், வீட்டில் பட்டாசுகள் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம் மற்றும் கிராமம் மேட்டுத் தெரு பகுதியில் இன்று அதிகாலையில் அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறிய விபத்தில் தில்லைக்குமார் (35), பிரியா (28), செல்வி (55) மற்றும் பெரியக்காள் (73) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

    இவ்விபத்தில் காயமுற்றவர்களுக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு தலா ரூபாய் இரண்டு லட்சம் மற்றும் காயமுற்றவர்களுக்கு தலா ரூபாய் ஐம்பதாயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்தார்.

    • விபத்தில் மூதாட்டி உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இன்று அதிகாலை வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் வீடு முழுவதும் தரைமட்டமாகியது.

    இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயை கடும் போராட்டத்திற்கு பிறகு கட்டுக்குள் கொண்டு வந்ததை அடுத்து உள்ளே சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.

    இந்த விபத்தில் மூதாட்டி உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பட்டாசு கடை உரிமையாளர் உள்பட மேலும் இருவர் உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுதாகர் தனது காரை வீட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு வீட்டில் தீபாவளி கொண்டாடினார்.
    • தீபாவளி என்பதால் பட்டாசு ஏதாவது பட்டு தீப்பிடித்ததா? அல்லது காரினுள் கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்ததா? என்பது குறித்து தெரியவில்லை.

    செஞ்சி:

    செஞ்சி அருகே உள்ள பரதன்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 25). இவர் தனக்கு சொந்தமாக சைலோ கார் வாடகைக்கு ஓட்டி வருகிறார். நேற்று தீபாவளி அன்று தனது காரை வீட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு வீட்டில் தீபாவளி கொண்டாடினார்.

    அப்போது கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இது குறித்து உடனடியாக செஞ்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் செஞ்சி தீயணைப்பு அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், சசுபதி ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    எனினும் கார் முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்தது. தீபாவளி என்பதால் பட்டாசு ஏதாவது பட்டு தீப்பிடித்ததா? அல்லது காரினுள் கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்ததா? என்பது குறித்து தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    சம்பவம் நடந்தபோது அந்த வழியாக சென்ற சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு தீயை அணைப்பதற்கான ஏற்பாடுகளை முடுக்கிவிட்டனர்.

    • திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நாட்டு வெடி வெடிக்கப்பட்டது
    • வெடித்து சிதறி கூட்டத்துக்குள் புகுந்ததில் குமரப்பட்டியைச் சேர்ந்த 13 வயது சிறுமிகள் உள்பட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கள்ளிப்பட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் இக்கோவில் திருவிழா வெகு விமரிசையாக கிராம மக்களால் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான திருவிழா தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று சாமி வீதி உலா புறப்பாடுக்காக ஆயத்தமானது. இதனை தெரிவிக்கும் வகையில் நாட்டு வெடி வெடிக்கப்பட்டது. அப்போது ஒரு பகுதியில் கட்டப்பட்டிருந்த வெடி திடீரென எதிர்பாராத விதமாக வெடிக்க தொடங்கியது.

    இந்த வெடித்து சிதறி கூட்டத்துக்குள் புகுந்ததில் குமரப்பட்டியைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக மணப்பாறையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதேபோல் கள்ளிப்பட்டி சேர்ந்த 16 வயது சிறுமி, 13 வயது சிறுமி, சத்யா (27), பாஸ்கர் (57), குமரப்பட்டியை சேர்ந்த பானுமதி (36) உள்ளிட்டோருக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதையடுத்து சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பட்டாசு வெடிக்க முன் அனுமதி பெறப்பட்டதா, விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்பட்டதா என விசாரணை நடக்கிறது. கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்தது நிகழ்வு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


    சிவகாசியில் நடந்த வெடிவிபத்தில் 3 மாடி கட்டிடம் நொறுங்கியது. அங்கு வேலை பார்த்த 2 பெண்கள் கதி என்ன? என்பது தெரியவில்லை. 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
    சிவகாசி :

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ் லைன் நேருஜி நகரில் உள்ள ஒரு வீட்டை மதுரையை சேர்ந்த ராமநாதன் என்பவர் வாடகைக்கு பிடித்திருந்தார். தரைக்கு கீழே ஒரு தளமும், தரைக்கு மேல் 2 மாடிகளும் என 3 அடுக்குகளை கொண்ட இந்த வீட்டில், பட்டாசு மூலப்பொருளான ரசாயனம் சேர்க்கும் குழாய்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த வீட்டில் பட்டாசுகள் அதிக அளவில் பதுக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிறுவனத்தில் வேல்முருகன் (வயது 37), மனோஜ்குமார் (27), கார்த்தீசுவரி (33), ஹமிதா (55) ஆகியோர் பணியாற்றி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் இந்த வீட்டில் திடீரென பட்டாசுகள் வெடித்து பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. 3 அடுக்குகளும் அப்படியே நொறுங்கி, தரைமட்டத்துக்கு மேல் வெறும் இடிபாடுகளாக காட்சி அளித்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிவகாசி தீயணைப்பு படை வீரர்கள் 2 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறிய வண்ணமாக இருந்ததால் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் சம்பவ இடத்தை நெருங்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் தவித்தனர்.

    ஒரு மணி நேரத்திற்கு பின்னர் சம்பவ இடத்தை தீயணைப்பு வீரர்கள் நெருங்கி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதன் பின்னர் எந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்றது.

    இந்த விபத்தில் அங்கு வேலை பார்த்து வந்த வேல்முருகன், மனோஜ் குமார் ஆகியோர் காயத்துடன் உயிர் தப்பினர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் பணியில் இருந்த கார்த்தீசுவரி, ஹமிதா ஆகிய 2 பெண்களையும் காணவில்லை. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மீட்பு பணியை துரிதப்படுத்த உதவினர். இந்த விபத்திற்கு பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததுதான் காரணம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மாயமான பெண்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. எனவே அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். எந்திரங்களைக் கொண்டு இடிபாடுகளை முற்றிலுமாக அகற்றிய பின்னரே உயிரிழப்பு ஏதும் இருக்கிறதா? என தெரியவரும். இந்த வெடிவிபத்து சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    விழுப்புரம் கோட்டக்குப்பம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, பட்டாசு வெடித்ததில் தந்தை- மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடை அணிந்தும், பட்டாசு வெடித்தும் பொதுமக்கள் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தீபாவளிக்கு முந்தைய நாட்களிலேயே பட்டாசு போன்ற பொருட்களை பொதுமக்கள் கொள்முதல் செய்து வைத்து, இன்று குதூகலமாக கொண்டாடி வருகின்றனர்.

    பட்டாசு, இனிப்புகளை உறவினர்களுக்கும் வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். இன்று விழுப்புரம்- புதுச்சேரியில் எல்லையை ஒட்டியுள்ள கோட்டக்குப்பம் அருகே இரு சக்கர வாகனத்தில் தந்தை- மகன் ஆகியோர் பட்டாசு எடுத்து சென்றுள்ளனர். அப்போது இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது.

    இதில் தந்தை- மகன் வைத்திருந்த பட்டாசு எதிர்பாராத விதமாக வெடித்தது. இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    ×