search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சி அருகே ஆழியாரில் சிறுத்தை நடமாட்டம்
    X

    பொள்ளாச்சி அருகே ஆழியாரில் சிறுத்தை நடமாட்டம்

    • சிறுத்தை நடமாட்டம் அறிந்ததால் அந்த பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர்.
    • சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    பொள்ளாச்சி :

    ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்தில் புலி, சிறுத்தை, யானை, ராஜநாகம், பல்வேறு வகையான மான்கள், பறவைகள் உள்ளன.

    இந்த வனவிலங்குகள் பொள்ளாச்சி வனச்சரகத்தை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளுக்குள் அவ்வப்போது வந்து செல்கின்றன. அவ்வாறு வரும் விலங்குகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தியும் வருகிறது. சில நேரங்களில் மனித, விலங்கு மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.

    பொள்ளாச்சி வனச்சரகம் அருகே ஆழியாறு அணை ஜூரோ பாயிண்ட் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான விவசாய தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளது.

    இங்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் பல பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றி திரிந்ததாகவும், அந்த சிறுத்தை நாய் ஒன்றை அடித்து கொன்று விட்டு வனத்திற்குள் செல்வதாகவும் அந்த பகுதி முழுவதும் தகவல் பரவியது. சிறுத்தை நடமாட்டம் அறிந்ததால் அந்த பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர்.

    இதுகுறித்து வனத்துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தி விட்டு, அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததா என்பதை அறிய, வனத்துறை சார்பில் அந்த பகுதியில் தானியங்கி காமிராக்களை பொருத்தி ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். மேலும் அந்த பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    Next Story
    ×