search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செஞ்சி"

    செஞ்சி அருகே மணல் கடத்தலை தடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அனந்தபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் மட்டப்பாறை கூட்ரோட்டில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று வேகமாக வந்தது. அந்த டிராக்டரை போலீசார் வழிமறித்தனர். இதை பார்த்த டிரைவர் டிராக்டரை நிறுத்தாமல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீது ஏற்றுவது போல் வேகமாக வந்தார்.

    அவருக்கு பின்னால் மணல் ஏற்றிக்கொண்டு வந்த மேலும் 2 டிராக்டர் டிரைவர்களும் அதேபோல் வந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் பெரியதச்சூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் (வயது 45), விஜயரங்கன் (25), வரிக்கல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் (38) ஆகிய 3 பேர் என்றும், மணல் கடத்தி வந்ததை தடுத்ததால் அவர்கள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்றதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மணல் கடத்தி வந்த 3 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர். #Tamilnews
    செஞ்சி அருகே மின்வாரிய ஆய்வாளர் வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தென்பாலை கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 39). இவர் தேவனூரில் உள்ள மின்சார வாரியத்தில் மின்பாதை ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான வயல்வெளியில் மாட்டு கொட்டகை அமைத்துள்ளார். நேற்று இரவு மாடு கன்று ஈன்றது. இதனால் முருகன் தனது வீட்டை பூட்டி விட்டு வயல்வெளிக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நள்ளிரவில் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பீரோவை உடைத்து அதில் இருந்த 11 பவுன் தங்க நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    இன்று காலை வயல்வெளியில் இருந்து வீட்டுக்கு முருகன் திரும்பி வந்தார். வீட்டின் கதவை உடைக்கப்பட்டது இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன. மர்ம மனிதர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    கொள்ளை சம்பவம் பற்றி சத்தியமங்கலம் போலீசுக்கு முருகன் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொள்ளையடித்த மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செஞ்சி அருகே கடித்து குதறிய காயங்களுடன் இறந்து கிடந்த 6 ஆடுகளை கொன்றது சிறுத்தையாக இருக்கலாம் என்று பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மலைப்பகுதியின் அடிவாரத்தில் இல்லோடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 2 ஆயிரம் பொதுமக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆடு-மாடுகளையும் வளர்த்து பராமரித்து வருகிறார்கள்.

    இல்லோடு கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 37). இவர் 11 ஆடுகளை வளர்த்து வந்தார். தினமும் மேய்ச்சலுக்கு சென்று வந்ததும், அந்த ஆடுகளை விவசாய நிலத்தில் உள்ள கொட்டகையில் அடைத்து வைப்பார்.

    நேற்று முன்தினம் மாலையில் 11 ஆடுகளையும் கொட்டகையில் அடைத்து விட்டு, சேகர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் சேகர் வந்து பார்த்தபோது 6 ஆடுகள் கழுத்து, வயிறு, கால் பகுதியில் விலங்கு கடித்து குதறியதற்கான காயங்களுடன் இறந்து கிடந்தன. மேலும் 2 ஆடுகள் காணாமல் போய் இருந்தன. இதைப்பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதற்கிடையே இந்த தகவல் காட்டுத்தீ போல அந்த கிராமம் முழுவதும் பரவியது. இதையடுத்து ஆண்களும்-பெண்களும் திரண்டு மலை அடிவாரப்பகுதிக்கு வந்தனர். இறந்து கிடந்த ஆடுகளை பார்த்தனர்.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் முத்துகுமார் மற்றும் வனச்சரகர் பாபு ஆகியோர் அங்கு விரைந்து வந்து இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர். மேலும் நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்ம விலங்குகளின் கால் தடத்தை ஆய்வு செய்தனர். வந்து சென்றது எந்த வகையை சேர்ந்த விலங்கின் கால்தடம் என்பதை ஆராய்ந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த மலைப் பகுதி அடிவாரத்தில் 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. வனச்சரகர்களும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்துக்குள் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. தற்போது கோடை காலம் என்பதாலும், மலைப்பகுதியில் உணவு இல்லாததாலும் விலங்குகள் மலை அடிவாரத்துக்கு வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துகின்றன. நள்ளிரவில் வந்தது சிறுத்தையாக இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. இந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த கிராம பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
    ×