search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளர்கள் போராட்டம்"

    • பஸ் தொழிலாளர்கள் கடந்த 29-ந் தேதி திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    • ஒப்பந்த அடிப்படையில் ஆள் எடுப்பதை நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்ததை ஏற்று தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கக்கூடாது, காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் குரல் கொடுத்து வருகின்றன.

    இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஏற்பட்டு வருவதால் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் (ஸ்டிரைக் நோட்டீஸ்) செய்வதாக கூறி போக்குவரத்து கழக நிர்வாகத்திற்கு ஏப்ரல் மாதம் நோட்டீஸ் வழங்கினர். இது தொடர்பாக இருமுறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

    இந்த நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் 526 டிரைவர்களை வேலைக்கு எடுத்து அவர்களுக்கு பணி ஒதுக்க முயற்சி நடந்தது. இதையறிந்த பஸ் தொழிலாளர்கள் கடந்த 29-ந் தேதி திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்தது. ஒப்பந்த அடிப்படையில் ஆள் எடுப்பதை நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்ததை ஏற்று தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினார்கள்.

    இதற்கிடையே ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்கிய சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினருடன் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்தில் 31-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த பேச்சுவார்த்தையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம், தொழிலாளர் நல கூடுதல் கமிஷனர் மாநகர போக்குவரத்துக் கழக பொது மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கோரிக்கைகளுக்கான தீர்வு காணப்படவில்லை. இதனால் வருகிற 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    4-வது கட்டமாக நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களையும் அழைக்க வேண்டும் என்று சி.ஐ.டி.யு. சங்கம் வலியுறுத்தி உள்ளது.

    • மாதத்தில் 15 நாட்கள் பணி வழங்காததால் சம்பள இழப்பு ஏற்படுகிறது.
    • போராட்டத்தில் ஈடுபட்டோர் பணி வழங்காததால் சம்பள இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுகிறோம்.

    சென்னை:

    அயனாவரம் பணிமனையில் 126 பஸ்கள் உள்ளன. இங்கிருந்து பெசன்ட் நகர், ரெட்ஹில்ஸ், ஆவடி, திருவான்மியூர், கோயம்பேடு உள்ளிட்ட சென்னையில் பல இடங்களுக்கு பஸ்கள் செல்கின்றன. 741 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.

    இந்த தொழிலாளர்கள் பணிக்காக அதிகாலை 3 மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட்டு வருகின்றனர். அவ்வாறு பணிக்கு வரும் தொழிலாளர்கள் தினமும் காலை 10 பேர், மாலை 10 போ் பேருந்துகள் இல்லை, டிரைவர் இல்லை என திருப்பி அனுப்படுகின்றனர். இதில் பெரும்பாலும் கண்டக்டர்கள்தான் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். மாதத்தில் 15 நாட்கள் பணி வழங்காததால் சம்பள இழப்பு ஏற்படுகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை பணிமனை முன்பு பணி வழங்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து போக்குவரத்து தொழிலாளர்கள் கூறியதாவது:-

    போராட்டத்தில் ஈடுபட்டோர் பணி வழங்காததால் சம்பள இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுகிறோம். பஸ்கள் இல்லாமலும் டிரைவர் இல்லாமலும் பணிகள் வழங்காவிட்டால் முந்தைய ஆட்சி காலத்தில் பஸ் நிலையத்தில் பயணிகள் பிக் அப், பஸ் நிலையத்தில் உள்ள ஆட்டோ, மற்ற வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி, யோகா விடுப்புகள் அனுப்பினால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படாது.

    மேலும் பணி வழங்காமல் திருப்பி அனுப்பினால் பணிக்கு வந்ததற்கான வருகைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளோம் என்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • சுமார் 30 லாரிகள் மது பாட்டில்களை ஏற்றி வந்தன.
    • டாஸ்மாக் கடைகளுக்கு கொண்டு செல்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டத்தில் மதுபான குடோன் செண்பகராமன் புதூர் பகுதியில் உள்ளது. இந்த குடோனுக்கு பல்வேறு மதுபான கம்பெனிகளில் இருந்து சுமார் 30 லாரிகள் மது பாட்டில்களை ஏற்றி வந்தன. ஆனால் அவற்றை இறக்க முடியாமல் அனைத்து லாரிகளும் குடோன் முன்பு நிறுத்தப்பட்டுள்ளன.

    மது பானங்களை லாரிகளில் இருந்து இறக்கும் சுமை தூக்கும் தொழிலாளர்களில் 44 பேர், சி.ஐ.டி.யூ. பணியாளர்களாக உள்ளனர். அவர்கள் தற்போது கூடுதல் இறக்க கூலி கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மாவட்ட பொருளாளர் முருகன் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தை பொது செயலாளர் சந்திரபோஸ் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் தங்க மோகன், கணேசன், வின்சென்ட், ராஜன், மீரான், ஆறுமுகவேல் உட்பட பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

    போராட்டம் காரணமாக லாரிகளில் இருந்து மது பாட்டில்களை இறக்குவதிலும், அதனை டாஸ்மாக் கடைகளுக்கு கொண்டு செல்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் மது தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

    • லாரி டிரைவர், உதவியாளர், சுமை தூக்கும் தொழிலாளர்கள், சுமை இறக்கும் தொழிலாளர்கள் என 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
    • காஞ்சிபுரம் தமிழ்நாடு வாணிபக் கழக டாஸ்மாக் குடோன் முன்பு ஒரு மணி நேரத்துக்கு மேலாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் அரசு டாஸ்மாக் குடோன் உள்ளது. மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து எடுத்து வரப்படும் மதுபான பாட்டில்கள் இங்கிருந்து வாகனங்கள் மூலம் அரசு மதுபானக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

    காஞ்சிபுரம் கிழக்கு பகுதியில் மட்டும் சுமார் 110 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதில் படப்பை, வாலாஜாபாத், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லாரிகளில் மதுபானங்கள் கொண்டு வரப்பட்டது. இந்த டாஸ்மாக் குடோனில் இருந்து பொருட்களை ஏற்றி செல்ல 15 ஆண்டுகளாக உள்ளூர் நிறுவனம் ஏலம் எடுத்து நடத்தி வந்தது. இந்த ஆண்டு வேறு ஒரு வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் இன்று முதல் வேலை இருக்காது என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

    இந்த நிறுவனத்தில் லாரி டிரைவர், உதவியாளர், சுமை தூக்கும் தொழிலாளர்கள், சுமை இறக்கும் தொழிலாளர்கள் என 150-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். திடீரென்று வேறு நிறுவனத்துக்கு டெண்டர் மாறியது காரணமாக பணி வழங்கப்படாது என நினைத்து காஞ்சிபுரம் தமிழ்நாடு வாணிபக் கழக டாஸ்மாக் குடோன் முன்பு ஒரு மணி நேரத்துக்கு மேலாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த டாஸ்மாக் அதிகாரிகள் இன்று அவர்களுக்கு வழக்கம் போல் வேலை வழங்கியதால் அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    • பொன்னேரி அடுத்த சின்னம்பேடு பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது.
    • கடந்த 4 நாட்களாக இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இன்று அவர்களது போராட்டம் 5-வது நாளாக நீடித்து வருகிறது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த சின்னம்பேடு பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் ஒப்பந்த பணியாளர்களாகவும், நிரந்தர பணியாளர்களாகவும் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் தொழிற்சாலை முன்பு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை உடனே வழங்கிட வேண்டும், உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு பணப்பலன்களை வழங்கிட வேண்டும், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளை மீண்டும் பணியமர்த்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இன்று அவர்களது போராட்டம் 5-வது நாளாக நீடித்து வருகிறது. அவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சென்னையில் பாரிமுனையில் உள்ள பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    240 நாட்கள் பணி புரிந்தால் பணிநிரந்தரம், ரூ.21 ஆயிரத்திற்கு குறையாத மாத ஊதியம், நல வாரியங்களில் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.6000-க்கு குறையாத ஓய்வூதியம், நல வாரிய நிதி பயன்களை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    சென்னையில் பாரிமுனையில் உள்ள பி.எஸ்.என்.எல். தொலைத் தொடர்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

    அதன்படி தேசிய செயலாளர் டி.எம்.மூர்த்தி தலைமையில் மறியல் போராட்டம் நடத்த தொழிலாளர்கள் குறளகம் அருகில் திரண்டனர்.

    மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அங்கிருந்து பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு ஊர்வலமாக செல்ல முயன்றனர்.

    ஆனால் அவர்கள் பேரணியாக செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    • ரூ.380 தினக் கூலியாக வழங்க வலியுறுத்தல்
    • 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகம் அருகே மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் தரையில் அமர்ந்து ஒரு நாள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உயிரை பணயம் வைத்து பணியாற்றும் ஒப்பந்த தொழி லாளர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை, பல ஆண்டுகளாக பணியில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் காண வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.380 தினக் கூலியாக வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • திருச்சி டாஸ்மாக் அதிகாரியை கண்டித்து தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
    • சுமை தூக்கி பிழைத்து வரும் எங்களிடம் மிரட்டி கமிஷன் கேட்பதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் வேலையும் தர மறுக்கிறார்கள்

    திருச்சி:

    தஞ்சாவூர் காமாட்சிபுரம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணன் (வயது 55). இவர் திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜசேகரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஒண்டிமுத்து, காளீஸ்வரன், மாவட்டத் துணை தலைவர் கள்ளிக்குடி ராஜேந்திரன், மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் இந்திரன் ஆகியோர் முன்னிலையில் திருச்சி டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் மாலதியை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார்.

    அந்த மனுவில் கூறியிருந்ததாவது:

    நான் திருச்சி டாஸ்மாக் கிடங்கில் சுமை தூக்கும் ஒப்பந்த கூலி தொழிலாளியாக கடந்த 15 வருடங்களாக வேலை பார்த்து வருகிறேன். இதனை தமிழகம் முழுவதும் ஒப்பந்தம் எடுத்துள்ள நபர் துணை ஒப்பந்ததாரர்களையும் நியமித்துள்ளார்.

    இந்த நிலையில் மேற்கண்ட ஒப்பந்ததாரர்களிடம் நான் உட்பட 50 பேர் சுமை தூக்கும் ஒப்பந்த கூலி தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகிறோம்.

    தற்போது துணை ஒப்பந்ததாரர் மற்றும் அவரது கூட்டாளிகள் சரக்கு ஏற்றி இறக்கும் ஒப்பந்த தொழிலாளர்களாகிய எங்களிடம் ஒரு சரக்கு பெட்டிக்கு ஒரு ரூபாய் கொடுக்க வேண்டும் என்று மிரட்டுகிறார்கள்.

    சுமை தூக்கி பிழைத்து வரும் எங்களிடம் மிரட்டி கமிஷன் கேட்பதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் வேலையும் தர மறுக்கிறார்கள். ஆகவே சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட மாலதி முத்தரப்பு பேச்சு வார்த்தையை நடத்தலாம் என்றார். அதற்கு பா.ஜ.க. தரப்பில் எப்போது, எங்கு பேச்சுவார்த்தை நடைபெறும் என்பதை எழுத்துப்பூர்வமாக பதிலாக தாருங்கள் என கேட்டனர்.

    அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • பசுமை தீர்ப்பாயம் உத்தரவுகளை செயல்படுத்தவில்லை என குற்றச்சாட்டு
    • நெற்றியில் நாமம் போட்டு நூதனம்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாட்டு வண்டி தொழிலாளர்கள் இன்று காலை மாட்டு வண்டிகள் மற்றும் நெற்றியில் நாமம் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மணல் குவாரிகளில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள அனுமதிக்க கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    மணல் குவாரிகளில் இருந்து தினசரி 800 லாரிகளில் 3 ஆயிரம் யூனிட்டுக்கு மேலாக மணல் அள்ளப்படுகிறது பசுமை தீர்ப்பாயம் மற்றும் கோர்ட்டு உத்தரவுகளை இதில் மதிக்கவில்லை.

    மாட்டு வண்டிகளுக்கு மணல் எடுக்க அனுமதி அட்டை வழங்க 3 மாதங்களாக சென்னை, விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் அரசு அதிகாரிகளை பலமுறை நேரில் சந்தித்து மனு கொடுத்தும் இதுவரை அனுமதி அட்டை வழங்கவில்லை. மாட்டு வண்டியில் மணல் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    • பெருந்துறை சிப்காட் பகுதியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் தொழிலாளர்கள் தரக்குறைவாக பேசியவர் மீது நடவடிககை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தொடர்ந்து போலீசார் மற்றும் ஜெயக்குமார் எம்.எல்.ஏ. போராட்டம் நடத்திய தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    பெருந்துறை:

    பெருந்துறை சிப்காட் பகுதியில் இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு கியாஸ் நிரப்பும் நிலையம் செயல்படுகிறது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கியாஸ் நிரப்பும் நிலையத்தில் ஈஸ்வரமூர்த்தி என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இதையத்து நேற்று ஈஸ்வர மூர்த்தியை முதன்மை பிளாண்டு மேலாளர் கிரிஸ் வரதராஜன் என்பவர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலைக்கு வந்தனர். இதில் 74 தொழிலாளர்கள் தரக்குறைவாக பேசியவர் மீது நடவடிககை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு தொழிலாளர்கள் பலர் குவிந்தனர்.

    இது குறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    மேலும் பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு வந்தார். தொடர்ந்து போலீசார் மற்றும் ஜெயக்குமார் எம்.எல்.ஏ. போராட்டம் நடத்திய தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×