search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செஸ் போட்டி"

    • முதியோர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கான செஸ் போட்டிகள் 2நாட்கள் நடக்கிறது.
    • மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் பங்குபெற்று திறமைகளை வெளிப்படுத்தலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சதுரங்க ஒலிம்பியாட் என்பது மனிதகுலத்தின் புத்தி கூர்மை வாய்ந்த சிறந்த படைப்புத் திறனை உடைய சிந்தனைகளின் சங்கமிக்கும் போட்டியாகும். மேலும் சதுரங்க வீரர்களும், சதுரங்க விளையாட்டின் மீது ஆர்வமுடையவர்களும் முக்கியமாக எதிர்பார்க்கும் நிகழ்வுகளில் ஒன்றாகும்.

    சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்த முதல் அதிகாரப்பூர்வ சதுரங்க ஒலிம்பியாட் போட்டி 1927-ம் ஆண்டு லண்டனில் நடந்தது. சதுரங்க ஒலிம்பியாட்ஸ் போட்டிகள் ஆண்டுதோறும் அவ்வப்போது நடைபெற்று வந்தது.

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், இதற்கு முன்னதாக 2018-ம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பியாட்டில் அதிகளவு பங்கேற்பான 176 நாடுகளின் பங்கேற்பை மிஞ்சும் வகையில் தற்போது 187 நாடுகளின் சாதனைப் பங்கேற்பை எதிர் நோக்கியுள்ளது. இந்த சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள், இந்திய சதுரங்க போட்டிகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தனித்தன்மை உடையதாக நடைபெற உள்ளது.

    இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முக்கியத்துவம் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்துத்துறைகள் ஒருங்கிணைந்து பல்வேறு போட்டிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், அனைத்துத் தரப்பு சதுரங்க விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன.மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, ஊரக வளர்ச்சி முகமை புதிய அலுவலக கூட்டரங்கில் நாளை (21-ந் தேதி) 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், நாளை மறுநாள் (22-ந்தேதி) மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் செஸ் போட்டிகள் நடைபெற உள்ளது.

    இந்த சதுரங்கப்போட்டியில் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் பங்குபெற்று திறமைகளை வெளிப்படுத்தலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாவட்ட வருவாய் அலுவலர் ெதாடங்கி வைத்தார்
    • மாணவர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த இடையம்பட்டி காந்தி தெருவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியா போட்டி சென்னையில் நடைபெறுவதையொட்டி மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்க கடந்த 15ஆம் தேதி சதுரங்கப் போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டி, ஓவியம், வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை திருப்பத்தூர் நகரப் பகுதியில் துவக்கி வைத்து தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் பள்ளி மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியானது வரும் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்க வரும் 25ஆம் தேதி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பரிசுகளை வழங்க உள்ளார். மேலும் சதுரங்க போட்டியில் வென்ற மாணவர்கள் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டு பின்னர் சென்னையில் நடைபெற உள்ள 44 வது செஸ் ஒலிம்பியா போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    இந்நிலையில் ஜோலார்பேட்டை நகராட்சி அளவிலான சதுரங்க போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி நேற்று குத்துவிளக்கு ஏற்றி சதுரங்க விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை துவக்கி வைத்தார்.

    அப்போது செஸ் விளையாட்டு குறித்த வரலாற்றையும், கல்வி மட்டுமே இருக்காமல் கைத்தொழில் ஒன்றை பழகிக்கொள்ள, இதற்காக பள்ளிகளில் நடத்தப்படும் பல்வேறு விதமான சதுரங்கம், தையல், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு போட்டியில் வென்று சாதனை படைக்க வேண்டும். மேலும் இவ்வாறு பல்வேறு போட்டிகளில் பங்கு பெற செய்வதால் மாணவர்களின் அவரவர்களின் திறமைகள் வெளியே கொண்டுவரப்படுகிறது. எனவே இந்திய தேசத்தையும் தமிழ்நாட்டையும் தலை நிமிரச் செய்ய பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சர்வதேச அளவில் நடைபெறும் போட்டியில் சாதனை படைத்து நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று பேசினார். இதனை அடுத்து போட்டியில் பங்கேற்ற பள்ளி மாணவர்களுடன் செஸ் போட்டியை விளையாடி போட்டியை தொடங்கி வைத்தார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியின் போது வருவாய் கோட்டாட்சியர் இலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) மோகனகுமரன், திமுக நகர கழக செயலாளர் ம.அன்பழகன், நகர மன்ற தலைவர் எம்.காவியா விக்டர், நகராட்சி ஆணையர் பழனி, நகர மன்ற துணைத் தலைவர் பெ.இந்திரா பெரியார்தாசன், நகராட்சி பொறியாளர் கோபு உட்பட 15 அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும், மாணவ மாணவியர்கள், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளுக்குள் செஸ் போட்டி இன்று நடந்தது.
    • போட்டியில் முதல் 3 இடங்கள் பிடிக்கும் மாணவ-மாணவிகள் அடுத்தடுத்த போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

    ஈரோடு:

    சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதையொட்டி தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவி களுக்கு இடையேயான செஸ் போட்டி நடத்த உத்தரவிடப்பட்டு இருந்தது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த போட்டியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் மாணவ-மாணவிகளுக்கு இடையே செஸ் போட்டி நடைபெறுகிறது.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளுக்குள் செஸ் போட்டி இன்று நடந்தது. இந்த போட்டி ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையும், 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையும், 11-12 வகுப்பு வரை என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    6 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் 120-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியை பள்ளியின் தலைமை ஆசிரியர் சுகந்தி பார்வை யிட்டார். உடற்கல்வி ஆசிரியர்கள் உடன் இருந்தனர். போட்டியில் முதல் 3 இடங்கள் பிடிக்கும் மாணவ-மாணவிகள் அடுத்தடுத்த போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.

    • சென்னை மாமல்லபுரத்தில் 44வது ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் வருகிற 28ந்தேதி தொடங்குகிறது.
    • 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ -மாணவிகளுக்கு செஸ் போட்டிகள் வருகிற13-ந் தேதி முதல் 15ந் தேதி வரை நடத்தப்படவுள்ளது.

    உடுமலை :

    சென்னை மாமல்லபுரத்தில் 44வது ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் வருகிற 28ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, அரசு மற்றும் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ -மாணவிகளுக்கு செஸ் போட்டிகள் வருகிற 13-ந்தேதி முதல் 15ந் தேதி வரை நடத்தப்படவுள்ளது.

    இதற்காக பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒரு நாள் செஸ் பயிற்சி வகுப்பு ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டது.அவ்வகையில் தற்போது உடுமலை கல்வி மாவட்ட பள்ளிகளில் 14, 17 மற்றும் 19 வயது பிரிவின் கீழ் மாணவர்களுக்கு செஸ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது:-

    6 முதல் 12ம் வகுப்பு வரையிலான வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் செஸ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.அதில் செஸ் போட்டிக்கான விதிகள், நுணுக்கங்கள், போட்டியில் பயன்படுத்தப்படும் வாக்கிய விபரங்கள் உள்ளிட்டவை பயிற்றுவிக்கப்படுகிறது.

    இதனைத்தொடர்ந்து 6 முதல் 8ம் வகுப்பு, 9 மற்றும் 10ம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்பு என 3 பிரிவுகளின் கீழ் பள்ளி அளவில் போட்டி நடத்தி தகுதி வாய்ந்த மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். பின்னர் வட்டார, மாவட்ட அளவில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள் மாநில அளவில் நடைபெறும் பயிற்சி முகாம் மற்றும் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வர். மேலும் அவர்கள் சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி வீரர்களுடன் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ராமநாபுரத்தில் மாநில அளவிலான செஸ் போட்டியில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
    • செஸ் போட்டி கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முதல்வர் முகம்மது செரீப் தலைமையில் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட சதுரங்கம் கழகம் சார்பில் 34-வது 9 வயதிற்குட்பட்டோர் பொது மற்றும் சிறுமியர்களுக்கான மாநில அளவிலான சாம்பியன்ஷிப் செஸ் போட்டி கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முதல்வர் முகம்மது செரீப் தலைமையில் நடந்தது.

    மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட செஸ் அசோசியேஷன் தலைவர் அப்பா மெடிக்கல் சுந்தரம் வரவேற்றார்.

    கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம், கல்லூரி துணை முதல்வர் செந்தில்குமார், கீழக்கரை துணை காவல் கண்காணிப்பாளர் சுபாஷ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, தமிழ்நாடு செஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளர் எப்ரோம், துணைத் தலைவர் தேவி உலக ராஜ், டைமண்ட் சீ புட்ஸ் எக்ஸ்போர்ட்டர்ஸ் அன்பழகன், ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் புரவலர்கள் சண்முக சுந்தரம், ராஜாராம்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    4 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ராமநாதபுரம் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து 200-க்கும் அதிகமான குழந்தைகள் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் செயலாளர் ரமேஷ் பாபு, கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சுரேஷ் குமார் ஆகியோர் செய்தனர்.

    ×