search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக ஆளுநர்"

    • அமித் ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்
    • இன்று காலை 10 மணிக்கு புறப்படுகிறார்

    தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 4 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் அவர் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழக அரசுடன் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.

    இன்று காலை 10 மணிக்கு புறப்படுகிறார்.

    • 40க்கும் மேற்பட்டவர்களின் உயிரைக் காவுவாங்கியும் இணையச் சூதாட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் இருப்பதற்குக் காரணமென்ன?
    • சனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பது ஆளுநருக்கு வேண்டுமானால் கைவந்த கலையாக இருக்கலாம்; இனமானத் தமிழர்களுக்கு இல்லை!

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:

    வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று, மக்களைத் தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வைத்துள்ளதாக தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிகாரத்திமிரில் துளியும் பொறுப்புணர்வின்றி, குடிமைப்பணி மாணவர்கள் மத்தியில் நச்சுக்கருத்தை உமிழ்ந்து, தன்னெழுச்சியான மக்கள் போராட்டத்தை இழிவுப்படுத்திப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. போர்க்குணத்தையும், போராட்ட உணர்வையும் மரபியல் குணங்களாக வாய்க்கப்பெற்ற தொல் தேசிய இனத்தின் மக்களான தமிழர்களை பணத்தை வாங்கிக்கொண்டு போராடுவதாகக் கொச்சைப்படுத்தியிருப்பது அபத்தத்தின் உச்சமாகும். இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.

    இங்கிலாந்து வாழ் இந்தியக் குடிமகனான அனில் அகர்வால் எனும் தனிப்பெரும் முதலாளிக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை நாட்டு நலனுக்கு எதிரானதாகக் கற்பிக்க முனையும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் வாதம் அப்பட்டமான பிதற்றலாகும். சுற்றுச்சூழல் விதிமீறலுக்காக மூடப்பட்டு, பின்பு, 100 கோடி ரூபாய் அபராதத்தோடும், நிபந்தனைகளோடுமே உச்ச நீதிமன்றத்தால் இயங்க அனுமதிக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைதான் நாட்டின் நலனுக்கான ஆலையா? 2013ஆம் ஆண்டு ஆலையின் துணைத்தலைவர் சுங்க வரி ஏய்ப்புக்காகக் கைது செய்யப்பட்டது ஆளுநர் ஆர்.என்.ரவிக்குத் தெரியுமா? ஆணவத்திலும், அகம்பாவத்திலும் எதுவுமே தெரியாது, அரைவேக்காட்டுத்தனமாக உளறலாமா? போராட்டத்தில் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆட்பட்ட மக்களைப் பணத்தை வாங்கிக் கொண்டு போராடியதாகக் கூறி அவதூறு சேற்றை வாரியிறைக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, 40க்கும் மேற்பட்டவர்களின் உயிரைக் காவுவாங்கியும் இணையச் சூதாட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் இருப்பதற்குக் காரணமென்ன? ஆளுநரது மொழி நடையில், அதற்கும் பணம்தான் காரணமென எடுத்துக் கொள்ளலாமா? பணத்திற்காகக் கங்காணி வேலைசெய்வதும், அதிகார வர்க்கத்தின் ஏவல் பிரிவாகச் செயல்பட்டு, சனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பது ஆளுநருக்கு வேண்டுமானால் கைவந்த கலையாக இருக்கலாம்; இனமானத் தமிழர்களுக்கு இல்லை!

    தமிழர்களின் வரிப்பணம் தரும் வருவாயில் உண்டுக் கொளுத்துவிட்டு, தமிழர்களை இழித்துரைத்துப் பேசுவது ஒருபோதும் ஏற்புடையதல்ல. பெரும் பெரும் ஆட்சியாளர்களையே அடக்கி ஒடுக்கி, அடிபணிய வைத்த தமிழ் மண்ணிது. இந்தியப் பெருநாட்டிற்கே அரசியல் திசைவழிக் காட்டும் பெருமிதமிக்க தமிழர் நிலமிது. ஆகவே, தமிழர்களை சீண்டிப் பார்க்கும் வேலையை, இத்தோடு ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திக் கொள்ள வேண்டுமென அன்போடு அறிவுறுத்துகிறேன். இல்லாவிட்டால், தமிழ் மக்கள் தகுந்தப் பாடம் புகட்டுவார்கள் என எச்சரிக்கிறேன்.

    • ஆளுநர் விவகாரத்தில் மற்ற மாநிலத்தில் வரும் தீர்ப்புகள் தமிழகத்திற்கும் பொருந்தும். பொறுமைக்கும் ஒரு எல்லை உள்ளது.
    • முதல்வர் ஆளுநர் விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சுகாதார பேரவையின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் எஸ்.ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரத்துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்று மேலும் சிறப்பாக செயல்படுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன கருவிகள் தேவைப்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை அரசுக்கு அனுப்பப்பட உள்ளது.

    அரசு நிதியிலிருந்து என்னென்ன பெற முடியுமோ, அதை பெற்று மக்களுக்கு உரிய உயர்தர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு செய்ய முடியாத திட்டங்களை மாவட்டத்தில் பல்வேறு செல்வாக்கு உள்ள நபர்களை சந்தித்து அவர்கள் மூலமாக நிதி பெற்று மீதமுள்ள தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழக அரசு ஆளுநரோடு மோதல் போக்கு வேண்டாம் என்று தான் நினைக்கிறோம். ஆளுநர் விவகாரத்தில் மற்ற மாநிலத்தில் வரும் தீர்ப்புகள் தமிழகத்திற்கும் பொருந்தும். பொறுமைக்கும் ஒரு எல்லை உள்ளது.

    தமிழக அமைச்சரவை கூட்டம் விரைவில் கூட உள்ளது. அப்பொழுது முதல்வர் ஆளுநர் விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாகிஸ்தான் குறித்து அம்பேத்கர் எழுதிய புத்தகத்தை படித்துள்ளேன்.
    • பிரதமர் மோடியின் உரையை உலகமே உற்று நோக்குகிறது.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் 2 புத்தகங்கள் வெளியீட்டு விழா நடந்தது.

    இந்த விழாவில் "மோடி @ 20 நனவாகும் கனவுகள்", "அம்பேத்கர் மற்றும் மோடி-சீர்திருத்த சிந்தனைகள் செம்மையான செயல்பாடுகள்" ஆகிய 2 புத்தகங்களை கவர்னர் ஆர்.என். ரவி வெளியிட்டார். இதில் மத்திய மந்திரி எல்.முருகன் பங்கேற்றார்.

    புத்தகங்களை வெளியிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

    பாகிஸ்தான் குறித்து அம்பேத்கர் எழுதிய புத்தகத்தை படித்துள்ளேன். அம்பேத்கரை அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர் ஒரு தேசியவாதி. இன்று பிரதமர் மோடியின் உரையை உலகமே உற்று நோக்குகிறது.

    பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் 100 பேரில் 93 பேர் தப்பித்து விடுகின்றனர். ஆனால் சமூக நீதி குறித்து அதிகம் பேசுகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • முதல்வர் தீர்மானத்தை வாசித்துக் கொண்டிருந்தபோதே, கவர்னர் ரவி அவையை விட்டு வெளியேறினார்
    • தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நாளை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

    தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் நேற்று கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆனால், அரசு தயாரித்துக் கொடுத்த உரையின் ஒரு சில பகுதிகளை கவர்னர் ஆர்.என்.ரவி படிக்காமல் தவிர்த்துவிட்டார். இதனால், கவர்னருக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார். அவர் தீர்மானத்தை வாசித்துக் கொண்டிருந்தபோதே, கவர்னர் ஆர்.என்.ரவி கோபத்தில் அவையை விட்டு வெளியேறினார். இதனால், சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நாளை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு ஏற்கனவே டெல்லியில்தான் இருக்கிறார். எனவே, அவர் சார்பில் ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கேட்டு ஜனாதிபதி மாளிகையில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கிடைத்தால், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக எம்.பி.க்கள் அவரை சந்திப்பார்கள். அப்போது, தமிழக சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி நடந்துகொண்ட விதம் குறித்து புகார் அளிப்பார்கள் என தெரிகிறது.

    • குஜராத்தில் பாஜக 8 முறை அல்ல, 80வது ஜெயித்தாலும் அது கேவலம்.
    • ஆளுநர் என்பவர் ஆறாவது விரலை போன்றவர்.

    அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி சென்னையில் அவரது உருவ சிலைக்கு மரியாதை செலுத்திய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

    வாக்குக்காக மட்டுமே அம்பேத்கரை பற்றி பாஜக பேசி வருகிறது. அம்பேத்கர் இன்னைக்குத்தான் அவர்களது கண்ணுக்கு தெரிகிறார். வல்லபாய் படேலுக்கு ஏன் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சிலை வைச்சாங்க. நாட்டின் பெருமை காந்தியா, அம்பேத்கரா, வல்லபாய் படேலா? இந்தியாவை தாண்டி மலேசியா, சிங்கபூர் நாடுகளில் கூட வல்லபாய் படேலை தெரியாது.

    என்.எல்.சியில் நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுக்காததை கண்டித்து மிக விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம். உழைப்பில் இருந்து நுட்பமாக தமிழர்களை வெளியேற்றி விட்டனர். அப்போது அந்த உழைப்புக்கு வட இந்தியர்கள் வருகிறார்கள். கிராமங்களில் வட இந்தியர்கள் நாத்து நடுகிறார்கள். கரும்பு வெட்டுகிறார்கள்.

    எல்லா இடத்திலும் அவர்கள் இருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு வாக்குரிமை கொடுத்து விட்டால் இந்த நிலத்தின் அரசியலையும், அதிகாரத்தையும் வட மாநிலத்தவர்களே தீர்மானிப்பார்கள். அப்போது நாங்கள் அரசியல் அதிகாரமற்ற அடிமையாவோம். இலங்கையில் நடந்துதான் இங்கும் நடக்கும். அதற்குள் தமிழக மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

    நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். 20 ஆண் வேட்பாளர்களும், 20 பெண் வேட்பாளர்களும் களம் இறக்கப்படுவார்கள். குஜராத் தேர்தல் வாக்குப் பதிவின்போது ஒரே ஆள் மொத்த வாக்கையும் பதிவு செய்கிறார். இது குறித்த காணொலி உள்ளது. இதை வெற்றி என்று சொல்வதற்கு வெட்கமாக இல்லையா, இப்படி வெற்றி பெறுவதற்கு பதில் விஷம் குடித்து சாகலாம். அவர்கள் (பாஜக) 8 முறை அல்ல 80 வது முறை ஜெயித்தாலும் அது கேவலம்.

    கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் போது ஆளுநர் என்பவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியாது. அப்போது ஆளுநர் சட்டசபையில் மட்டும் பேசி விட்டு போவார். தற்போது மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒத்துழைப்பதில்லை. ஆன்லைன் விளையாட்டு அவசர சட்டத்திற்கு ஏன் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை? ஆளுநர் என்பவர் ஆறாவது விரல் போன்றவர். தமிழகத்திற்கு ஆளுநர் தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று அவர் மீது புகார் புராணம் பாடுவதை ஏற்க முடியாது.
    • மங்களூரில் குண்டு வெடிப்பு நடந்த 2 மணி நேரத்தில் அது தீவிரவாத தாக்குதல் என்று கர்நாடக காவல்துறை வெளிப்படையாக கூறியது.

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கிண்டி ராஜ்பவனில் இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். அப்போது மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் தமிழகத்தில் ஊழல் நடந்து இருப்பதாகவும், பிரதமர் மோடி வருகையின்போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் பற்றியும் விசாரணை நடத்த வேண்டும் என்று 2 மனுக்கள் கொடுத்தார்.

    இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலக செஸ் விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்தார். நேரு விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில் கலந்து கொண்டு செஸ் போட்டியை தொடங்கி வைத்தார்.

    அவரது பாதுகாப்பில் மிகப்பெரிய பாதுகாப்பு குளறுபடிகள் நடந்துள்ளன. மெட்டல் டிடெக்டர் கருவிகள் வேலை செய்யாமல் இருந்துள்ளன. அதன் வழியாகத்தான் எல்லோரும் சென்றுள்ளார்கள்.

    இதுபற்றி மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது. இது பற்றி மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறது. ஒரு பிரதமருக்கே பாதுகாப்பு இல்லாத ஆட்சியில் சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்?

    மங்களூரில் குண்டு வெடிப்பு நடந்த 2 மணி நேரத்தில் அது தீவிரவாத தாக்குதல் என்று கர்நாடக காவல்துறை வெளிப்படையாக கூறியது.

    ஆனால் கோவையில் நடந்தது குண்டுவெடிப்பு. இதன் பின்னணியில் தீவிரவாத இயக்கம் உள்ளது என்பதை கண்டுபிடித்தும் இதுவரை தீவிரவாத தாக்குதல் என்பதை சொல்ல காவல்துறை தயங்குகிறது. காரணம் உண்மையை சொன்னால் பதவியில் இருந்து தூக்கி விடுவார்களோ என்ற அச்சம்தான்.

    ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை என்று அவர் மீது புகார் புராணம் பாடுவதை ஏற்க முடியாது. ஆளுனர் சட்டத்துறை, அரசு ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று இணைந்து இருப்பவை. அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. நிரந்தர சட்டத்துக்கு ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கவர்னர் மீது தவறான பார்வையை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

    ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தும் 6 மாதமாக அரசு ஆணை பிறப்பிக்காதது ஏன்? அதனால்தான் இன்று வரை ஆன்லைன் சூதாட்டம் தொடருகிறது.

    நிரந்தர தடை சட்டம் கொண்டுவரும்போது சட்டத்தில் இருக்கும் அனைத்து ஓட்டைகளும் அடைக்கப்பட வேண்டும்.

    ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்தாலும், பிராக்சி என்ற மென்பொருளை நிறுவினால் தடையை தாண்டி விளையாட முடியும். இந்த தொழில்நுட்ப பிரச்சினைகளையும் தடுக்க வேண்டும். இதையெல்லாம் சீர்படுத்த சட்டத்தை கடுமையாக்குவதை விட்டு விட்டு ஆளுனரிடம் போட்டி போடுவது ஏன்? அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தான் செய்த தவறுகளுக்கெல்லாம் ஆளுநர் மீது பழியை போட்டு தப்பிக்க பார்க்கிறார்கள்.

    கனிமொழி எம்.பி. மிகச்சிறந்த அரசியல்வாதி. நேரத்துக்கு ஏற்றாற்போல் வாயை மாத்தியும், வார்த்தையை மாற்றியும் பேசுவது ஆச்சரியமாக உள்ளது.

    இவரது தந்தை கவர்னரை பஞ்சாப் சிங்கம் என்று பாராட்டியது மறந்து போனதா? அவ்வளவு ஏன் சகோதரர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது சட்டமன்றத்தில் ஏற்பட்ட மோதலில் சட்டை கிழிந்ததும் ஓடிவந்தது கவர்னர் மாளிகைக்குதானே. வாரந்தோறும் பெட்டி பெட்டியாக ஊழல் புகார் களுடன் கவர்னரை போய் பார்க்கவில்லையா? கொட்டகை போட்டு கவர்னர் மாளிகை அருகில் அமர்ந்து இருந்தது போல் அல்லவா இருந்தார்.

    வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் தமிழகத்தில் 69 லட்சம் இணைப்புகள் கொடுக்கப்ட்டுள்ளதாக தமிழக அரசு மத்திய அரசிடம் கணக்கு காட்டி இருக்கிறது.

    நாங்கள் 3 மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டதில் வெளியே குழாய் பொருத்தப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் தண்ணீர் வரும் குழாயே இல்லை என்பதை பார்த்தோம். இந்த திட்டத்தில் பல நூறு கோடி ஊழல் நடந்துள்ளது. இதுபற்றி விசாரிக்கவும் கவர்னரிடம் கேட்டுக் கொண்டோம்.

    நாட்டின் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் துணை ராணுவ வீரர் குருமூர்த்தி யையும் அவரது குடும்பத்தினரையும் தேச விரோத சக்திகள் மிரட்டி இருக்கிறார்கள். உடனடியாக அந்த வீட்டுக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்கி இருப்பது பாராட்டதக்கது.

    அதேநேரம் மிரட்டல் விடுத்தவர்களை கண்டுபிடித்து இதுவரை உள்ளே தள்ளாதது ஏன்? எங்கள் கட்சி சார்பிலும் அந்த குடும்பத்தினரை சந்தித்து உறுதுணையாக இருப்போம் என்று கூறி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • துணை ராணுவப் படை வீரர் குருமூர்த்தி குடும்பத்திருக்கு பாதுகாப்பு கோரி சந்திப்பு.
    • தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாகவும் ஆளுநர் ரவியுடன் அண்ணாமலை பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் இன்று காலை 10:30 மணியளவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசி வருகிறார்.

    துணை ராணுவப் படை வீரர் குருமூர்த்தி குடும்பத்திருக்கு பாதுகாப்பு கோரி ஆளுநரை அண்ணாமலை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாகவும் ஆளுநர் ரவியுடன் அண்ணாமலை பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

    • திருவனந்தபுரத்தில் உள்ள சட்டசபை வளாகத்தில் லோக் ஆயுக்தா தின விழா நடந்தது.
    • மசோதாக்களில் கவர்னர்கள் கையெழுத்து போடாமல் இருக்க தகுந்த காரணங்கள் இருக்கும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆட்சி நடக்கிறது. இங்கு கவர்னராக ஆரிப் முகமது கான் உள்ளார். அவருக்கும் மாநில அரசுக்கும் பல்வேறு பிரச்சினைகளில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக இந்த கருத்து வேறுபாடு மூண்டது.

    இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள சட்டசபை வளாகத்தில் நேற்று லோக் ஆயுக்தா தின விழா நடந்தது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

    லோக் ஆயுக்தா சட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் அவசியமான ஒன்றாகும். இச்சட்டத்தை யாரும் பலவீனப்படுத்த கூடாது. எந்த வகையிலும் அதற்கு முயற்சிக்க கூடாது.

    இதனை மீறி லோக் ஆயுக்தா சட்டத்தை யாராவது பலவீனப்படுத்த முயன்றால் அதனை தடுக்க அம்மாநில கவர்னர்கள் தேவையான முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

    கவர்னர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்பு பதவி இல்லை. மசோதாக்களில் கவர்னர்கள் கையெழுத்து போடாமல் இருக்க தகுந்த காரணங்கள் இருக்கும். இதனை சுப்ரீம் கோர்ட்டும் தெளிவு படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விழாவில் கேரள சட்ட மந்திரி ராஜீவ் கலந்து கொண்டார். அவர் பேசும் போது, லோக் ஆயுக்தா அமைப்பை வலுப்படுத்த வேண்டும், என்றார்.

    • ஆளுநர் ரவி மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக தகவல்.
    • ஆளுநரை திரும்பப் பெறக்கோரி குடியரசுத் தலைவரிடம் திமுக மனு அளிக்க முடிவு.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். இன்று காலை 10.30 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்படுகிறார்.

    இந்நிலையில், ஆளுநர் ரவி மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாகவும் பின்னர் நாளை இரவு சென்னை திரும்புவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    ஆளுநரை திரும்பப் பெறக்கோரி குடியரசுத் தலைவரிடம் திமுக மனு அளிக்க உள்ள நிலையில் ஆளுநர் ரவி இன்று டெல்லி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • துணைவேந்தரை நீக்கம் செய்யும் இறுதி முடிவை மாநில அரசே மேற்கொள்ளும் வகையிலும் 2 மசோதாக்கள்.
    • மேற்கு வங்கத்திலும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தற்போது வரை பல்கலைக்கழகங்களில் வேந்தரான தமிழக கவர்னருக்கு இருந்து வருகிறது.

    தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தரை தேர்வு செய்ய தேவைப்படும் போது பல்கலைக்கழகங்களின் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்களில் தலா ஒருவர் மற்றும் கவர்னர் சார்பில் ஒரு பிரதிநிதி என 3 பேர் நியமிக்கப்படுவர்.

    இந்நிலையில் இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலும், தேவைப்பட்டால் துணைவேந்தரை நீக்கம் செய்யும் இறுதி முடிவை மாநில அரசே மேற்கொள்ளும் வகையிலும் 2 மசோதாக்கள் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.

    இதேபோல் மேற்கு வங்கத்திலும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கவர்னருக்குப் பதில், பல்கலைக்கழக வேந்தராக முதல்-அமைச்சரை நியமிப்பதற்கு யுஜிசி விதிகளில் இடம் இல்லை என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார்.

    • தமிழ் இலக்கிய அறிவை, தமிழகத்திற்கு அப்பால் கொண்டுச் செல்ல வேண்டும்.
    • சில மாநிலங்கள் தமிழ் மொழியை பள்ளிகளில் மூன்றாம் மொழியாக அறிமுகப்படுத்த ஆர்வம்.

    சென்னையிலுள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று பார்வையிட்டார். அந்நிறுவனத்தின் ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

    செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மேற்கொண்டு வரும் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து அதன் இயக்குநர் இரா. சந்திரசேகரன், காணொலி காட்சி மூலம் ஆளுருக்கு விளக்கினார். தொடர்ந்து அந்த நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு ஆய்வு வசதிகளை ஆளுநர் பார்வையிட்டார். 


    அப்போது பேசிய ஆளுநர், இந்தியாவின் அடையாளத்தை உருவாக்குவதில் தமிழின் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்கு பாராட்டு தெரிவித்தார். தமிழ் மொழியின் வளம், இந்திய நாகரீக வளர்ச்சியின் பிரதிபலிப்பாயிருக்கிறது என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.

    இந்தியாவின் மறுமலர்ச்சிக்கு, தமிழ் இலக்கியத்திலுள்ள அறிவு, தமிழ் கலாச்சார ஞானம் போன்றவற்றை, இந்தியர் அனைவரும் கற்றுக் கொள்ள வழிவகை செய்து, தமிழகத்திற்கு அப்பால் கொண்டுச் செல்ல வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். சில மாநிலங்கள் தங்கள் பள்ளிகளில் தமிழ் மொழியை மூன்றாம் மொழியாக அறிமுகப்படுத்த ஆர்வமாக உள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

    தமிழ் மொழி பெயர்ப்பாளர்களும் ஆய்வாளர்களும், பிற மாணவர்களுக்கு எளிய வழி தமிழ் கற்றல் அணுகு முறைகளை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அது ஆக்கப் பூர்வமாகவும் எளிதாகவும், தமிழ் அல்லாதவர்களைக் கவரும் வகையிலும் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    ×