search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா தடுப்பூசி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
    • கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழுடன் வர வேண்டும் என்று கடந்த வாரம் இங்கிலாந்து அரசு தெரிவித்து இருந்தது.

    லண்டன்:

    சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினமும் லட்சக் கணக்கானோர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதையடுத்து சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. அவர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழுடன் வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    சீன பயணிகளுக்கு இங்கிலாந்தும் கட்டுபாடு விதித்து இருந்தது. சீனாவில் இருந்து இங்கிலாந்து வரும் பயணிகள் புறப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்னர் பரிசோதனை எடுக்கப்பட்ட, அதில் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழுடன் வர வேண்டும் என்று கடந்த வாரம் இங்கிலாந்து அரசு தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில் சீனாவில் இருந்து இங்கிலாந்து வரும் பயணிகள், கொரோனா பரிசோதனை சான்றிதழுடன் வர வேண்டும் என்ற உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது.

    ஹீத்ரோ விமான நிலையத்தில் பயணிகள் தானாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும் கொரோனா உறுதியானாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் அல்லது சுயமாக தனிமைப்படுத்த உத்தரவிடப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சீன பயணிகளுக்கு இந்தியா உள்பட பல நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்து உள்ள நிலையில், அவர்கள் கொரோனா பரிசோதனை எடுக்க தேவையில்லை என்று இங்கிலாந்து அரசு கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலக நாடுகளில் தற்போது பல நாடுகள் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி உள்ளது.
    • தடுப்பூசி காரணமாக வயது முதிர்ந்தவர்களும் நோய் பரவலில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

    புதுடெல்லி:

    உலகின் சில நாடுகளில் மீண்டும் உருமாறிய கொரோனா பரவல் தொடங்கி உள்ளது.

    இதையடுத்து இந்தியாவில் உருமாறிய கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. இதன் ஒருபகுதியாக பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    இதுபோல இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கார்பெவாக்ஸ், கோவாக்ஸ் மற்றும் கோவாக்சின் என 3 வகை தடுப்பூசிகளை குழந்தைகளுக்கும் போடலாம் எனக்கூறப்பட்டுள்ளது.

    தற்போது கொரோனா பரவ தொடங்கியிருப்பதை கட்டுப்படுத்த இந்த தடுப்பூசிகளை குழந்தைகளுக்கும் போட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மருத்துவ பணிக்குழுவின் உறுப்பினர் டாக்டர் பிரமோத் ஜோக் கூறும்போது, இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவாமல் இருக்க இம்முறை குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

    5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது விவேகமான செயலாக இருக்கும்.

    12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் பக்க நோய்களான நீரிழிவு, சிறுநீரக கோளாறு உள்ளிட்ட நோய்கள் பாதிப்பு உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இதன்மூலம் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

    உலக நாடுகளில் தற்போது பல நாடுகள் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி உள்ளது. மேலும் தடுப்பூசி காரணமாக வயது முதிர்ந்தவர்களும் நோய் பரவலில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

    மேலும் பல நாடுகளில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • உலகளவில் 2-வது பெரிய பொருளாதார நாடாக சீனா தொடர்ந்து உள்ளது.
    • உலகளவில் உணவு நெருக்கடி ஏற்பட்ட போதும் சீனாவில் தானிய விளைச்சல் சிறப்பாக உள்ளது.

    பீஜிங்:

    புத்தாண்டு தினத்தையொட்டி சீன அதிபர் ஜின்பிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உலகளவில் 2-வது பெரிய பொருளாதார நாடாக சீனா தொடர்ந்து உள்ளது. பொருளாதாரம் சீராக வளர்ந்து வருகிறது. உலகளவில் உணவு நெருக்கடி ஏற்பட்ட போதும் சீனாவில் தானிய விளைச்சல் சிறப்பாக உள்ளது.

    புது வகை கொரோனா தொற்று மற்றும் கட்டுப்பாடு புதிய கட்டத்தில் உள்ளது. சீனா கடுமையான சவால்களை எதிர் கொண்டுள்ளது. அனைவரும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு நம்பிக்கை மற்றும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அப்போது தான் வெற்றி உறுதியாக கிடைக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    • மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
    • பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும்.

    சென்னை:

    சீனா, ஜப்பான், தைவான், தென்கொரியா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரானின் மரபணு மாற்றம் அடைந்த 'பி.எப்.7' வகை கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது.

    இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    இந்த நிலையில் சென்னையில் சில தினங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களில் பலர் சென்னையில் இயல்பாக சுற்றித் திரிவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த நிலையில் இன்று இரவு சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆண்டுகளுக்கு பிறகு புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் குவிவதால் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு பிறகு சென்னையில் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பொது இடங்களுக்கு செல்பவர்கள் அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையில் கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி சார்பில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது ஓட்டல்கள், கடற்கரைகள், வழிபாட்டு தலங்கள் உள்பட மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

    பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். அப்போது தான் மற்றவர்களிடம் இருந்து தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் கொரோனா பரவாமல் பாதுகாப்பாக இருக்க முடியும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு மாநகராட்சி பணியாளர்களும் பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள். அவர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா புது வகையான பி.எப். 7 நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது.
    • பிற நாடுகள் சீனாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிப்பதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது.

    நியூயார்க்:

    சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா புது வகையான பி.எப். 7 நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது.

    இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகிறது. கொரோனாவுக்கு பலர் இறந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த வித தகவல்களையும் சீனா தெரிவிக்கவில்லை.

    சீனாவில் கொரோனா உச்சம் அடைந்துள்ளதால் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகள் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    பிரான்ஸ், தென் கொரியா, இஸ்ரேல் போன்ற நாடுகள் சீனா பயணிகளுக்கு கொரோனா இல்லை என்ற சான்றிதழ் அவசியம் என அறிவித்து உள்ளன.

    தங்கள் நாட்டில் கொரோனோ கட்டுப்பாட்டில் உள்ளது. பிற நாடுகள் சீனாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிப்பதாக சீனா குற்றம் சாட்டி உள்ளது.

    ஆனால் சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு கவலை அளிப்பதாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் தெரிவித்தார்.

    இதன் தொடர்ச்சியாக உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் சீனா மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

    அப்போது சீனாவில் தற்போது நிலவும் கொரோனா சூழ்நிலை, எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    கொரோனாவை தடுக்க என்னனென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து ஆலோசித்தனர்.

    இந்த நிலையில் கொரோனா குறித்து வெளிப்படையான தகவல்களை பகிர வேண்டும் என்றும் சீனாவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி கூடுதல் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு மீண்டும் சீனாவை வலியுறுத்தி உள்ளது.

    • சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
    • உலக நாடுகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    நியூயார்க்:

    சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து உலக நாடுகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக அமெரிக்கா, சீனாவில் இருந்து வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. குறிப்பாக சீனாவில் இருந்து அமெரிக்கா வரும் பயணிகள் கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வரவேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

    • மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து பல கட்டங்களில் சோதிக்கப்பட்டுள்ளது.
    • எந்த பக்க விளைவுகளும் ஏற்படப்போவதில்லை.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய தடுப்பூசிகளில் ஒன்றான கோவேக்சினை தயாரித்து வழங்கும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தார், அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் கூட்டு சேர்ந்து 'பிபிவி 154' என்ற பெயரில் மூக்கு வழியே செலுத்துகிற கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளனர்.

    இந்த மூக்கு வழி தடுப்பு மருந்து, 'இன்கோவாக்' என்ற வணிகப்பெயருடன் சந்தைக்கு வருகிறது. இந்த தடுப்பு மருந்துக்கான அவசரகால பயன்பாட்டு அனுமதியை கடந்த நவம்பர் மாதம் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் வழங்கியது. அதைத் தொடர்ந்து இந்த தடுப்பு மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக (முன்எச்சரிக்கை டோஸ்) வழங்குவதற்கு கடந்த 23-ந்தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது.

    இந்த தடுப்பு மருந்து 3 கட்ட மருத்துவ பரிசோதனைகளில் சோதிக்கப்பட்டு, வெற்றி காணப்பட்டுள்ளது. இது பாதுகாப்பானது எனவும் தெரிய வந்துள்ளது.

    இந்த தடுப்பு மருந்து கோ-வின் தளத்தில் இப்போது கிடைக்கிறது. தனியார் ஆஸ்பத்திரிகளுக்கான இந்த தடுப்பு மருந்து ஒரு 'டோஸ்' விலை ரூ.800 ஆகும். அதே நேரத்தில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இந்த தடுப்பு மருந்து ரூ.325 என்ற விலையில் வினியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தடுப்பு மருந்து, பூஸ்டர் டோஸ் தடுப்பு மருந்தாக விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனத்தார் அறிவித்துள்ளனர்.

    இந்தநிலையில் மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை மீண்டும் செலுத்திக் கொள்ள வேண்டுமா என்ற கேள்விக்குறி மக்கள் மனதில் எழுந்தது. இது தொடர்பாக கொரோனா தடுப்புக்குழு தலைவர் டாக்டர் அரோரா விளக்கம் அளித்து உள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-

    மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை பூஸ்டராக பயன்படுத்தலாம் என்று சொல்லி உள்ளனர். ஆனால் ஏற்கனவே கொரோனாவை தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

    இதுவரை கொரோனாவுக்காக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மூக்கு வழியாக எடுத்துக் கொள்ளும் தடுப்பு மருந்தை பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போதைய சூழ்நிலையில் மீண்டும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமா என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

    ஆனால் 4-வது முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தும் திட்டம் எதுவும் இல்லை. ஏற்கனவே 2 தடவை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், 3-வது முறையாக பூஸ்டர் தடுப்பூசியும் பெற்று உள்ளனர். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி நன்றாகவே உள்ளது.

    எனவே 4-வது பூஸ்டர் தடுப்பூசிக்கு இப்போது எந்த அவசரமும் இல்லை. மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை மிக எளிதாக பயன்படுத்தலாம். இதற்கு முன்பு தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் உள்ளவர்கள் இதை பயன்படுத்திக் கொண்டால் நல்லது.

    மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து பல கட்டங்களில் சோதிக்கப்பட்டுள்ளது. அதனால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படப்போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சீனாவில் சர்வதேச பயணிகளை தனிமைப்படுத்த பிறப்பித்திருந்த உத்தரவையும் விலக்கிக்கொள்ளப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர்.
    • சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்புக்கும், முதியோர் பாதிப்புக்குள்ளாவதற்கும் கூறப்படுகிற காரணம், தடுப்பூசி செலுத்தாமைதான் என சொல்லப்படுகிறது.

    பீஜிங்:

    சீனாவில் 'ஜீரோ கோவிட் பாலிசி' என்ற பெயரில் விதிக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகளை ஜின்பிங் அரசு விலக்கிக்கொண்டுவிட்டதைத் தொடர்ந்து, அங்கு தொற்று பரவல் தீவிரமாகி உள்ளது. பல நகரங்களிலும் ஆஸ்பத்திரிகள், கொரோனா நோயாளிகளால் நிரம்புகின்றன. கொரோனா பலிகளும் அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது.

    இது உலக நாடுகளையெல்லாம் அதிர வைத்துள்ளது. பல நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன.

    ஆனால் சீனாவில் சர்வதேச பயணிகளை தனிமைப்படுத்த பிறப்பித்திருந்த உத்தரவையும் விலக்கிக்கொள்ளப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர். அடுத்த மாதம் 8-ந் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

    முதலில் அங்கு சர்வதேச பயணிகள் 2 வாரங்கள், அரசு முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவது கட்டாயம் என்ற நிலை இருந்து வந்தது. பின்னர் இது 5 நாட்களாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் இனி தனிமைப்படுத்தப்படுவது ரத்தாகிறது.

    சீனா தனது எல்லைகளையும் திறந்து விடுகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    சீனாவில் கொரோனா மேலாண்மையை 'ஏ' வகுப்பில் இருந்து 'பி' வகுப்புக்கு தரம் குறைக்கின்றனர். அந்த வகையில் கொரோனாவை டெங்கு காய்ச்சல் அளவுக்கு தரம் இறக்குகின்றனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

    சர்வதேச பயணிகள், சீனா வந்ததும் நியூக்ளிக் அமில பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடும் ஜனவரி 8-ந் தேதி முதல் ரத்தாகிறது. அவர்கள் தங்கள் சீன பயணத்துக்கு 2 நாட்கள் முன்னதாக ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். பாதிப்பு உறுதியானால் பயணத்தை ஒத்தி போடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இது பற்றி சீன அதிகாரிகள் கூறும்போது, "உலக அளவில் பெருமளவில் இறப்புகளை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் போன்று ஒமைக்கரான் வைரஸ் ஆபத்தானது அல்ல" என கூறுகின்றனர்.

    சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு விவரத்தை வெளியிடுவதையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நிறுத்திவிட்டனர்.

    சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்புக்கும், முதியோர் பாதிப்புக்குள்ளாவதற்கும் கூறப்படுகிற காரணம், தடுப்பூசி செலுத்தாமைதான் என சொல்லப்படுகிறது.

    ஆனால் அங்கே தற்போது அதிகாரிகள் முதியோர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக வீடு வீடாக செல்கிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கிறார்கள். ஆனால் தடுப்பூசியா, வேண்டவே வேண்டாம் என்று முதியோர் ஓடுகிற நிலை உள்ளது. தடுப்பூசி போடுவதால் ஏற்படுகிற கடும் காய்ச்சல், ரத்தக்கட்டிகள் மற்றும் பிற பக்கவிளைவுகளால்தான் தடுப்பூசியைக் கண்டு முதியவர்கள் ஓடுகிறார்கள்.

    இதுபற்றி 64 வயதான லி லியான்ஷெங் என்பவர் கூறியதாவது:-

    கொரோனா தடுப்பூசியினால் ஏற்படுகிற பக்க விளைவுகள் குறித்து கேள்விப்படுகிற முதியோர்தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவதில்லை.

    என் நண்பர் ஒருவருக்கு 55 வயதாகிறது. அவர் தடுப்பூசி போட்டவுடன் காய்ச்சல் வந்தது. ரத்தக்கட்டிகள் ஏற்பட்டன. இதன் காரணமாக எனது நண்பர் இன்னொரு டோஸ் தடுப்பூசி போட விரும்பவில்லை. வைரஸ் உருமாறிக்கொண்டே இருக்கிறது. அப்படி இருக்கையில், நாம் போட்டுக்கொள்கிற தடுப்பூசிகள் எந்த அளவு பலன் அளிக்கும் என்பதை நாம் எப்படி தெரிந்துகொள்ள முடியும்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால் ஷாங்காய் புடன் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியை சேர்ந்த ஜியாங் ஷிபோ கூறுகையில், "முதியோரின் குடும்பத்தினர், உறவினர்கள் அவர்களுக்கு தொற்று என்பது ஆபத்தானது, அதனால் மரணமும் நேரிடக்கூடும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்" என தெரிவித்தார்.

    • சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.
    • அனைத்து சீன பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ஜப்பான் அரசு கூறியது.

    டோக்கியோ:

    சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில், சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பிரதமர் புமியோ கிஷிடா கூறுகையில், வரும் வெள்ளிக்கிழமை முதல் சீனாவில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அறிகுறி அல்லது கொரோனா உறுதியானால் அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார் என தெரிவித்தார்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தால் கொரோனா தொற்று அதிகரிப்பதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.

    • மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து விலையை பாரத் பயோடெக் நிறுவனம் நிர்ணயித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • விலையை மத்திய அரசும் அங்கீகரித்து விட்டதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

    2 தவணைகளாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. பின்னர் பூஸ்டர் அமல்படுத்தப்பட்டது.

    இதற்கிடையே மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தை கோவேக்சினை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியது. அதன் பரிசோதனை தரவுகளை மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி கேட்டது.

    இந்த தரவுகளை மத்திய அரசு ஆய்வு செய்து மூக்கு வழியே செலுத்தப்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்துக்கு கடந்த 23-ந்தேதி அனுமதி அளிக்கப்பட்டது.

    பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    முதல் கட்டமாக தனியார் மருத்துவமனைகளில் மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என்றும், பூஸ்டராக பயன்படுத்தப்பட உள்ள இந்த தடுப்பு மருந்து கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து விலையை பாரத் பயோடெக் நிறுவனம் நிர்ணயித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விலையை மத்திய அரசும் அங்கீகரித்து விட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    அதன்படி ஒரு டோசின் விலை ரூ.800 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதோடு 5 சதவீத ஜி.எஸ்.டி.வரியும், மருத்துவமனை கட்டணமும் உண்டு. இதனால் அனைத்தையும் சேர்த்து ரூ.1000 ஒரு டோசுக்கு செலவாகும்.

    ஒரு டோசில் 4 சொட்டுகள் கிடைக்கும். ஒருவருக்கு 2 சொட்டுகள் செலுத்தப்படும். இந்த தடுப்பு மருந்தை கோவேக்சின், கோவிஷீல்டு செலுத்தி கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியாக எடுத்துக்கொள்ளலாம்.

    18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மூக்கு வழியாக செலுத்தப்படும் இந்த தடுப்பு மருந்து தனியார் மருத்துவமனைகளில் ஜனவரி 26-ந்தேதிக்குள் கிடைக்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

    • கொரோனா பரவலை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
    • அறிகுறி அல்லது கொரோனா உறுதியானால் அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார் என்றார்.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சீனா உள்பட 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறும்போது, "சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அறிகுறி அல்லது கொரோனா உறுதியானால் அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார்" என்றார்.

    • சீனா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது.
    • மத்திய அரசும், மாநில அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    புதுடெல்லி:

    சீனா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது.

    சீனாவில் பரவி வரும் பி.எப்.7, பி.எப். 12 என்ற ஒமைக்ரான் புதிய வகை கொரோனா குஜராத், ஒடிசா மாநிலங்களில் 4 பேருக்கு கண்டறியப்பட்டு உள்ளது.

    இதையடுத்து மத்திய அரசும், மாநில அரசுகளும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து மத்திய மந்திரிகள், அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். நாட்டில் கொரோனா தொற்று பரவல் சூழல் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. கொரோனா பரவல் கண்காணிப்பை தீவிரப் படுத்துமாறு அதிகாரிகளை மோடி அறிவுறுத்தினார்.

    இதுகுறித்து மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பாராளுமன்றத்தில் பேசும் போது, "வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். எனும் கொரோனா பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளதாகவும், தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

    இந்த நிலையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சுகாதார துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதார துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்தினார்.

    பிற்பகல் 3 மணியளவில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த ஆலோசனயில் பங்கேற்கிறார். கன்னியாகுமரியில் இருக்கும் அவர் காணொலி கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    ×