search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4-வது கட்டமாக போக்குவரத்து தொழிற்சங்கத்துடன் 9-ந் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை
    X

    4-வது கட்டமாக போக்குவரத்து தொழிற்சங்கத்துடன் 9-ந் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை

    • பஸ் தொழிலாளர்கள் கடந்த 29-ந் தேதி திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    • ஒப்பந்த அடிப்படையில் ஆள் எடுப்பதை நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்ததை ஏற்று தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கக்கூடாது, காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் குரல் கொடுத்து வருகின்றன.

    இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஏற்பட்டு வருவதால் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் (ஸ்டிரைக் நோட்டீஸ்) செய்வதாக கூறி போக்குவரத்து கழக நிர்வாகத்திற்கு ஏப்ரல் மாதம் நோட்டீஸ் வழங்கினர். இது தொடர்பாக இருமுறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

    இந்த நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் 526 டிரைவர்களை வேலைக்கு எடுத்து அவர்களுக்கு பணி ஒதுக்க முயற்சி நடந்தது. இதையறிந்த பஸ் தொழிலாளர்கள் கடந்த 29-ந் தேதி திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்தது. ஒப்பந்த அடிப்படையில் ஆள் எடுப்பதை நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்ததை ஏற்று தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினார்கள்.

    இதற்கிடையே ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்கிய சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினருடன் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்தில் 31-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்த பேச்சுவார்த்தையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம், தொழிலாளர் நல கூடுதல் கமிஷனர் மாநகர போக்குவரத்துக் கழக பொது மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கோரிக்கைகளுக்கான தீர்வு காணப்படவில்லை. இதனால் வருகிற 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    4-வது கட்டமாக நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களையும் அழைக்க வேண்டும் என்று சி.ஐ.டி.யு. சங்கம் வலியுறுத்தி உள்ளது.

    Next Story
    ×