search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்பகரேஸ்வரர் கோவில்"

    • கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • பாதுகாப்பு பணியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    திருவிடைமருதூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலாகும். இங்கு சரபேஸ்வரருக்கு தனி சன்னதியில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக யாகசாலை பூஜைக்காக கோவில் வளாகத்தில் 51 குண்டங்கள் அமைக்கப்பட்டு தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கடந்த மாதம் (ஜனவரி) 29-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. யாகசாலையில் புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன.

    தொடர்ந்து, இன்று அதிகாலை 8-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, மகா பூர்ணாஹூதி நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் கோபுரத்தை வந்தடைந்தது.

    பின்னர், தருமபுரம் ஆதீனம் 27-வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்தர் பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் மதுரை ஆதீனம், செங்கோல் ஆதீனம், சூரியனார் கோயில் ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட சைவ ஆதீனங்க குருமகாசந்நிதானங்கள், ஆதீன தம்பிரான் சுவாமிகள் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    ×