search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம் பட்டாசு விபத்து- பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு
    X

    காஞ்சிபுரம் பட்டாசு விபத்து- பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

    • வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்த 4 கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.
    • பட்டாசு வெடிவிபத்தில் மேலும் 2 பேர் பலியான சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள குருவிமலை அடுத்த வளத்தோட்டம் பகுதியில் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை இருந்தது.

    கடந்த 22-ந்தேதி மதியம் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் இருந்தபோது திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலை முழுவதும் தீ பரவி அங்கிருந்த வெடிகள், மூலப்பொருட்கள் வெடித்து சிதறின.

    இந்த வெடி விபத்தில் காஞ்சிபுரம் பல்லவன் தெருவை சேர்ந்த பூபதி, பள்ளூரை சேர்ந்த முருகன், குருவிமலையை சேர்ந்த தேவி, காஞ்சிபுரத்தை சேர்ந்த சுதர்சன் உள்பட மொத்தம் 9 பேர் சம்பவம் நடந்த அன்றே பலியானார்கள். இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்த 4 கட்டிடங்கள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.

    வெடிவிபத்தில் உடல் கருகிய 18 பேர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வளத்தோட்டம் பகுதியை சேர்ந்த கஜேந்திரன்(50), மற்றும் கூத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் ஜெகதீஷ் (35) ஆகிய 2 பேர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர்.

    இதனால் பட்டாசு வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்து உள்ளது. இன்னும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 5 பேர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 2 பேர், காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 9 பேர் என மொத்தம் 16 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அவர்களது உடல் நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். பட்டாசு வெடிவிபத்தில் மேலும் 2 பேர் பலியான சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×