search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுத்தை நடமாட்டம்"

    • ஆத்தூர் காமராஜர் அணைப்பகுதியில் சிறுத்தை ஒன்று அடிக்கடி நடமாடுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
    • வனசரக அலுவலர் தலைமையில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை பிடிப்பதற்காக சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே காமராஜர் அணை மேற்குபகுதியில் மேற்குதொடர்ச்சி மலை உள்ளது. இந்த மலைப்பகுதியில் யானை, சிறுத்தை, மான், காட்டுமாடு, காட்டு பன்றி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஆத்தூர் காமராஜர் அணைப்பகுதியில் சிறுத்தை ஒன்று அடிக்கடி நடமாடுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    இதைதொடர்ந்து சடையாண்டி கோவில் அருகே ஒரு மானை சிறுத்தை அடித்து கொன்றதாக தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி வனத்துறையினருக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

    இதுவரை மான், ஆடு, நாய் ஆகியவற்றை அடித்து கொன்று இழுத்துச்சென்றுள்ளதால் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டு அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

    இதனால் சிறுத்ைதயை விரட்டுவதற்காக இரவு நேரங்களில் வனத்துறையினர் வெடிபோட்டு வருகின்றனர். இந்த நிலையில் வனத்துறை சார்பில் , மாவட்ட வனஅலுவலர் பிரபு உத்தரவின்பேரில் கன்னிவாடி வனசரக அலுவலர் ஆறுமுகம் தலைமையில் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை பிடிப்பதற்காக சிசிடிவி காமிராக்கள் அதேபகுதிைய சேர்ந்த வேல்முருகன் என்பவரது தோட்டத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

    சில நாட்களாக இருந்துவரும் சிறுத்தைநடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    • தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரியில் காவல்துறை, வனத்துறை சோதனைச்சாவடிகள் அமைந்துள்ளன.
    • இரவு நேரங்களில் பண்ணாரி சோதனை சாவடி அருகே செல்லும் வாகன ஓட்டிகள் யாரும் எதற்காகவும் வழியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பண்ணாரி வனப்பகுதியில் புலி, சிறுத்தைகள், யானை, மான், கரடி, காட்டெருமை, உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பண்ணாரி வனப்பகுதியில் சாலையோரம் புள்ளிமான்கள் கூட்டம் அடிக்கடி உலா வருவது வழக்கம். அதனால் இரை தேடி சிறுத்தைகள் அவ்வப்போது இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை சர்வ சாதாரணமாக கடந்து செல்வதை பார்க்க முடியும்.

    தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரியில் காவல்துறை, வனத்துறை சோதனைச்சாவடிகள் அமைந்துள்ளன. இங்கு 24 மணி நேரமும் போலீசார் மற்றும் வனத்துறையினர் வாகன சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பட்டப்பகலில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது பண்ணாரி சோதனை சாவடி அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை மின்னல் வேகத்தில் ஓடியபடி சாலையை கடந்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா கட்சியில் பதிவாகி இருந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் பண்ணாரி போலீஸ் சோதனை சாவடி பின்புறம் உள்ள மரக்கிளையில் சிறுத்தை ஒன்று சர்வ சாதாரணமாக உட்கார்ந்து இருந்தது.

    இந்த காட்சியை கண்டதும் அங்கு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த மரக்கிளையில் அமர்ந்திருந்த சிறுத்தை பின்னர் சாவகாசமாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    இதனால் பண்ணாரி சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வனத்துறையினர் போலீசார் அச்சமடைந்துள்ளனர். சாலையில் சுற்றி திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இரவு நேரங்களில் பண்ணாரி சோதனை சாவடி அருகே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் செல்ல வேண்டும் என்றும், யாரும் எதற்காகவும் வழியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாநகர் பகுதிக்குள் சிறுத்தை புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது.
    • தற்போது மீண்டும் பல்லடம் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கரடிவாவி கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள நந்தவன தோட்டம் பகுதியில் சிறுத்தை நடமாடியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை பார்வையிட்டபோது அதில் சிறுத்தையின் உருவம் பதிவாகி இருந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நள்ளிரவு நந்தவன தோட்டம் பகுதி வழியாக ஒரு விலங்கு வேகமாக சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் நந்தவன குட்டைக்குள் சென்று விட்டது. சந்தேகம் அடைந்து சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்தோம். அதில் பதிவான உருவம் சிறுத்தை என்பது தெரிந்தது. குட்டை பகுதியில் சிறுத்தையின் காலடி தடங்கள் காணப்படுகிறது. இவற்றை வனத்துறையினர் ஆய்வு செய்து சிறுத்தை இருந்தால் அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். மேலும் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சிறுத்தை நடமாட்டம் இருந்தால் அதனை கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்துள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாநகர் பகுதிக்குள் சிறுத்தை புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. ஒரு வாரத்திற்கு பிறகு அதனை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். தற்போது மீண்டும் பல்லடம் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சிறுத்தை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பகல் நேரங்களிலும் சுற்றி திரிவதாக பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    ஊட்டி

    கோத்தகிரி அருகே அமைந்துள்ளது நெடுகுளா ஒசட்டி பகுதி. அங்கு கடந்த ஒரு வார காலமாக சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருகிறது. அதனை அப்பகுதியில் உள்ள ஒருவரது வீட்டின் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி உள்ளது.

    இந்த நெடுகுளா, ஒசட்டி, சுண்டட்டி பகுதியில் நான்குக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. 3000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு அரசு பள்ளி மற்றும் அரசு ஆஸ்பத்திரியும் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சிறுத்தை இரவு நேரம் மட்டும் இல்லாமல் பகல் நேரங்களிலும் சுற்றி திரிவதாக பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இது குறித்து பொதுமக்கள் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

    சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்கக் கோரிக்கையும் விடுத்துள்ளனர். இந்த நிலையில் இந்த பகுதி கட்டப்பெட்டு, கோத்தகிரி என 2 வனச்சராத்திற்கு உட்பட்டதால் யார் நடவடிக்கை எடுப்பது என குலம்பி உள்ளனர்.

    மேலும் இந்த பகுதியில் புதர் மண்டி கிடக்கிறது. சுத்தம் செய்யாமல் ஏராளமான உன்னிச் செடிகள் வளர்ந்து உள்ளது. இதில் உள்ள பழங்களை சாப்பிடுவதற்காக கரடிகள் அதிகமாக வருகிறது.

    எனவே இதனை ஊராட்சி நிர்வாகம் தலையிட்டு அவ்விடங்களை சுத்தம் செய்ய அறிவுறுத்தல் வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். இதனால் கரடி, சிறுத்தை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பவானிசாகர் அடுத்த புதுபீர்கடவு பீட் பகுதிக்குள் ஒரு சிறுத்தை மீண்டும் புகுந்தது.
    • இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பவானிசாகர், தாளவாடி, விளாமுண்டி, ஆசனூர், தலைமலை கேர்மாளம், கடம்பூர், பங்களாபுதூர் உள்பட 10 வன சரகங்கள் உள்ளன.

    இந்த வனப்பகுதிகளில் யானை, மான், சிறுத்தை, புலி, செந்நாய்கள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி விலங்குகள் வெளியேறி வருகிறது.

    மேலும் யானை மற்றும் சிறுத்தைகள் அருகே உள்ள கிராம பகுதிகளுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தும் கால்நடைகளை வேட்டையாடியும் வருகிறது.

    இதே போல் கடந்த மாதம் பவானிசாகர் அருகே புதுபீர் கடவு பீட் பகுதியில் மீண்டும் ஒரு சிறுத்தை வந்தது. மேலும் ஊருக்குள் புகுந்து அங்கு பட்டியில் உள்ள கால்நடைகளை வேட்டை யாடி வந்தது.

    இதையடுத்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கூண்டு வைத்து பிடித்தனர். தொடர்ந்து பிடிப்பட்ட சிறுத்தையை மங்களபட்டி அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

    இந்த நிலையில் பவானிசாகர் அடுத்த புதுபீர்கடவு பீட் பகுதிக்குள் ஒரு சிறுத்தை மீண்டும் புகுந்தது. தொடர்ந்து அந்த சிறுத்தை ஒரு வீட்டின் முன்பு தூங்கி கொண்டு இருந்த நாயை கவ்வி பிடித்து சென்று அருகே உள்ள மரக்கிளையில் அமர்ந்து கொன்று தின்றது.

    இதையடுத்து மீதியான இறைச்சியை மரக்கிளை யிலேயே விட்டு விட்டு சென்று விட்டது.

    இந்த நிலையில் மறுநாள் காலை வீட்டு உரிமையாளர் வெளியே வந்து பார்த்த போது நாயை சிறுத்தை அடித்து கொன்றது தெரிய வந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். அப்போது அந்த பகுதியில் மீண்டும் சிறுத்தை நட மாட்டம் இருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, புது பீர் கடவு பீட் பகுதியில் சிறுத்தை நட மாட்டம் உள்ளதால் பொது மக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என்றனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, இந்த பகுதி யில் ஏற்கனவே சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இதை வனத்துறையினர் பிடித்த னர். இதனால் நிம்மதியாக இருந்தோம்.

    ஆனால் மீண்டும் இந்த பகுதியில் சிறுத்தை சுற்றி திரிந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. எனவே வனத்துறையினர் இந்த பகுதியில் நடமாடும் சிறுத்தைைய கண்காணித்து கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என கோரி க்கை விடுத்துள்ளனர்.

    • சிறுத்தை நடமாட்டம் அறிந்ததால் அந்த பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர்.
    • சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    பொள்ளாச்சி :

    ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, ராஜநாகம், பல்வேறு வகையான மான்கள், பறவைகள் உள்ளன.

    இந்த வனவிலங்குகள் பொள்ளாச்சி வனச்சரகத்தை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளுக்குள் அவ்வப்போது வந்து செல்கின்றன. அவ்வாறு வரும் விலங்குகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தியும் வருகிறது. சில நேரங்களில் மனித, விலங்கு மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.

    பொள்ளாச்சி வனச்சரகம் அருகே ஆழியாறு அணை ஜூரோ பாயிண்ட் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான விவசாய தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளது.

    இங்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் பல பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றி திரிந்ததாகவும், அந்த சிறுத்தை நாய் ஒன்றை அடித்து கொன்று விட்டு வனத்திற்குள் செல்வதாகவும் அந்த பகுதி முழுவதும் தகவல் பரவியது. சிறுத்தை நடமாட்டம் அறிந்ததால் அந்த பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர்.

    இதுகுறித்து வனத்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தி விட்டு, அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததா என்பதை அறிய, வனத்துறை சார்பில் அந்த பகுதியில் தானியங்கி காமிராக்களை பொருத்தி ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும் அந்த பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    • ஊட்டியை ஒட்டி தொட்டபெட்டா, கவர்னர்சோலை, கேர்ன்ஹில் உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன.
    • இதனை அந்த வழியாக சென்றவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பினர். சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    ஊட்டி:

    தமிழகம் சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடியது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    சிறுத்தை புகுந்தது நீலகிரி மாவட்டம் ஊட்டியை ஒட்டி தொட்டபெட்டா, கவர்னர்சோலை, கேர்ன்ஹில் உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இங்கு கரடி, காட்டெருமை, சிறுத்தை, கடாமான் போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் குடியிருப்புகளுக்கு புகுந்து வருகின்றது. குறிப்பாக காட்டெருமை, கரடி நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஊட்டி தமிழகம் சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடியது. சாலையில் வாகனங்களின் முகப்பு வெளிச்சத்தை பார்த்த சிறுத்தை, சாலையோரத்தில் பதுங்கி நின்றது.

    இதனை அந்த வழியாக சென்றவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பினர். சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். பிடிக்க வேண்டும் இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழகம் சாலையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக முகாம் அலுவலக வளாகத்தில் சிறுத்தை நடமாடியது.

    அந்த சிறுத்தை நேற்று முன்தினமும் சாலையில் நடமாடி இருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் சிறுத்தை எந்த வழியாக அங்கிருந்து சென்றது என்பது தெரியவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ஊட்டியில் உலா வரும் சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

    மேலும் குடியிருப்பு பகுதியில் நடமாடுவதால், பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். ஊட்டியில் கரடி, காட்டெருமைகளை தொடர்ந்து சிறுத்தை நடமாட்டமும் அதிகரித்து உள்ளது

    • கடந்த 10 நாட்களுக்கு முன்பு குமணன்தொழு பகுதியில் விவசாயிக்கு சொந்தமான ஆடுகளை சிறுத்தை அடித்து கொன்றது.
    • தொடர்ந்து ஆடுகள் உயிரிழந்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகில் உள்ள மேகமலை அடிவார பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் உள்ளே புகுந்து ஆடுகள் மற்றும் கால்நடைகளை அடித்து கொன்று வருவது வாடிக்கையாக உள்ளது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு குமணன்தொழு பகுதியில் விவசாயிக்கு சொந்தமான ஆடுகளை சிறுத்தை அடித்து கொன்றது. நேற்று இரவு இதே பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரது 3 ஆடுகளை சிறுத்தை அடித்து கொன்றது.

    இன்று காலையில் இறந்து கிடந்த ஆடுகளை பார்த்து விவசாயி அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், இங்கு சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து ஆடுகள் உயிரிழந்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆடுகளை அடித்து கொல்வது சிறுத்தையா? அல்லது புலியா? எனவும் தெரியவில்லை. செந்நாய் அடித்து கொன்றிருந்தால் எலும்புகளை உண்ணாது. தற்போது இறந்து கிடக்கும் ஆடுகளின் எலும்புகளும் மாயமாகி இருப்பதால் சிறுத்தையாகத்தான் இருக்கும் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    எனவே இப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை வைத்து சிறுத்தையின் நடமாட்டத்தை அறிவதுடன் அதனை பிடித்து வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே சிறுத்தை அடித்து கொன்றதாக கூறப்படும் பகுதியில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×