search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரக்கம்"

    • தேவாலயங்கள் மனிதர்களுக்கும் ஆறுதலை தரக்கூடிய இடமாக இருக்கிறது.
    • இயேசு ஆலயத்தை தன் தந்தையின் இல்லமாக பார்த்தார்.

    தேவாலயம் அல்லது வழிபாட்டுக்கூடம் என்பது எல்லா மனிதர்களுக்கும் ஆறுதலை தரக்கூடிய இடமாக இருக்கிறது. மனதில் உள்ள கவலைகளை, கண்ணீரை கொட்டித் தீர்க்கிற இடமாகவும், விடை தெரியா கேள்விகளுக்கு விடை தருகிற இடமாகவும், வழி தெரியா வாழ்க்கைக்கு வழிகாட்டுகிற இடமாகவும் இருக்கிறது.

    ஆலயத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்புகிற போது ஒரு இனம் புரியாத அமைதி மனதில் தங்கி விடுகிறது. வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நடந்திட ஆற்றல் கிடைக்கிறது. அத்தகைய சிறப்புமிகு ஆலயத்தை யூதர்கள் எப்படி பார்த்தார்கள்? இயேசு எப்படி பார்த்தார்? நாம் எப்படி பார்க்க வேண்டும்? என்கிற மூன்று நிலைகளில் யோவான் நற்செய்தி 2-வது அதிகாரம் 13 முதல் 22 வரை உள்ள இறைவார்த்தை பகுதியை தியானித்து பார்ப்போம்...! அந்த பகுதி பின்வருமாறு:

    யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார். கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும், அங்கே உட்கார்ந்து இருந்து நாணயம் மாற்றுவோரையும் கண்டார். அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி அவர்கள் எல்லோரையும் கோவிலில் இருந்து துரத்தினார். ஆடு, மாடுகளையும் விரட்டினார். நாணயம் மாற்றுவோரின் சில்லரைக் காசுகளையும் அவை இருந்த மேசைகளையும் கவிழ்த்து போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், இவற்றை இங்கிருந்து எடுத்துச்செல்லுங்கள். என் தந்தையின் இல்லத்தை சந்தை ஆக்காதீர்கள்' என்று கூறினார்.

    யூதர்கள் அவரைப் பார்த்து, இவற்றை எல்லாம் செய்வதற்கு உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு இயேசு மறுமொழியாக, `இக்கோவிலை இடித்து விடுங்கள் நான் மூன்று நாளில் கட்டிவிடுவேன்' என்றார்.

    அப்போது யூதர்கள், `இந்த கோவிலை கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே நீர் இதை மூன்றே நாளில் எழுப்பிவிடுவீரோ' என்று கேட்டார்கள். ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலை பற்றியே பேசினார் என்பது அவர்களுக்கு புரியவில்லை. (யோவான் 2:13-22)

    மேலே பார்த்த நற்செய்தி பகுதியில், இயேசு கோபப்படுவதை பார்க்கிறோம். அமைதியையும், கனிவையும், தனது வாழ்நாள் முழுவதும் வெளிப்படுத்திய இயேசு கோபப்படுகிறாறே அது நியாயமா என்ற கேள்வி நம்மில் பலருக்கு தோன்றலாம். ஆனால் இயேசு எதற்காக கோபப்பட்டார் என்பதை சிந்தித்து பார்க்கும் போது நமக்கு புரியும்.

    இயேசு ஆலயத்தை தன் தந்தையின் இல்லமாக பார்த்தார். எனவே தான் அதனை வியாபாரக்கூடமாக பார்த்த யூதர்கள் மீது கோபம் கொண்டார். அதனால் தான் அவரது கோபம் சாதாரணமாய் இல்லை. கடுமையாக இருந்தது. சாட்டையால் அவர்களை அடித்து விரட்டினார். அவர்களின் பொருட்களை கவிழ்த்துப் போடுகிறார்.

    இதன் மூலம் இயேசு தன் தந்தையின் இல்லமாகிய தேவாலயத்திற்கு எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது தெரிகிறது. இதுமட்டுமன்று நம் கண் எதிரே நடக்கும் அநீதியை கண்டு அமைதியாக இருக்காமல் குரல் கொடுக்க வேண்டும் என்கிற செய்தியையும் இயேசு நமக்கு தருகிறார். இயேசுவின் சாட்டையடி யூதர்களுக்கு மட்டுமல்ல மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி, ஆலயங்களை வியாபாரக்கூடமாய் மாற்றும் ஒவ்வொருவருக்குமே பொருந்தும்.

    இரண்டாவதாக இந்த பகுதியில் நாம் கவனிக்க வேண்டியது யோவான்: 2:22. இதில் இயேசு, 'இந்தக் கோவிலை இடித்து விடுங்கள், நான் மூன்று நாளில் கட்டிவிடுவேன்' என்று கூறுகிறார். இதில் அவர் கோவிலாகிய கட்டிடத்தை குறிப்பிடவில்லை. மாறாக தம் உடலாகிய கோவில் பற்றியே குறிப்பிடுகிறார். இதன் வழியாக அவர் இறந்து மூன்றாம் நாள் உயிர்தெழுவதையே, `மூன்று நாளில் கட்டி விடுவேன்' என்று குறிப்பிடுகிறார்.

    ஆக, தனது உடலை இயேசு கோவிலாகவே பார்த்தார். தன்னில் இருக்கும் இறைவனை நற்செயல்களால் வெளிப்படுத்தி நடமாடும் ஆலயமாகவே வாழ்ந்தார். அவ்வாறு வாழ நமக்கும் அழைப்பு விடுக்கிறார். இதனையே திருத்தூதர் பவுல் கொரிந்திய மக்களுக்கு எழுதிய கடிதத்தில், நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும், கடவுளின் ஆவியார் உங்களுள் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்கு தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது. நீங்களே அக்கோவில், என்று கூறுகிறார் (1 கொரிந்தியர் 3:16).

    இதன் மூலம் நமது உடல் இறைவனின் ஆலயம் என்பது தெளிவாக தெரிகிறது. அந்த உடலை நாம் எப்படி பார்க்க வேண்டும் என்பதும் புரிகிறது. ஆகவே நாம் நமது உடலில் இறைவன் தங்கியிருக்கிறார் என்பதை நம்புகிறோமா? அப்படி நம்பினால், நம்மில் இருக்கும் இறைவனை நமது நல்ல செயல்களால் நமக்கு அடுத்து இருப்பவருக்கு வெளிப்படுத்தி இருக்கிறோமா? சிந்திப்போம்.

    அன்பு, அமைதி, இரக்கம், மன்னிப்பு, சமத்துவம் ஆகிய இறைத்தன்மைகளை அனைவருக்கும் வெளிப்படுத்துவோம். நடமாடும் ஆலயங்களாக வாழ்வோம்.

    ×